உள்ளூர் செய்திகள்

வாக்கு பலித்தது!

அம்மை வந்து பார்வை இழந்த தன் பேரனை அழைத்துக் கொண்டு மூதாட்டி ஒருவர் காஞ்சிபுரம் மடம் வந்தார். மகாபெரியவரிடம் நடந்தைச் சொல்லி முறையிட்டார். பெரியவர் அதைக் கவனிக்காதது போல, மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். 'பெற்றம்' என்பதன் பொருள் என்ன? என்று ஒருவரிடம் கேட்டார். 'பசு' என்ற அவர், திருப்பாவையில், 'பெற்றம் மேய்த்துண்ணும் குலம்' என்று ஆண்டாள் பாடியிருப்பதைச் சொன்னார். பெரியவர் அவரிடம், ''திருப்பாவை தவிர வேறு எதிலாவது இந்தச் சொல் வந்திருக்கிறதா?'' என்று திருப்பிக் கேட்டார். ''ஆமாம் சுவாமி! சுந்தரரும் தன் பாடலில் சொல்லி இருக்கிறார்,'' என்றார் அவர்.அப்போது சுந்தரர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியை விவரித்தார் பெரியவர்.சுந்தரருக்கு பரவை நாச்சியாருடன் திருமணம் ஆன பிறகு, திருவொற்றியூரில் (சென்னை) வசித்த சங்கிலி நாச்சியாரை விரும்பினார். சங்கிலி நாச்சியாரோ, ''திருமணத்துக்குப் பின் என்னை விட்டுப் பிரிய மாட்டேன் என சிவனிடம் சத்தியம் செய்யுங்கள்,'' என்று நிபந்தனை விதித்தார். தர்ம சங்கடமான நிலையில், அவ்வூரிலுள்ள ஆதிபுரீஸ்வரர் கோயிலுக்குச் சென்றார் சுந்தரர். தன் தோழரான சிவனிடம்,''நீ தான் இந்த பிரச்னைக்கு தீர்வளிக்க வேண்டும்,'' என்று வேண்டினார். பின் சங்கிலி நாச்சியாரிடம் 'முதல் மனைவியைப் பார்க்க மாட்டேன்' என சத்தியம் செய்தார். சில நாள் கழிந்து, சத்தியத்தை மீறி முதல் மனைவியைப் பார்க்க புறப்பட்டார். சத்தியத்தை மீறியதால் பார்வை இழந்தார். 'தோழனாக இருந்தாலும், நீதியின் முன் அனைவரும் சமம்' என்பதை நிரூபித்த சிவன் மீது சுந்தரர் பதிகம் பாடினார். இடக்கண்ணுக்கு ஒன்றும், வலக்கண்ணுக்கு ஒன்றுமாக இரண்டு பதிகம் பாட, மீண்டும் பார்வை கிடைத்தது. இந்த வரலாற்றைச் சொல்லிய பெரியவர் அந்த பெண்ணிடம், ''சுந்தரர் கண் பெற்ற பதிகத்தை பாடுங்கோ! மீண்டும் பார்வை வந்துடும்,'' என அருள்புரிந்தார். ஏதோ 'பெற்றம்' என்ற சொல்லை ஆராய்வது போல, அந்த மூதாட்டியின் கவலை தீர வழிகாட்டிய பெரியவரின் வாக்கு விரைவில் பலித்தது. அந்த சிறுவனுக்குப் பார்வையும் கிடைத்தது.