உள்ளூர் செய்திகள்

மனசுக்கு புடிச்ச வேலை வேணுமா!

சிலருக்கு படிப்புக்கேற்ற வேலை இருக்காது. சிலர் பணியில் பிடிப்பின்றி இருப்பர். இத்தகையவர்கள், மனதிற்கு பிடித்த வேலை கிடைக்க கடலூர் அருகிலுள்ள தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரரிடம் வேண்டலாம். தல வரலாறு: சிவபக்தர்களான விவசாய தம்பதி, தினமும் ஒருவருக்கு உணவளித்த பிறகு சாப்பிடுவது வழக்கம். அவர்களின் பெருமையை உலகுக்கு அறிவிக்க விரும்பிய சிவன், ஒருநாள், ஒரு பக்தரைக் கூட அவர் வீட்டருகே வரவிடாதபடி செய்தார். எனவே, விவசாயி தன் பணியாளரை வீட்டுக்கு அழைத்து வர புறப்பட்டார். அவர் அங்கு இல்லை. ஒரு முதியவர் அங்கு வந்தார். விவசாயி அவரிடம் வீட்டுக்கு வரவேண்டினார்.முதியவர், ''உழைக்காமல் சாப்பிட நான் விரும்பவில்லை. வேலை கொடுத்தால் கூலிக்குப் பதில் சாப்பிடுகிறேன். உணவை இங்கேயே கொண்டு வந்து விடுங்கள்,'' என்றார். விவசாயி சம்மதிக்க, முதியவர் நிலத்தில் வேலை செய்தார். விவசாயி வீட்டிற்கு சென்று உணவுடன் வரும்போது, அன்று விதைத்த தினை, அறுவடைக்கு தயாராக இருந்தது. வியப்புடன் விவசாயி, முதியவருக்கு சோறிட்டபடியே, ''ஒரே நாளில் பயிர் விளைந்தது எப்படி?'' எனக் கேட்க, வந்த முதியவர், சிவனாக காட்சியளித்து மறைந்தார். அந்த இடத்தில் சிவன் லிங்கமாக எழுந்தருளினார்.சிறப்பம்சம்:கருவறையில் சிவக் கொழுந்தீஸ்வரர் சதுர வடிவ பீடத்தில் காட்சி தருகிறார். நிலத்தை உழ பயன்படுத்திய கலப்பை, நீர் இறைத்த கலம் கோவிலில் இருக்கிறது. சிவன் பணியாளராக இத்தலத்துக்கு வந்ததால், படிப்புக்கு தகுந்த வேலையில்லையே என வருந்துபவர்கள், வக்கொழுந்தீஸ்வரருக்கு பூஜை செய்து, விரும்பும் பணி கிடைக்க வேண்டி வரலாம் இங்குள்ள ஒப்பிலாநாயகி அம்மனுக்கு கருந்தடங்கண்ணி, நீலதாம்பிகை என்ற பெயர்களும் உண்டு. இந்த அம்மன் மீது சுந்தரர் தேவார பதிகம் பாடியிருப்பது சிறப்பு. இசைக்கும் இருவர்: ஆனந்த தாண்டவ கோலத்தில் நடராஜர் இருக்கிறார். அவருக்கு கீழே திருமால் சங்கு ஊதிய நிலையிலும், பிரம்மா மத்தளம் இசைத்தபடியும் உள்ளனர் இந்த இசைக்கேற்ப சிவன் நடனமாடும் சிற்பம் வடிக்கப்பட்டு உள்ளது. இசை, நடனம் படிப்பவர்கள் நடராஜருக்கு அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர். வித்தியாசமான தட்சிணாமூர்த்தி: மற்ற கோவில்களில் ஒரு காலை மடக்கி, ஒரு காலை முயலகன் என்ற அசுரன் மீது மிதித்த நிலையில் தட்சிணாமூர்த்தி காட்சியளிப்பார். இங்கு இரண்டு கால்களையும் மடக்கி அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். கீழே முயலகன் இல்லை. சீடர்கள் மட்டும் உள்ளனர். விவசாய தம்பதி உணவு படைத்த போது, சிவன் தரையில் இரு கால்களையும் மடக்கி அமர்ந்து சாப்பிட்டதன் அடிப்படையில் தட்சிணாமூர்த்தி இக்கோலத்தில் இருப்பதாகக் கூறுகின்றனர். குறைவின்றி உணவு கிடைக்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.மனைவியுடன் கணக்கர்: கோவிலுக்கு வரும் பக்தர்களின் குணத்தை கணக்கிடுபவராக சண்டிகேஸ்வரர் உள்ளார். இவர், தன் மனைவி சண்டிகேஸ்வரியுடன் இருப்பது வித்தியாசமானது. சிவன் அமர்ந்த மரம்: வலம்புரி விநாயகர் தனி சன்னதியில் இருக்கிறார். பிரதோஷ நந்திக்கு முன்னர் 35 துவாரம் கொண்ட, கல்ஜன்னல் காண்போரை கவர்கிறது. சன்னதி சுற்றுச்சுவரில் உள்ள லிங்கோத்பவர் அருகில் பெருமாள், பிரம்மா வணங்கிய நிலையில் உள்ளனர். நிருத்த விநாயகர் புடைப்புச்சிற்பமாக காட்சி தருகிறார். கொன்றை மரம் பிரகாரத்தில் மூன்று நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கி உள்ளது. கோபுரத்திற்கு வெளியே பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் இருப்பது வித்தியாசமான அமைப்பு. கோவிலுக்கு வெளியே 'ஜாம்புவ தடாகம்' என்ற குளம் உள்ளது. எப்படி செல்வது: கடலூர் - ஆலம்பாக்கம் வழியில் 18 கி.மீ., தூரத்தில் தீர்த்தனகிரி.நேரம்: காலை 6:00 - 12:00 மணி, மாலை 5:00 - 8:00 மணிதொடர்புக்கு: 94434 34024