தேரோடும் எங்க திருவாரூர் வீதியிலே...
UPDATED : மே 25, 2017 | ADDED : மே 25, 2017
கடவுளுக்கெல்லாம் ராஜாவான சிவன்,திருவாரூரில் தியாகராஜர் என்றபெயரில் வீற்றிருக்கிறார். இங்கு நடக்க இருக்கும் புகழ் மிக்க 'ஆழித்தேர் திருவிழா' சிறப்பு மிக்கது. தல வரலாறு: ஒருமுறை இந்திரன் மீது அசுரர்கள் போர் தொடுத்தனர். அப்போது பூலோகத்தை ஆட்சி செய்த முசுகுந்த சக்கரவர்த்தி என்பவர், தன் படைகளை அனுப்பி இந்திரனின் வெற்றிக்கு துணை புரிந்தார். இதற்கு பரிசாக சக்கரவர்த்திக்கு என்ன வேண்டும் எனஇந்திரன் கேட்டான்.அவனிடம் சக்கரவர்த்தி, ''எனக்கு தேவலோகத்தினர் பூஜிக்கும் 'விடங்கலிங்கம்' (உளியால் செதுக்கப்படாத சிறிய லிங்கம்) வேண்டும்,'' எனக்கேட்டார். தன்னால் பூஜிக்கப்பட்டதை முசுகுந்தருக்கு வழங்க இந்திரன் விரும்பவில்லை. தேவ சிற்பியான மயனை அழைத்து, விடங்கலிங்கம் போல ஆறு லிங்கங்கள் செய்து, அவற்றைக் கொடுத்தான். இதையறிந்த முசுகுந்தன் நிஜலிங்கத்தைக்கேட்டான். வேறுவழியின்றி மயன் செய்த லிங்கங்களுடன், நிஜ லிங்கத்தையும்இந்திரன் வழங்கினான். அந்த நிஜலிங்கம் திருவாரூரிலும், மற்ற லிங்கங்கள் ஆறு கோவில்களிலும் உள்ளன. இந்தக் கோவில்களை 'சப்த விடங்கத் தலங்கள்' என்பர்.'சப்தம்' என்றால் ஏழு.திருவாரூரில் 'வீதி விடங்கர்',திருநள்ளாறில் 'நகர விடங்கர்', நாகப்பட்டினத்தில் 'சுந்தரவிடங்கர்', திருக்குவளையில் 'அவனி விடங்கர்', திருவாய்மூரில்'நீலவிடங்கர்', வேதாரண்யத்தில் 'புவனி விடங்கர்', திருக்காரவாசலில் 'ஆதி விடங்கர்' என்ற பெயர்களில் விடங்க லிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்கள் கையடக்க அளவுக்கே இருக்கும்.இவர் தான் ராஜா: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தியாகராஜர் என்றால் 'கடவுள்களுக்கெல்லாம் ராஜா' என பொருள். 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 மதில்கள்,13 மண்டபங்கள், 15 தீர்த்தக் கிணறுகள், 3 நந்தவனம், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள், 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள்,24க்கும் மேற்பட்ட உள் கோவில்கள் என பிரம்மாண்டமாக இந்தக் கோவில்விளங்குகிறது. திருவாரூர் தியாகராஜரின் முகதரிசனம் காண்பவர்கள், இங்கிருந்து3 கி.மீ. தொலைவிலுள்ள விளமல் சிவன் கோவிலில் பாத தரிசனம் செய்வது நல்லது. இந்திரன் வழங்கிய விடங்க லிங்கத்திற்கு காலை 8:30, 11:00, இரவு 7:00மணிக்கு அபிஷேகம் நடக்கும்.பிறை சூடிய அம்பிகை: மூலவர் வன்மீகநாதர் எனப்படுகிறார். அம்பாள் கமலாம்பிகை, சிவனைப் போல பிறை சூடி இருக்கிறாள். வலது கையில் மலர் ஏந்தியும், இடதுகையை இடுப்பில் வைத்தும், கால்களை யோகாசன நிலையில் காட்சியளிக்கிறாள். அம்மன் சன்னதிக்கு வலதுபுறத்தில் கமலமுனி சித்தர் பீடம் உள்ளது.