சொர்க்கமும் நரகமும் உன்வசமே நான் சொல்வதை உன்மனம் கேட்கட்டுமே!
யோசிக்க சொல்கிறார் மாதா அமிர்தானந்தமயி* மதத்தின் மொழி அன்பு. ஆனால், இந்த மொழியை நவீன உலகம் மறந்துவிட்டது. இதுவே இன்றைய உலகில் ஏற்படும் பிரச்னைகள் அனைத்துக்கும் மூலகாரணமாக உள்ளது. எனவே, அனைவரிடமும் அன்பை போதிக்க வேண்டும்.* மனித சமுதாயத்தின் துன்பத்தை நீக்கும் மருந்தாக மதம் அமைய வேண்டுமானால் அகங்காரத்தையும், பகைமையையும் வளர்க்கக்கூடாது.* 'நான், எனது' என்ற எண்ணம், நம் மனதைப் பற்றுடையதாக்கி, பார்வையை மறைக்கிறது. உண்மையான மதத்தத்துவங்களைக் கடைப்பிடிப்பதால் மட்டுமே அகங்காரம் நீங்கும்.* சுயநலத்தோடு கூடிய அன்பைப் பற்றியே நாம் அறிந்திருக்கிறோம், இந்தக் குறுகிய மனப்பான்மையை ஒழித்து, தெய்வீக அன்பாக மாற்றுவதே மதத்தின் லட்சியமாக இருக்க வேண்டும்.* உண்மையான அன்பு முழுமையடையும் போது, அதிலிருந்து அழகான வாசனை கமழும் கருணையாகிய மலர் மலர்கிறது.* நம் உள்ளமாகிய குளம் எண்ண அலைகளால் அமைதியற்று இருக்கிறது. மனதின் எண்ண அலைகள் மறையும் போது ஒளிர்விடும் செயல்களுக்கு அப்பாற்பட்ட ஆதாரம் தான் மதங்களின் கருத்தாகும்.* திருப்தியும், மகிழ்ச்சியும் நம்மைத் தேடி வந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது. அதனை அடைய முயற்சிக்க வேண்டும்.* கடவுள் எந்த வரையறைக்கும் உட்பட்டவரல்ல. அவர் எங்கும் நிறைந்தவர். சர்வ வல்லமை பொருந்தியவர். அனைத்தும் அறிந்த இறைவனே வாழ்வின் ஆதாரம். நம் உள்ளே இருக்கும் உணர்வின் ஒளியான இறைவன் ஆனந்த வடிவமானவர். அவரே நம் ஆத்மாவாக உள்ளார்.* கடவுள் எங்கும் நிறைந்துள்ளதால் கண்ணால் அவரை காணமுடியவில்லை. ஆற்றல் எங்கும் நிறைந்திருந்தாலும் மின்கம்பி வழியே மின் ஆற்றல் இயங்குகிறது. அதுபோல் இறைவனை அனுபவத்தின் வாயிலாக மட்டும் அறிய முடியும்.* சொர்க்கமும் நரகமும் உள்ளத்தால் உருவாக்கப்படுகிறது. அவை உன் வசத்தில் தான் உள்ளன. மனம் நிம்மதியின்றி இருந்தால் மிக உயர்ந்த சொர்க்கமும் நரகமாகத்தான் இருக்கும். ஆனால், அமைதியும், பதட்டமும் இல்லாத உள்ளமிருந்தால் மிகக் கொடிய நரகம் கூட மிகவும் மகிழ்ச்சி தரும் இடமாக இருக்கும். நான் சொல்லும் இந்தக் கருத்தை மனதில் அசைபோட்டு பாருங்கள்.* மாறுபடும் கூறுகள் நிறைந்த இவ்வுலகில் எப்படி மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வது என்பதைக் கற்றுத் தரும் விஞ்ஞானமே மதம்.* ஆயிரக்கணக்கானவர்கள் இன்று மதத்திற்காக உயிர் துறக்கத் தயாராக உள்ளனர். ஆனால், மதக் கோட்பாடுகளுக்கு ஏற்ப வாழ யாரும் தயாராக இல்லை. மதம் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியது என்பதை மனிதர்கள் உணராமல் மறந்துவிடுகின்றனர்.* அனைத்து விதமான மனிதாபிமானம் இல்லாத செயல்களையும் எதிர்த்து சிறந்த மனிதத்தன்மை நிலவச் செய்ய நாம் மேற்கொள்ளும் கூட்டு முயற்சிக்கு நமது வெவ்வேறு மத, கலாசார, பழக்க வழங்கங்கள் தடையாக இருக்கக்கூடாது.