உள்ளூர் செய்திகள்

தெரிந்த பாரதம்! தெரியாத பாத்திரம்! - 2 (12)

தன் எதிரில் வேடுவன் வடிவில் இருப்பது பரமன் எனத் தெரியாமல் கோபத்தோடு பேசினான் அர்ஜுனன்.''இது என்னால் வீழ்ந்த பன்றி. இதைக் கொன்றது நான் தான் என்று நீ நினைத்தால் நினைத்து விட்டுப் போ. ஒரு பன்றிக்காக உன்னோடு நான் மோத விரும்பவில்லை. என் வரையில் நீ சாதாரண வேடன். நான் அப்படியல்ல....'' - அர்ஜுனன் பேச்சில் அரசகுமாரன் என்னும் செருக்கும் வெளிப்பட்டது. அதை வேடுவப் பரமனும் ரசித்தார். ''நீ மட்டுமே மாவீரன். நானெல்லாம் சாமான்யன் என்கிறாயா? '' என்று அவனைத் தூண்டத் தொடங்கினார்.''நான் அப்படிப் பேசவில்லை. என்னை நீ தான் பேச வைக்கிறாய்''''எதற்கு வீண் பேச்சு! நீயும், நானும் மோதிப் பார்த்து விடுவோமா?'' - என்று பரமன் கேட்டார்.''என்ன தைரியம் உனக்கு... வம்புக்கு வந்து வாயாடியதோடு, என்னையே மோதலுக்கும் அழைக்கிறாயா? '' ''இப்போதாவது தெரிந்து கொள்.... நான் தைரியசாலி மட்டுமல்ல... பராக்கிரமசாலியும் கூட...'' ''போதும் நிறுத்து.... முடிவாக என்ன சொல்லுகிறாய்?'' ''நீ வீரன் என்றால் என்னோடு மோது. என் அஸ்திரத்திற்கு பதில் சொல்...'' ''அஸ்திரமா... உன்னிடமா?'' - அர்ஜுனன் மிக ஏளனத்தோடு கேட்டான். மிருக வேட்டைக்காரர்களிடம் அம்புகள் மட்டுமே இருக்கும். அம்புகள் அஸ்திரங்களாகாது... அஸ்திரத்திற்கு மந்திர சக்தி உண்டு. ஒரு மலையையே அவற்றால் தகர்க்க முடியும். அந்த எண்ணம் அர்ஜுனனிடம்...சிவபெருமானும் அர்ஜுனனின் வீராவேசத்தை ரசித்தார். ''என்னிடம் இருப்பது சாதாரண அம்புகள் என்பது உன் எண்ணமா? பாதகமில்லை... என் அம்புக்கு நீ பதில் சொல் போதும்...''அர்ஜுனன் பொறுமையிழந்தான்.''இனி உன்னோடு பேச்சில்லை. உன்னை வீழ்த்தி விட்டே மறுவேலை'' என்றான். அது வரை மவுனமாக இருந்த வேடுவச்சியாகிய பார்வதி,''பாவம் இந்த பாலகனை விட்டு விடுங்கள் ....'' என்றாள். அது அர்ஜுனனை மேலும் கோபப்படுத்தியது.''இனி ஒரு வார்த்தை கூட பேசப் போவதில்லை. என் பாணங்களே இனி பேசும்.'' என்று சொல்லி அக்னிதேவன் வழங்கிய வற்றாத அம்பறாத்தூளியில் இருந்து பாணம் எடுத்து தொடுத்தான். பரமனும் பதிலுக்கு பாணம் தொடுத்து தடுத்தார். அதுவே அர்ஜுனனுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.அதன் பின் பாணங்களின் சக்தியும் கூடிக் கொண்டே போனது. எல்லாம் ஒடிந்து விழத் தொடங்கின. ஒரு பாலகனிடம் விளையாடும் உணர்வோடு தான், பரமனும் எதிர் கொண்டார்.ஒரு கட்டத்தில் அக்னியாஸ்திரத்தையே தொடுத்தான். ஆனால், அது பரமனைச் சுற்றி வந்து விழுந்தது. 