உள்ளூர் செய்திகள்

பக்தனுக்கு தேர் ஓடும் கோவில்

டிச.12 திருமங்கையாழ்வார் திருநட்சத்திரம்சுவாமியை தேரில் வைத்து ஊர்வலம் வருவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், பக்தனுக்கு மரியாதை தரும் விதத்தில் தேரோடும் தலத்தைப் பார்த்ததுண்டா?நாகப்பட்டினம் மாவட்டம் திருநகரியிலுள்ள வேதராஜப் பெருமாள் கோவிலில், திருமாலின் பக்தரான திருமங்கையாழ்வாருக்கு திருக்கார்த்திகையன்று தேரோட்டம் நடத்தப்படுகிறது. இக்கோவிலில் ஆழ்வார் சன்னிதியில் தனி கொடிமரமும் உள்ளது.தல வரலாறு: கிருதயுகத்தில் பிரம்மாவின் மகனான பிரஜாபதி என்பவர், மோட்சம் பெற வேண்டி இந்த தலத்திற்கு வந்து பெருமாளை நினைத்து கடும் தவம் செய்தார். பெருமாள் அவருக்கு தரிசனம் அளிக்காமல் தாமதம் செய்தார். பக்தனுக்கு தரிசனம் தராத பெருமாள் மீது கோபம் கொண்ட லட்சுமி தாயார், அவரைப் பிரிந்து பூலோகம் வந்து விட்டாள். லட்சுமியைத் தேடி இத்தலம் வந்த பெருமாள், இங்குள்ள குளத்தில் தாமரை மலரில் லட்சுமி வீற்றிருப்பதைக் கண்டார். மகிழ்ச்சியில் தாயாரைத் தழுவிக் கொண்டார். இதன் அடிப்படையில் இத்தலத்தில் பெருமாள், லட்சுமியை ஆலிங்கனம் செய்த நிலையில் (தழுவியகோலம்) காட்சியளிப்பதாக ஐதீகம். தாயாரின் வேண்டுகோள் படி பிரஜாபதிக்கும் காட்சி தந்தார். பிரஜாபதியே கலியுகத்தில் திருமங்கையாழ்வாராகப் பிறந்து, திருமாலின் தீவிர பக்தராக இருந்து மோட்சம் அடைந்தார். இத்தலம் அருகிலுள்ள திருவாலிக்கும் இதே தல வரலாறு கூறப்படுவதால், இரு தலங்களையும் இணைத்து திருவாலிதிருநகரி என்று இப்பகுதியை அழைக்கின்றனர். ஆழ்வாருக்கு மரியாதை: மூலவர் வேதராஜன் மேற்கு நோக்கி வீற்றிருந்த கோலத்தில் இருக்கிறார். உற்சவர் கல்யாண ரங்கநாதன் எனப்படுகிறார். அமிர்தவல்லித்தாயார் தனி சன்னிதியில் அருள்புரிகிறாள். யோக நரசிம்மர், பரமபதநாதர் ஆகியோருக்கு சன்னிதி உள்ளது. இங்குள்ள தீர்த்தம் லாக்ஷ புஷ்கரிணி எனப்படுகிறது. திருமங்கையாழ்வார் தனி சன்னிதியில் ஞானசம்பந்தர் கொடுத்த வேலுடன் காட்சி தருகிறார். இவருக்கு மரியாதை சேர்க்கும் விதத்தில் தனி கொடிமரம் உள்ளது. பெருமாளுக்கு எதிரிலும் ஒரு கொடிமரம் உள்ளது. திருமங்கையாழ்வார் மட்டுமில்லாமல் குலசேகராழ்வாரும் வேதராஜப் பெருமாளைப் பாடியுள்ளார். மங்களாசாசனம் பெற்ற திவ்ய தேசம் 108ல் இது 35 வதாக உள்ளது. இங்குள்ள விமானம் அஷ்டாட்சர விமானம் எனப்படுகிறது. ஆட்கொண்ட பெருமாள்: திரேதாயுகத்தில் பிரஜாபதி, உபரிசிரவஸு என்னும் மன்னராக பிறந்தார். அவர் இத்தலத்தின் மேலாக புஷ்பக விமானத்தில் பறந்து வரும் போது, அது நின்று விட்டது. அதன்பின் இத்தலத்தின் மகிமையை உணர்ந்து, தனக்கு மோட்சம் வேண்டி பெருமாளை நோக்கி தவம் மேற்கொண்டார். அப்போதும் மோட்சம் கிடைக்கவில்லை. மீண்டும் துவாபரயுகத்தில் சங்கபாலன் என்ற பெயரில் பிறந்து, ஒரு மன்னருக்கு மந்திரியாக இருந்தார். அப்பிறவியிலும் தவமிருந்து மோட்சம் வேண்ட பெருமாள், கலியுகத்தில் அளிப்பதாக உறுதியளித்தார். கலியுகத்தில் நீலன் என்ற பெயரில் ஒரு படைத்தலைவனின் மகனாகப் பிறந்தார். குமுதவல்லி நாச்சியார் என்னும் விஷ்ணுபக்தையை மணம் புரிய விரும்பினார். அவள், “ஓராண்டிற்கு தினமும் ஆயிரம் திருமால் அடியார்களுக்கு அன்னதானம் செய்தால் மணம் புரிய சம்மதிப்பேன்,'' என்று நிபந்தனை விதித்தாள். அன்னதானத்திற்கு பொருள் இல்லாத நீலன் வழிப்பறியில் ஈடுபட்டார். அந்த நேரத்தில் பெருமாளும், லட்சுமியும் திருமணக் கோலத்தில் திருவாலி அருகேயுள்ள தேவராஜபுரம் என்ற இடத்திற்கு வரும்போது நீலன் வழி மறித்தார். அப்போது பெருமாள் நீலனின் காதில் 'ஓம் நமோ நாராயணாய' என்னும் மந்திரத்தை உபதேசம் செய்து அடியவராக ஆட்கொண்டார். அதன்பின் நீலன் திருமங்கையாழ்வார் எனப்பெயர் பெற்றார். பெருமாளைப் பற்றி பாசுரம் பாடத் தொடங்கினார்.திருநட்சத்திர வைபவம்: திருமங்கையாழ்வாரின் திருநட்சத்திர வைபவம் திருகார்த்திகையன்று (டிச.12) கொண்டாடப்படுகிறது.அன்று காலை 7:00 மணிக்கு குமுதவல்லியுடன், ஆழ்வார் தேரில் எழுந்தருளி பவனி வருவார். மதியம் 3:00 மணிக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம் நடக்கும். இரவு 10:00 மணிக்கு சாற்றுமுறையாக திருநெடுந்தாண்டகம், திருக்குறுந்தாண்டகம் பாசுரங்கள் பாடப்படும்.இருப்பிடம்: சீர்காழி -பூம்புகார் சாலையில் 11 கி.மீ.,நேரம்: காலை 7:30 - பகல் 11:30 , மாலை 4:30 - இரவு 9:30 மணிஅலைபேசி: 94433 72567.