உள்ளூர் செய்திகள்

கவலையை தீர்ப்பார்... கல்யாண வீரபத்திரர்

பிள்ளைகளுக்கு திருமணம் நடக்கவில்லையே... மகளுக்கு நல்லபடியாக சுகப்பிரசவம் நடக்குமா... என ஏக்கத்தில் இருக்கிறீர்களா. கவலைப்படவேண்டாம். ஆந்திர மாநிலம் சித்துாரில் உள்ள சத்தியவேடு ஊருக்கு வாருங்கள். இங்குள்ள கல்யாண வீரபத்திரர் உங்களது கவலையை தீர்ப்பார். பல நுாற்றாண்டுகளுக்கு முன்பு இங்குள்ள பக்தர்கள் வீரபத்திரருக்கு கோயில் கட்ட விரும்பினர். சிலை செய்யும் பணி சிற்பி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பணி முடிந்து சிலையை மாட்டுவண்டியில் ஏற்றி சத்தியவேடு வந்த போது, வண்டியின் அச்சு முறிந்தது. சிலையை இறக்கி வைத்து சக்கரத்தை சரி செய்தனர். பின் சிலையை துாக்க முயன்ற போது அதை அசைக்கவே முடியவில்லை. அப்போது அசரீரியாக, 'இங்கேயே என்னை பிரதிஷ்டை செய்யுங்கள்' என ஒலித்தது. அதன்படி கோயிலும் உருவானது. இங்கு வீரபத்திரர் தெற்கு நோக்கி காட்சி தருகிறார். இதனால் இவர் 'குரு வீரபத்திரர்' என அழைக்கப்படுகிறார். தெற்கு திசை என்பது சிவபெருமானின் குரு அம்சமான தட்சிணாமூர்த்திக்கு உரியது. கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெற வியாழக்கிழமைகளில் இவருக்கு கொண்டைக்கடலை மாலை அணிவிக்கின்றனர். இவரது சன்னதி எதிரில் நந்தி உள்ளது. இந்த நந்தியை எந்த திசையை நோக்கியும் திருப்பலாம். சுகப்பிரசவம் ஆக இந்த நந்தியிடம் வேண்டுவது சிறப்பு. இதற்காக கர்ப்பிணிகள் வர வேண்டிய அவசியமில்லை. அவர்களின் வீட்டிலிருந்து ஒருவர் வந்து நந்திக்கு பூஜை செய்தால் போதும். பிறகு தங்களது வீடு இருக்கும் திசையை நோக்கி நந்தியை திருப்பி வைக்க வேண்டும். இப்படி செய்தால் சுகப்பிரசவம் ஆவதுடன், குழந்தையும் நல்ல உடல்நலத்துடன் இருக்கும். இதனால் இந்த நந்தியை 'சந்தான நந்தீஸ்வரர்' என அன்போடு அழைக்கின்றனர்.குழந்தை இல்லாதவர்களும் இதே பூஜையை செய்தால் விரைவில் நல்ல செய்தி வரும். வீரபத்திரர் சன்னதி முகப்பில் வரசித்தி விக்னேஸ்வரர், வேல்முருகன், பிரகாரத்தில் வர சித்தேஸ்வரர், மங்கள கவுரியம்பாள், தட்சிணாமூர்த்தி, நாகர், நவக்கிரக சன்னதிகள் உள்ளன. மஹா சிவராத்திரியின்போது மூன்று நாள் விழா இங்கு நடக்கிறது. அன்று இரவு வீரபத்திரருக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். எப்படி செல்வது: சென்னையில் இருந்து 60 கி.மீ., விசேஷ நாள்: சித்ரா பவுர்ணமி திருக்கார்த்திகை, மஹா சிவராத்திரிநேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 4:00 - 8:30 மணிதொடர்புக்கு: 97046 49796அருகிலுள்ள தலம்: சுருட்டப்பள்ளி பள்ளி கொண்டீஸ்வரர் கோயில் 17 கி.மீ., நேரம்: காலை 6:00 - 12:30 மணி; மாலை 4:00 - 8:00 மணிதொடர்புக்கு: 08576 - 278 599