தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம்-2 (13)
அர்ஜுனனை இந்திரன் தன் அரியணை வரை அழைத்துச் சென்று அமர்த்தினான். இப்படி இந்திரன் அருகில் ஒரு வீரன் அமர்வது அபூர்வமானது. இந்திரனுக்குச் சமமான அவனை 'உபேந்திரன்' என்பர்.அர்ஜுனன் அன்று உபேந்திரன் ஆனான். அவன் புரிந்த தவம் அந்த நிலைக்கு உயர்த்தியது. அரியணையில் அவர்களைக் கண்டவர்கள் முகம் மலர்ந்தனர். அமரலோகவாசிகள் வரையில் அது ஒரு அபூர்வ காட்சியாக இருந்தது. பூவுலகில் பிறந்த மனிதன் அமரலோகத்தை அடைந்து, இந்திரனாலேயே இந்திரனாக ஆக்கப்படுவது என்பது ஒரு சாதாரண விஷயமல்ல....இந்த அரிய காட்சியைக் கண்ட கந்தர்வர்கள், சாம வேதத்தால் பாடி மகிழ்ந்தனர். மேனகை, ரம்பை, பூர்வசித்தி, ஸ்வயம்பிரபை, க்ருதாசி, ஊர்வசி, மிஸ்ரகேசி, தண்டகவுரி, வரூதினி, கோபாலி, சகஜன்யை, கும்பயோனி, ப்ரஜாகரை, சித்ரசேனை, சித்திரலேகை, சஹை என்ற தேவ மாதர்கள் ஒன்று கூடி நாட்டியமாடினர். மொத்தத்தில் அர்ஜுனனின் வரவால் இந்திரசபை பொலிவோடு விளங்கியது. தேவரிஷியான பிரகஸ்பதி இந்திரனிடம்,''உன் புத்திரன் இவன். உன்னைப் போலவே முனைப்பு கொண்டு இங்கே வரும் வல்லமையை பெற்று விட்டான். வாரிசோடு உன்னைப் பார்க்கும் போது உள்ளம் பூரிக்கிறது,'' என்றார்.ஆட்டம், பாட்டம் முடிவுக்கு வர, இந்திரன் அர்ஜுனன் வந்த நோக்கத்தை கவனிக்கத் தொடங்கினான். சித்ரசேனன் என்ற இசை வல்லானை அழைத்து வாத்யம், நர்த்தனம் ஆகிய இரண்டையும் முதலில் கற்பிக்கச் சொன்னான். அர்ஜுனன், ''தேவதேவா.... எனக்கு இதையெல்லாம் விட அஸ்திரங்களே பெரியவை...'' என்றான். ''புரிகிறது புத்திரா! அஸ்திரங்கள் இங்கே பயிற்சியால் மட்டும் அடையப்படுபவை அல்ல. அது ஒரு கல்வி. பாடம் போல் கற்பிக்கப்பட்டே உபதேசிக்கப்படும். சித்ரசேனன் அதற்கு பொறுப்பேற்று உபதேசம் செய்வான். முன்னதாக ஆயகலைகள் அறுபத்து நான்கும் கற்பிக்கப்படும். இதற்கு ஐந்து ஆண்டு காலம் பிடிக்கும். நீ அவ்வளவு காலமும் இங்கே தங்கியிருந்து கற்றுத் தெளிந்து பின் பூலோகம் செல்வாய்,'' என்றான். அதைக் கேட்ட அர்ஜுனனுக்கு சற்று அதிர்வு ஏற்பட்டது. பூவுலகில் தன்னைக் காணாமல் தர்மன் பீமன் உள்ளிட்ட தன் சகோதரர்கள் வருந்துவார்களே...'' என்றான் அர்ஜுனன்.''கவலைப்படாதே... அவர்களுக்கு உரிய முறையில் நீ இங்கே பயிற்சி பெற்றிடும் விஷயம் கூறப்படும்,'' என்றான் இந்திரன். அதற்கேற்ப லோமசர் எனும் முனிவர் இந்திர லோகத்துக்கு விஜயம் செய்தார். அவர் அர்ஜுனனை அங்கே பார்த்துப் பெரிதும் வியந்தார்.பூவுலகில் அவதரித்த ஒரு மானிடன் இந்திரலோகத்தில் நடமாடுவது என்பது அசாத்தியம் என்பதை உணர்ந்திருந்த அவரிடம், இந்திரன் அர்ஜுனனின் தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவன் பாசுபத அஸ்திரத்தை வழங்கியது பற்றிக் கூறினான்.லோமசரும் அர்ஜுனனின் புலனடக்கத்தை எண்ணி வியந்து ஆசிர்வதித்தார். அப்போது அர்ஜுனனும், கிருஷ்ணனும் முற்பிறவியில் நரநாராயண ரிஷிகளாக இருந்ததை அர்ஜுனன் லோமசரிடம் தெரிவித்தான். லோமசர் காம்யக வனம் சென்று அங்கிருந்த பாண்டவர்களிடம் அர்ஜுனன் அமரலோகத்தில் கல்வி கற்பதைக் கூறச் சித்தமானார்.ஒருபுறம் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணமிருக்க, அர்ஜுனனுக்கு சில சோதனைகளும் ஏற்பட்டன. அவனைக் கண்ட தேவமாதர்கள் காதல் வயப்பட்டனர். அதில் ஊர்வசி முக்கியமானவள். விரக தாபத்தால் ஏங்கத் தொடங்கினாள். ஊர்வசி போன்ற தேவமாதர்கள் எழில் கொண்டவர்கள் மாத்திரமல்ல, அவர்கள் இந்திர லோகத்தை அடையும் தகுதி படைத்தோருக்கு அவர்கள் விரும்பும் இன்பங்களை எல்லாம் தர கடமைப்பட்டவர்களும் கூட...