கண்ணுக்கு மை தீட்டிய கடவுள்
UPDATED : ஏப் 06, 2017 | ADDED : ஏப் 06, 2017
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகிலுள்ள ஆஸ்ராமம் என்ற ஊரில் அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா என்னும் பெயரில் ஐயப்பன் அருள்பாலிக்கிறார். கண்ணில் மை தீட்டிய இவரை, அவரது பிறந்த நாளான பங்குனி உத்திரநாளில் தரிசித்து வரலாம்.தல வரலாறு: சாஸ்தாவைக் குல தெய்வமாகக் கொண்ட சிலர், சிலை ஒன்றை ஒரு குளக்கரையில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். சுவாமியின் பெருமையைக் கேள்விப்பட்ட கண் தெரியாத பக்தர் தரிசிக்க வந்தார். தன் மனக்கண்ணால் சுவாமியைத் தரிசித்து விட்டு, இரவில் சிலை முன் படுத்திருந்தார். அங்கு வந்த சாஸ்தா, பக்தரின் கண்களில் மையைத் தடவினார். பக்தர் திடுக்கிட்டு எழுந்ததும், தனக்கு பார்வை வந்ததை உணர்ந்தார். ஆனால் சாஸ்தாவைக் காணவில்லை. 'அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தாவே'(மை தீட்டிய மணிகண்டனே!) எனக்கு காட்சி தரமாட்டாயா!'' என கூவி அழைத்தார். அவர் அழைத்த பெயரே சுவாமிக்கு நிலைத்து விட்டது. அபூர்வ வடிவம்: சாஸ்தா இரண்டு கால்களையும் குத்திட்டு அமர்ந்த நிலையில் காட்சியளிப்பது வழக்கம். ஆனால், இங்கு வலது காலைக் குத்திட்டு, இடது கால் பெருவிரலை தரையில் ஊன்றிய நிலையில் பீடத்தின் மீது அமர்ந்திருக்கிறார். வலது கையில் கதாயுதம் உள்ளது. மார்பில் பதக்கமும், பூணுாலும் அணிந்திருக்கிறார். சுருள்முடியைக் கொண்டையாக சுருட்டி முடிந்திருக்கிறார். இத்தகைய கோலத்தில் சாஸ்தாவை தரிசிப்பது அபூர்வம். எதிரில் யானை, குதிரை வாகனங்கள் உள்ளன. இவரை வழிபட்டால் கண் நோய்கள் குணமாகும்.ஊர் பெயர்க்காரணம்: அத்திரி மகரிஷி, தன் மனைவி அனுசூயாவுடன் இப்பகுதியில் ஆஸ்ரமம் அமைத்து தங்கியிருந்தார். அனுசூயா, தினமும் தன் கணவரின் பாதம் கழுவிய தீர்த்தம் குடித்த பிறகே, தன் கடமையைத் தொடங்குவாள். அவளது பதிபக்தியை உலகறியச் செய்ய விரும்பிய சிவன், திருமால், பிரம்மா ஆகியோர் துறவி வடிவில் வந்தனர். தங்களுக்கு அனுசூயா நிர்வாண நிலையில் உணவிட வேண்டுமென நிபந்தனை விதித்தனர். சற்றும் கலங்காத அனுசூயா, கணவரின் பாத தீர்த்தத்தை மும்மூர்த்திகள் மீது தெளிக்க அவர்கள் குழந்தைகளாக மாறினர். அதன் பின் அவர்களுக்கு பாலூட்டினாள். கணவன்மார் குழந்தைகளாக மாறிவிட்டதை அறிந்த சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய மூவரும் தங்களுக்கு தாலிப்பிச்சை அளிக்குமாறு அனுசூயாவிடம் வேண்டினர். குழந்தைகளின் மீது அனுசூயா மீண்டும் தீர்த்தத்தை தெளித்தாள். மும்மூர்த்திகள் தங்களின் இயல்பான வடிவத்தை அடைந்தனர். அவர்கள் தாணுமாலயன் (தாணு சிவன், மால் திருமால், அயன் பிரம்மா) என்னும் பெயரில் சுசீந்திரத்தில் அருள்பாலிக்கின்றனர். அத்திரி மகரிஷியின் ஆஸ்ரமம் அமைந்த இப்பகுதியே 'ஆஸ்ராமம்' எனப்படுகிறது. மூன்று வில்வமரம்: பிரகாரத்தில் மாடன் தம்பிரான், பூதத்தார், ஈனன், வன்னியர் ஆகிய காவல் தெய்வங்கள் உள்ளனர். இங்குள்ள மூன்று வில்வ மரக் கொத்துக்களில் ஒன்றில் 3, மற்றொன்றில் 5, இன்னொன்றில் 9 என்ற எண்ணிக்கையில் இலைகள் உள்ளன. அத்திரி முனிவர் உருவாக்கிய 'யாக குண்ட தீர்த்தம்' கோவிலுக்கு வெளியே உள்ளது. உத்திர நட்சத்திரம், கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியன்று சிறப்பு வழிபாடு நடக்கும்.இருப்பிடம்: நாகர்கோவில் - கன்னியாகுமரி சாலையில் 5 கி.மீ.,நேரம்: காலை 7:00 - 11:00 மணி, மாலை 6:00 - இரவு 7:00 மணிஅலைபேசி: 94860 53284.