உள்ளூர் செய்திகள்

வனபத்ரகாளி

ஆடி என்றாலே அம்மன் கோயிலில் வழிபாடு களைகட்டும். மேட்டுப்பாளையம் அருகிலுள்ள தெக்கம்பட்டி வனபத்ரகாளியை தரிசித்தால் நல்வாழ்வு அமையும். தவம் செய்த முனிவர்களைத் துன்புறுத்தினான் அசுரனான மகிஷன். அவர்கள் பார்வதியிடம் முறையிடவே, மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் தவம் புரிந்து பத்ரகாளியாக வடிவெடுத்தாள். அதன் பின் அசுரனை அழித்தாள். அவளே காவல் தெய்வமாக இங்கு விளங்குகிறாள். பாண்டவர்களில் ஒருவரான பீமன் ஒருமுறை ஆரவல்லி, சூரவல்லி என்னும் அசுரப்பெண்களால் சிறை பிடிக்கப்பட்டான். கிருஷ்ணரின் தலையீட்டால் அவன் விடுவிக்கப்பட்டான். இதையறிந்த அர்ஜூனனின் மகனான அபிமன்யு, தன் பெரியப்பாவை சிறைப்பிடித்த பெண்களை பழிவாங்க நினைத்து இவ்வழியாக வந்தான். அப்போது இக்காளி கோயிலில் கோரிக்கை வைத்தான். அவனுக்கு மந்திர வாளை பரிசளித்த காளி, அதன் மூலம் அசுரப் பெண்களை அடக்க வரமளித்தாள். அதன்படியே அவன் வெற்றி பெற்றான். இந்த அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் கன்னியருக்கு வாழ்க்கைத்துணையும், திருமணமானவருக்கு குழந்தை வரமும் கிடைக்கும். குழந்தை வரம் பெற மரத்தொட்டிலும் கட்டுகின்றனர். ஆடியில் அம்மனுக்கு திருவிழா நடக்கும். ஆடி முதல் செவ்வாயன்று அம்மனிடம் அனுமதி பெறும் நிகழ்வும், இரண்டாம் செவ்வாயன்று 36 அடி நீளத்தில் குண்டம் அமைத்து தீ மிதிக்கும் விழாவும், மூன்றாம் செவ்வாயன்று மறுபூஜையும், அடுத்து வரும் செவ்வாயன்று சிறப்பு பூஜையும் நடக்கும். எப்படி செல்வது: மேட்டுப்பாளையத்தில் நெல்லித்துறை சாலையில் 6 கி.மீ., விசேஷ நாள்: ஆடி குண்டம் திருவிழா, ஆடிவெள்ளி, தை வெள்ளி.நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 4:00 - 8:00 மணிதொடர்புக்கு: 04254 - 222 286அருகிலுள்ள கோயில்: இடுகம்பாளையம் அனுமந்தராய சுவாமி ஜெயமங்கள ஆஞ்சநேயர் 24 கி.மீ.,(முயற்சி வெற்றி பெற...)நேரம்: காலை 6:00 - இரவு 8:00 மணிதொடர்புக்கு: 04254 - 254 994