மானுடர்களுக்கு உண்டான கற்பு நெறிக்கும் அவர்களுக்கும் பெரிய சம்பந்தமோ, அதற்கான தேவையோ அவர்களிடமில்லை. இதனால், முனிவர்கள், சாரணர்கள், ரிஷிகள் கூட காமத்தை அவர்கள் மூலம் தணித்துக் கொள்வதுண்டு. அப்படிப்பட்ட ஊர்வசி சித்ரசேனனிடம், அர்ஜுனனை தன் மனைக்கு அனுப்பச் சொல்ல சித்ரசேனனும், 'அவன் உன்னிடமே ஜதி சொல்லப் பழகப் போகிறான். அப்போது நீ உன் விருப்பங்களை அவனிடம் ஈடேற்றிக் கொள்,'' என்றான்.ஊர்வசியும், அர்ஜுனனுக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருக்க அந்த நாளும் வந்தது. சித்ரசேனன் அர்ஜுனனை ஊர்வசியின் ரத்னகலா மண்டபத்தில் விட்டுச் சென்றான். அர்ஜுனனும் ஊர்வசியை பணிவாக வணங்கி நின்றான். அவனுக்குள் அவள் எழிலார்ந்த மேனி எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இது ஊர்வசியை மேலும் பாதித்திட, ''சுந்தரா.... என்னை ஏற்றுக் கொள்....'' என்று அணைக்க முன் வந்தாள். ஆனால், அர்ஜுனன் மறுத்தான். அதிர்ச்சியையும் முகத்தில் காட்டினான்.''சுந்தரா... என்ன இது? நானே அழைத்தும் என்ன தயக்கம்....? ''தயங்க வேண்டியதற்கு தயங்கத் தானே வேண்டும் தாயே?''''என்ன.... தாயா? நானா?''''ஆம்.... நான் உன்னை அந்த இடத்தில் வைத்தே பார்க்கிறேன். நீ என் தந்தைக்கு இணையான இந்திரனுக்கு உரியவள். அப்படி என்றால் எனக்கு நீ தாய் என்பது தானே சரி!''''அர்ஜுனா.... உன் மானுட வழக்கத்தை இங்கே பின்பற்றத் தேவையில்லை. இங்கே மகிழ்வோடு வாழ்வது ஒன்றே நோக்கம். இன்பத்தை தருவதே என் கடமையும் கூட...''''இருக்கலாம்.. ஆனால், நான் இங்கே தற்காலிகமாக வாசம் புரிபவன். இந்த அமர உலகின் நித்யவாசி நானல்ல... ஆகவே, எனக்கான தர்மத்தை நான் பின்பற்றியே தீருவேன். அதுவே எனக்கு அழகு...''''அப்படியே வைத்துக் கொண்டாலும் நீ அரச லட்சணம் கொண்டவன். ஒரு பெண் மானசீகமாக உன்னை விரும்பும் போது நீ தடை போடக் கூடாது.''போதும்.. அந்த நியாயத்தைச் சொல்லி இருவர் என்னை இரு பிள்ளைகளுக்கு தந்தையாக்கி விட்டனர்.. பூவுலகில்... இங்கும் அது தொடர்வதை நான் விரும்பவில்லை....'' ''விஜயா.... என்ன இது...? இப்படி எல்லாம் சிந்திக்கும் நேரமில்லை. நவரசங்களில் ஒன்றான சிருங்கார ரசம் என் உதடுகளில் இருப்பது உனக்குத் தெரியவில்லையா?''''நான் அதை பூவுலகில் வாழும் என் பத்தினியர்களிடம் அறிந்து விட்டேன். இங்கே என் நோக்கம் மோகம் அல்ல... அஸ்திரம் மட்டுமே!''''என் மோகமும் ஒரு அஸ்திரம் தான்....'' ''உண்மையே... அது என்னை தகர்ப்பதை நான் அனுமதிக்க மாட்டேன்...''''அஸ்திரம் என்று கூறி விட்ட நிலையில், நானும் அதைக் கொண்டு உன்னை கட்டாமல் விட மாட்டேன்....'' ''ஊர்வசி... வேண்டாம் இந்த பிடிவாதம்....'' ''இது பிடிவாதம் அல்ல... ஒரு நரன் என்னை அலட்சியப்படுத்துவதை என்னால் சகிக்க முடியாது. இம்மட்டில் நீ காமுற இடமிருந்தும் அதற்கு இடம் கொடாது பேசியதால் அதற்கு முற்றிலும் இடம் இல்லாத அரவாணியாக திகழக் கடவாய்....'' எனச் சற்றும் எதிர்பாராத வகையில் சாபமிட்டாள் ஊர்வசி. அர்ஜுனன் இதை எதிர்பார்க்கவில்லை.அஸ்திரம் பெற வந்த அமர உலகில் தனக்கு இப்படி ஒரு சாபமா என கலங்கி நின்றான்.- தொடரும்இந்திரா சவுந்தர்ராஜன்