கல்யாணம் நடக்க...
திருப்பதி என்றாலே அங்கு அருள்புரியும் வெங்கடாஜலபதி, வேங்கட மலை, லட்டு பிரசாதமே முதலில் நினைவிற்கு வரும். அந்த வரிசையில் இனி கல்யாண வெங்கடேஸ்வர பெருமாளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இவர் திருப்பதிக்கு அருகே புத்துாரில் உள்ள நாராயணவனத்தில் கோயில் கொண்டிருக்கிறார். இங்குதான் பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் திருமணம் நடந்தது. இத்தலப் பெருமாளை தரிசித்தால் கல்யாணம் கைகூடும். தீபாவளியன்று தரிசித்தால் லட்சுமி கடாட்சமும் சேரும். முன்பு இப்பகுதியை சுதர்மன் என்பவர் ஆட்சி செய்தார். வயதானதும் தன் மூத்த மகன் ஆகாசராஜனுக்கு முடிசூட்டி வைத்து விட்டு தவம் புரிய காட்டுக்குச் சென்றார். ஆகாசராஜனும் தர்ம வழியில் ஆட்சி செய்தார். ஆனால் அவருக்கு குழந்தை இல்லை. புத்திர காமேஷ்டி யாகம் செய்ய விரும்பினார். யாகத்துக்கான இடத்தை உழும்போது பெட்டி ஒன்று கிடைத்தது. திறந்து பார்த்தால் அதில் அழகான ஒரு பெண் குழந்தையும், ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரையும் இருந்தது. அக்குழந்தையே பத்மாவதி தாயார். இவரை சீனிவாசப் பெருமாள் இங்கு திருமணம் செய்து கொண்டார். பின் மக்களின் துன்பங்களை களைவதற்காக திருமலைக்கு எழுந்தருளினார் பெருமாள். கோயிலின் ராஜகோபுரம் விஜயநகர அரசரான கிருஷ்ணதேவ ராயரால் கட்டப்பட்டது. ஏழு அடுக்குகளைக் கொண்ட இது அழகாக காட்சி தருகிறது. இரண்டாவது கோபுரம் வீரநரசிம்ம தேவயாதவ ராயரால் கட்டப்பட்டது. இங்கு பெருமாள் மணமகன் அலங்காரத்திலும், தாயார் மணமகள் அலங்காரத்திலும் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தை சுற்றி வரும்போது கல் ஒன்றை பார்க்க முடியும். இது பத்மாவதி தாயார் தன் திருமணத்திற்காக மாவு அரைத்த கல்லாகும். அதோடு ஆண்டாள் நாச்சியார், சீதா லட்சுமணரோடு ராமர், ரங்கநாதர் சன்னதியை பார்க்கலாம். திருப்பதியில் நடைபெறும் பெருமாளின் கல்யாண உற்ஸவம் போல் இங்கும் நடக்கிறது. இதில் கலந்து கொண்டால் திருமணத்தடை அகலும். இக்கோயில் திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ளது.எப்படி செல்வது * சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் சாலை வழியாக 97 கி.மீ., * புத்துாரில் இருந்து 5 கி.மீ., விசேஷ நாள்: ரதசப்தமி, புரட்டாசி சனிக்கிழமை, வைகுண்ட ஏகாதசி.நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணிஅருகிலுள்ள கோயில்: திருத்தணி சுப்ரமணிய சுவாமி 35 கி.மீ., (சுக்கிர தோஷம் தீர...)நேரம்: காலை 6:00 - இரவு 9:00 மணிதொடர்புக்கு: 044 - 2788 5303