கோவிலுக்குள் கோவில்: தேவாரப் பாடல் பெற்ற அசலேஸ்வரர் கோவில், பிரகாரத்தில் உள்ளது. பிரகாரத்தில் உள்ள மற்ற சன்னதிகளும் தனி கோவில் போல பெரியதாக உள்ளன. வீதிவிடங்க விநாயகர், கமலாம்பாள், நீலோத்பலாம்பாள், ரவுத்ரதுர்க்கை, ருண விமோசனர், தட்சிணாமூர்த்தி, ஆனந்தீஸ்வரர், சித்தீஸ்வரர், ஹயக்கிரீஸ்வரர், தட்சணேஸ்வரர், அண்ணாமலேஸ்வரர், வருணேஸ்வரர், ஓட்டு தியாகேசர், துளசி ராஜா பூஜித்த கோவில், தெய்வேந்திரன் பூஜித்த லிங்கம், சேர நாதர், பாண்டியநாதர், ஆடகேஸ்வரர், புலஸ்திய ரட்சேஸ்வரர், புலஸ்திய பிரம்மேஸ்வரர், பக்தேஸ்வரர், வில்வாதீஸ்வரர், பாதாளேஸ்வரர் ஆகிய சன்னதிகள் இங்குள்ளன. மாற்றுரைத்த விநாயகர் சன்னதி மேலக்கோபுரத்தின் எதிரிலுள்ள குளக்கரையில் உள்ளது. செல்வம் பெருகும்: இங்குள்ள ராகு கால துர்க்கையை வழிபட பதவி உயர்வு கிடைக்கும். சண்முகரை வழிபட்டால் பகை விலகும். நீலோத்பலாம்பாளை வழிபட்டு, அர்த்த ஜாம நைவேத்யமான பால் சாப்பிட பிள்ளை வரம் கிடைக்கும்.ருணவிமோசனப் பெருமானை வழிபட்டால் கடன் தொல்லை, நோய் நீங்கும். பிரதான மூர்த்தியான தியாகேசரை வணங்கினால் திருமண வரம், குழந்தை வரம், தொழில் வளம் ஏற்படும். மூலவர் வன்மீகி நாதரை வழிபட்டால் செல்வம் பெருகும். அம்மன் சன்னதியில் உள்ளஅட்சர பீடத்தை வணங்கினால் கல்வி வளர்ச்சி உண்டாகும்.மழை வழிபாடு: மழை வேண்டி, வீதி விடங்கருக்கு பின்புறம் உள்ள பிரம்ம நந்தியை நீரில் மூழ்கடித்து வழிபடுவர். பசுக்கள் சரிவர பால் தராவிட்டால், நந்திக்குஅருகம்புல் சாத்துவர். ஜூரம் நீங்க, ஆயுள் அதிகரிக்க ஜூரதேவருக்கு மிளகுரசம் படைத்து வழிபடுகின்றனர். நினைத்தது நிறைவேற தியாகராஜருக்கு 'முகுந்தார்ச்சனை' செய்கின்றனர். இங்குள்ள 'கமலாலயம்' என்றதெப்பக்குளத்தின் நடுவே நாகநாதர் சன்னதி உள்ளது.தேர் திருவிழா: திருவாரூர் தேரழகு, திருவிடைமருதூர் தெருவழகு, மன்னார்குடி மதிலழகு,வேதாரண்யம் விளக்கழகு என்னும் பழமொழி மூலம் திருவாரூர் தேரின் சிறப்பை அறியலாம்.ஆழித்தேர் எனப்படும் இது 96 அடி உயரம், 360 டன் எடை கொண்டது. இதில் 6மீட்டர், 1.2 மீட்டர், 1.6 மீட்டர், 1.6 மீட்டர் உயரம் கொண்ட நான்கு நிலைகள் உள்ளன. சக்கரங்கள் 2.59 மீட்டர் விட்டம் கொண்டவை. கலைநயம் மிக்கவேலைப்பாடு மிக்க இத்தேர் ஹைட்ராலிக் பிரேக் தொழில் நுட்பத்துடன்இயக்கப்படுகிறது. திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இதைப் பராமரிக்கிறது.இந்த தேரில் சுரங்க வழி ஒன்று உள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டம் இதன் வடிவில் உருவாக்கப்பட்டது. வரும் 29, காலை 7:00 மணிக்கு தியாகராஜர் ஆழித்தேர்பவனி நடக்க உள்ளது.எப்படி செல்வது: திருவாரூர் பேருந்து நிலையம், ரயில்நிலையத்தில் இருந்து3 கி.மீ., நேரம்: அதிகாலை 5:00 - 12:00 மணி மாலை 4:00 - 9:00 மணிதொடர்புக்கு: 94433 54302, 04366 - 242 343