உள்ளூர் செய்திகள்

276வது தலத்துக்கு வாங்க! தீராத நோய் தீருமுங்க!

தீராத நோய், தீராத பிரச்னை எதுவாகிலும் தீரவும், அழியாப்புகழ் கிடைக்கவும் திண்டிவனம் அருகிலுள்ள கிளியனூர் அகஸ்தீஸ்வரரை வழிபட்டு வரலாம். இதற்கு உத்தரவாதம் அளிப்பவர் ஞானசம்பந்தர். அவரால் பாடல் பெற்ற தலங்களில் இது 276வது தலம் என்பது குறிப்பிடத்தக்கது.தல வரலாறு: இமயத்தில் இருந்து அகத்தியர் பொதிகைக்கு வரும் வழியில், பல இடங்களில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வணங்கினார். அவர் பிரதிஷ்டை செய்த லிங்கங்கள் 'அகஸ்தீஸ்வரர்' என பெயர் பெற்றது. கிளியனூரிலும் அவர் லிங்க பிரதிஷ்டை செய்து வணங்கினார். இன்று சிறிய ஊராக இருக்கும் கிளியனூர், கி.பி.6,7ம் நூற்றாண்டுகளில் சிறப்பான ஊராக இருந்ததை கல்வெட்டு மூலம் அறிகிறோம். சம்பந்தர் காலத்தில் இவ்வூர் திருக்கிளியன்னவூர் என்று வழங்கி வந்துள்ளதை இவர் பாடிய தேவாரப் பதிகம் மூலம் அறிய முடிகிறது. முதலில் செங்கல் கோவிலாக இருந்தது, சோழ மன்னர்கள் காலத்தில் கற்கோவிலாக கட்டப்பட்டது. இத்தல பெருமான் அகத்திய முனிவருக்கும், ராகு, கேது கிரகங்களுக்கும் அருள்பாலித்தவர்.தலப்பெருமை: இத்தலத்தில் சிவன் மேற்கு பார்த்தும், அம்பாள் கிழக்கு நோக்கியும் அருள்பாலிப்பது வித்தியாசமான அம்சம். மேற்கு நோக்கிய சிவனுக்கு சக்தி அதிகம். இங்குள்ள சிவலிங்கத்தை அகத்தியர் பிரதிஷ்டை செய்துள்ளார். காலவ மகரிஷி தன் இரு பெண் குழந்தைகளின் தீராத நோய் நீங்க இத்தலம் வந்து பல ஆண்டுகள் வழிபாடு செய்தார். அவர்களுக்கு நோய் நீங்கியது. சுகப்பிரம்ம மகரிஷி இத்தல சிவனை வழிபட்டு தனது வயிற்று வலி நீங்கப்பெற்றார். வயிற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அது தீர அகஸ்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம் செய்து அதை சாப்பிடுகின்றனர். சம்பந்தர் பாடிய தேவாரத் திருப்பதிகத்தில், 'இந்த சிவனின் திருவடிகளை வழிபடுபவர்கள், தீராத துன்பங்களில் இருந்து விடுபட்டு புகழுடன் வாழ்வர்' என சொல்லியுள்ளார். “வன்மை செய்யும் வறுமை வந்தாலுமேதன்மை இல்லவர் சார்பு இருந்தாலும்,புன்மைக் கன்னியர் பூசல் உற்றாலுமேநன்மை உற்ற கிளியன்னவூரனே” என்பது அந்தப் பாடல்.“மிகக்கொடிய வறுமை, கெட்டவர்களின் தொடர்பு, பெண்களால் ஏற்படும் பிரச்னைகள் ஆகியவற்றிலிருந்து விடுபட கிளியனூர் ஈசனை வழிபடுங்கள்,” என்பது இதன் பொருள்.கொடியவர் நெஞ்சில் ஒருபோதும் தங்காத இந்த சிவன், தன் பக்தர்களின் துயரைப் போக்கி அவர்கள் வேண்டியதை அருள்வார். தன் பக்தர்கள் மறுபிறப்பு எடுத்தாலும் நிறைந்த செல்வத்துடன் நல்வாழ்வு வாழ வரம் அளிப்பார். இத்தல தேவாரப் பதிகத்தை ஓதுபவர்கள் உலகக் கொடுமைகளிலிருந்து விடுபட்டு ஒரு குறையும் இல்லாது நல்வாழ்வு வாழ்வர். இத்தலத்து அகிலாண்டேஸ்வரிக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியமும், திருமண வரமும் அளிக்க பூஜை செய்து வரலாம். இக்கோவில் மூன்று ஏக்கர் பரப்பு கொண்டது.276வது தலம்: சிவனின் பாடல் பெற்ற தலங்கள் 274. இதன் பிறகு புதிதாக இரண்டு தலங்கள் தேவாரப் பாடல்களின் அடிப்படையில் சேர்க்கப்பட்டன. அதில் 275வது தலம், திருவாரூர் மாவட்டம் திருவிடைவாசல் புண்ணிய கோடியப்பர் கோவில். 276வது தலம் கிளியனூர். இத்தலம் பற்றி சம்பந்தர் பாடிய இன்னொரு பாடலும் சிறப்பு மிக்கது.“தார் சிறக்கும் சடைக்கு அணி வள்ளலின்சீர் சிறக்கும் துணைப்பதம் உன்னுவோர்பேர் சிறக்கும் பெருமொழி உய்வகைஏர் சிறக்கும் கிளியன்ன வூரனே!”இந்த பாடல்களைப் பாடுவோர் நோயற்ற வாழ்வு பெறுவர்.இருப்பிடம்: திண்டிவனம் - புதுச்சேரி சாலையில் 18 கி.மீ.,நேரம்: காலை 6:00 - 11:00 மாலை 4:00 - இரவு 8:00 மணி. அலைபேசி: 94427 86709