'எதிரில் நிற்பவன் வேடுவன் அல்ல' என்று எண்ணம் அர்ஜுனனுக்கு உண்டானது. அக்னி அளித்த அம்பறாத்தூளியும் வற்றிப் போனது.வேடுவச் சிவனும் சிரிக்கத் தொடங்கினார். அர்ஜுனனுக்குப் புரிந்து விட்டது. அவனுக்கு கோபம் அடங்கிப் போனது. இந்த வேடுவனை வீரத்தால் கட்டுப்படுத்த முடியாது என்ற ஞானம் எழுந்தது. கூர்ந்து பார்த்தான். வேடுவனாகிய பரமனும், வேடுவச்சியாகிய பார்வதியும் நெருக்கமாக நின்றனர். அந்த நொடியே மனக்கண்ணில் பார்வதி பரமேஸ்வரராகத் தெரிந்தது. கைகூப்பி வணங்கியவன் கண்ணீரும் பெருக்கினான்.''சர்வேசா! இது என்ன சோதனை....எதற்காக இந்த நாடகம்? என்னைப் பெரும்பாவியாக்க எண்ணலாமா?'' என்றான்.''அர்ஜுனா! நீ செய்த தவம் என்னை வரவழைத்தது. அஸ்திரங்கள் வேண்டிய உன் தவத்தின் நோக்கமே தற்காப்பு தான். தற்காப்பு என்று வரும்போதே நம்மைக் காப்பவன் இறைவன் என்கிற எண்ணம் பின் செல்ல, 'நான்' என்ற எண்ணம் முன் வந்து விடுகிறது. அசுரர்களிடம் இந்த குணம் அதிகம். உன் வீரம் எப்படி என்று பார்ப்பதோடு, உனக்கு இதை உணர்த்தவுமே இத்திருவிளையாடல் புரிந்தேன்'' என்றார் ஈசன்.''சர்வேசா... என்னை மன்னித்து விடுங்கள். எதனாலும் என் வீரம் சிறுமைப்படுவதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை,''''ஒரு க்ஷத்திரியனுக்கு இந்த உணர்வு தேவை. அதையும் கடந்து நீ பணிந்ததில் தான் சிறப்பு இருக்கிறது. 'பாசுபதம்' என்னும் அஸ்திரத்தை தருகிறேன். இதை தரிப்பது, விடுப்பது, மீட்பது என்னும் மூன்றுக்கும் பெரும் சக்தி வேண்டும். உன்னிடம் அது இருக்கிறது. இச்சக்தி இந்திரன், எமன், குபேரன், வருணன், வாயு, அக்னி ஆகியோரிடம் கூட கிடையாது. அரிதான இந்த அஸ்திரத்தை சாமான்ய மனிதர்களிடம் பயன்படுத்தி விடாதே. இது மனம், வாக்கு, வில் என்னும் மூன்றும் சார்ந்தது. 'நினைத்து, பேசி, தொடுத்து' என்னும் விதத்தில் இயங்குவது இது....'' என்று கூறிய பரமன் அர்ஜுனனின் சிரசைத் தொட்டு ஆசீர்வதித்தார். அவன் காதில் பாசுபத அஸ்திர மந்திரத்தை உபதேசித்தார். அந்த நொடியில் பூலோகம் எங்கும் குலுங்கியது போல அதிர்ச்சி ஏற்பட்டது. ஹஸ்தினாபுரத்தில் உறக்கத்தில் இருந்த திருதராஷ்டிரன் முதல் துரியோதனன் வரை சகலரும் எழுந்து கொண்டனர். 'உலகமே எதன் பொருட்டு நடுங்கியது?' என்று அனைவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.