குழப்பம் தீர...
மனக்குழப்பம், சித்த பிரமையால் வாடுவோரைக் குணப்படுத்தி நிம்மதி தருகிறார் திருச்சியை அடுத்த குணசீலம் பிரசன்ன வேங்கடேசப்பெருமாள். மனநோயாளிகளின் பிரார்த்தனை தலமான இங்கு திருப்பதி ஏழுமலையானே மூலவராக இருக்கிறார். பெருமாள் பக்தரான குணசீலர் தன் ஆஸ்ரமத்தில் ஏழுமலையானை வழிபட்டு வந்தார். குணசீலரின் குருநாதரான தால்பியர் என்பவர் குணசீலரை தன் ஆஸ்ரமத்திற்கு கூப்பிடவே, பூஜை செய்யும் பொறுப்பை சீடன் ஒருவனிடம் ஒப்படைத்துச் சென்றார். அன்றிரவு வனவிலங்குகள் ஆஸ்ரமத்திற்குள் நுழையவே சீடன் அங்கிருந்து தப்பித்தான். இதன்பின் ஏழுமலையான் சிலை மண்ணுக்குள் புதைந்தது. இப்பகுதியை ஆட்சி செய்த ஞானவர்மன் காலத்தில் அரண்மனைப் பசுக்கள் காட்டில் மேய்ந்தன. குறிப்பிட்ட இடத்தில் பசுக்கள் தினமும் பாலைச் சொரிந்தன. விஷயத்தை அறிந்த மன்னர் காட்டிற்கு வந்த போது, புற்றுக்குள் பெருமாள் சிலை இருப்பதாக அசரீரி ஒலித்தது. அந்த இடத்தில் பிரசன்ன வெங்கடேசப் பெருமாளுக்கு கோயில் கட்டப்பட்டது. கருவறையின் இருபுறமும் உத்ராயண, தட்சிணாயன வாசல்கள் உள்ளன. மனநோய் நிவர்த்தி தலமான இங்கு மனநோய்க்கான மறுவாழ்வு மையம் உள்ளது. காலை, மாலையில் பூஜையின் போது பிரசாதமாக தீர்த்தம் தருகின்றனர். பெருமாளே பிரதானம் என்பதால் தாயார், பரிவார மூர்த்திகள் இல்லை. உற்ஸவர் சீனிவாசர் சாளக்கிராம மாலையணிந்து செங்கோல் ஏந்தி காட்சியளிக்கிறார். சுவாமிக்கு அபிேஷகம் செய்த தீர்த்தம், சந்தனம் பிரசாதமாகத் தரப்படுகிறது. புரட்டாசி பிரம்மோற்ஸவத்தின் போது குணசீலருக்கு காட்சியளித்த வைபவம் நடக்கும். மாதந்தோறும் திருவோணத்தன்று கருடசேவை நடக்கிறது. கோயில் முகப்பில் தீபத்துாணில் அனுமனின் புடைப்புச் சிற்பம் உள்ளது. வைகானச ஆகமம் எழுதிய விகனசருக்கு சன்னதி உள்ளது. மனம், உடல் குறைபாடு உள்ளவர்கள் நிம்மதி வேண்டி பிரார்த்திக்கின்றனர். எப்படி செல்வது: திருச்சி - சேலம் ரோட்டில் 24 கி.மீ., விசேஷ நாள் : சித்ரா பவுர்ணமியில் தெப்பத்திருவிழா, புரட்டாசி பிரம்மோற்ஸவம், கோகுலாஷ்டமி, ஸ்ரீராமநவமி.நேரம்: காலை 6:30 - 12:30 மணி; மாலை 4:00 - 8:30 மணிதொடர்புக்கு: 94863 04251அருகிலுள்ள கோயில்: திருச்சி தாயுமானசுவாமி கோயில் 24 கி.மீ., (குழந்தைப்பேறு கிடைக்க...)நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:30 மணிதொடர்புக்கு: 0431 - 270 4621