மந்திரோபதேசம் முடிந்த நிலையில், ''இந்த அஸ்திரத்தைப் பெற்றவனுக்கு சொர்க்கத்தின் கதவுகள் திறக்கும். இந்திரன் அவனை உப இந்திரனாக்குவான். உன் வரையில் இதெல்லாம் நிகழும்,'' - என்ற சிவன் பார்வதியோடு அந்தர்யாமியாகிட (மறைந்து விட), அவரின் வாக்குப்படியே அடுத்தடுத்த விஷயங்களும் நடக்கத் தொடங்கின. வரிசையாக குபேரன், வாயு, யமன், வருணன் என்று தேவாதிதேவர்கள் அர்ஜுனன் முன் பிரசன்னமாகி, அவன் கேளாமலேயே தங்களின் அஸ்திரங்களை அவனுக்கு அளித்தனர். இறுதியாக இந்திரனும், இந்திராணியும் வந்தனர். அவர்கள் ஐராவதம் என்னும் வெள்ளையானை மேல் அமர்ந்து, வெண்கொற்றக்குடை பிடித்து எழிலுற வந்தனர். அர்ஜுனன் தனது தவம் இப்படி தேவாதிதேவர்களைக் காண வைத்து, அவர்களாக அஸ்திரங்களை அள்ளித் தர வைக்கும் என்று கனவிலும் எண்ணவில்லை. இந்திரன் அர்ஜுனனை வாழ்த்தினான். ''என் விருப்பப்படியே மகாதேவரை நினைந்து தவம் செய்து நீ பெரும் அஸ்திரத்தை பரிசாகப் பெற்று விட்டாய். நானும் என் வாக்கைக் காப்பாற்ற வேண்டும். என் வசமுள்ள அஸ்திரங்கள் அவ்வளவையும் நான் உனக்கு தருவேன். அதன் பொருட்டு எனது அமரலோகத்தில் இருந்து உன்னை அழைத்துச் செல்ல 'மாதலி' என்பவன் வருவான். அவனுடன் நீ ரதத்தில் வந்து சேர். அங்கே உன்னை உரிய முறையில் கவுரவிப்பேன்,'' என்றான். அதேபோல, அன்னபட்சி போன்ற ரதத்துடன் மாதலி வந்திட, அர்ஜுனனும் அதில் ஏறிக் கொண்டு அமரலோகத்தில் புறப்பட்டான். வழியில் நட்சத்திர மண்டலங்கள் கண்ணில் பட்டன. மாதலி அவற்றைக் காட்டி விளக்கம் அளிக்கத் தொடங்கினான்.''அர்ஜுனரே! இங்கே நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் பூமியில் வாழ்ந்த நாளில் பெரும்புண்ணியச் செயல்களைச் செய்தவர்கள். இவர்களை நித்யசூரிகள் என்று சொல்வார்கள். இவர்களே விண்ணில் இருந்தபடியே மண்ணில் மகான்களாகவும், சாதுக்களாகவும் போற்றப்படுகின்றனர். இவர்கள் எண்ணிய மாத்திரத்தில் இவர்களோடு தொடர்பு உண்டாகி அருளாசிகள் நம்மை வந்தடைகின்றன.இதுபோக, சொர்க்கத்தில் இன்புறுபவர்கள் மீண்டும் பிறக்கும் வண்ணம் கர்மவினை செய்தவர்கள், நரகத்தில் வேதனைப்படத் தக்கவர்கள், மனிதர் அல்லாமல் இன்னுயிர்களாக பிறப்பெடுக்கப் போகிறவர்கள் என்று பல பிரிவுகள் உண்டு. அவர்களையும் இப்போது நீர் காணலாம்'' - என்றிட அவர்கள் அர்ஜுனனின் கண்களில் பட்டனர்.அர்ஜுனன் இந்த அரியகாட்சியைக் கண்டு, ''இன்றே நான் மிகத் தெளிந்தேன். இறந்த பின் உயிர்கள் என்னாகிறது என்னும் கேள்விக்கு விடை கிட்டி விட்டது. எத்தனை அற்புதமான இயக்கம் இது'' - என்று வியந்தான். இந்திர சபையும் வந்தது. இந்திரன் அர்ஜுனனை அழைத்துச் செல்ல தேவலோக கன்னியர் மலர் தூவி வரவேற்றனர். வழியில் விஸ்வதேவர்கள், அஸ்வினி தேவர்கள், ஆதித்தியர்கள், வசுக்கள், ருத்திரர்கள், பிரம்மரிஷிகள், ராஜரிஷிகள், திலீபன் என்னும் அரசன், தும்புரு, நாரதர், 'ஹாஹா' 'ஹீஹீ' என்னும் இரு கந்தர்வர்கள் என்று எல்லோரும் வணங்கி வரவேற்றனர்.- தொடரும்இந்திரா சவுந்தர்ராஜன்