ஜாதகம் சரியில்லையா! சாதகமாக்க திருப்புடைக்கு வாங்க!
திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூரில் நாறும்பூநாத சுவாமி என்ற பெயரில் சிவன் கோவில் கொண்டிருக்கிறார். காசிக்கு நிகரான இத்தலத்தில் சற்று சாய்ந்த நிலையில் சிவன் காட்சியளிக்கிறார். ஜாதக ரீதியாக கிரகநிலை சரியில்லாதவர்கள் நவ.26ல் நடக்கும் மகாபிரதோஷ விழாவில் பங்கேற்கலாம்.தல வரலாறு: ஒரு சமயம் சிவனிடம், தேவர்கள் காசிக்கு நிகரான தலத்தைக் காட்டுமாறு வேண்டினர். சிவனும் அத்தலத்தை அறிய, ஒரு பிரம்மதண்டத்தை (கம்பு) வானிலிருந்து கீழே போடும்படி கட்டளையிட்டார். தேவர்களும், பிரம்ம தண்டத்தைக் கீழே போட, அது தாமிரபரணி ஆற்றில் விழுந்தது. அது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு திருப்புடைமருதூர் என்னும் தலத்தில் கரை ஒதுங்கியது. அந்த இடமே காசிக்கு ஒப்பானது என்று சிவன் கூற, தேவர்கள் இத்தலத்தை வந்தடைந்தனர். பிரம்ம தண்டத்திற்கு பூஜை செய்து சிவனருளைப் பெற்றனர்.பிற்காலத்தில், இப்பகுதியை வீரமார்த்தாண்ட மன்னர் ஆட்சி செய்து வந்தார். அப்போது மருதமரங்கள் நிறைந்த வனமாக இப்பகுதி இருந்தது. அங்கு ஒருநாள் வேட்டைக்கு வந்த மன்னர், மான் ஒன்றைக் கண்டு, அதனை அம்பினால் வீழ்த்த முயன்றார். காயம்பட்ட மான் அங்கிருந்து தப்பியோடி ஒரு மருத மரத்தின் பொந்தில் சென்று மறைந்தது. மானை மீட்க, அந்த மரத்தை வெட்டும்படி மன்னர் உத்தரவிட்டார். அதன்படி, கோடரியால் மரத்தை வெட்ட அங்கிருந்து ரத்தம் பீறிட்டது. அந்த இடத்தில் வெட்டுப்பட்ட நிலையில் சிவலிங்கம் ஒன்று காட்சியளித்தது. மான் வடிவில் வந்து அருள்புரிந்தவர் சிவன் என அசரீரி வானில் ஒலித்தது. இதனால் தான் சிவனின் கையில் மான் இருக்கிறது. இந்த இடத்தில் சிவபெருமானுக்கு கோவில் அமைக்கப்பட்டது. சாய்ந்த சிவலிங்கம்: சிவபக்தரான கருவூர் சித்தர், சிவனை தரிசிக்க இங்கு வந்தார். தாமிரபரணியின் மறுகரையில் கோவில் இருந்தது. ஆற்றைக் கடந்தால் தான் கோவிலுக்கு செல்ல முடியும். ஆனால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கரையில் இருந்து கொண்டே மனமுருகி வழிபட்டார். மறுகரையில் மலர்கள் பூத்துக் குலுங்கும் மருத வனத்தின் நடுவில் சிவன் வீற்றிருக்கும் காட்சியைக் கண்ட சித்தர், 'நாறும்(மணக்கும்) பூவின் நடுவே நிற்பவனே! உன்னை தரிசிக்க எனக்கு அருள்புரிவாயா' என வேண்டிப் பாடினார். அவரது பாடலை ரசிக்க விரும்பிய சிவன், தனது இடதுகாதில் கை வைத்து ஒருபுறம் சாய்வாக திரும்பினார். பின்னர் சித்தரிடம், “என்னை மனதில் நினைத்தபடியே ஆற்றில் இறங்கி நட' என்றார். கருவூராரும் அப்படியே செய்து, ஆற்றைக் கடந்து சிவனை பூஜித்து மகிழ்ந்தார். சித்தரின் பாடலைச் செவி சாய்த்ததால், இங்குள்ள சிவலிங்கம் இடப்புறம் சாய்ந்த நிலையில் உள்ளது. இந்நிகழ்ச்சியின் அடிப்படையில் சுவாமிக்கு 'நாறும்பூநாதர்' என்ற பெயரும் ஏற்பட்டது.காயம் ஆற தைலம்: மூலவர் நாறும்பூநாதசுவாமியின் தலையில் வெட்டுப்பட்ட தடம் இருக்கிறது. காயத்தை ஆற்றும் விதத்தில் தினமும் சந்தனாதி தைலம் பூசிய பின்னரே பூஜை நடக்கிறது. சுவாமிக்கு முன் வலதுபுறத்தில் பிரம்ம தண்டம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தனி சன்னிதியில் கோமதியம்மன் அருள்பாலிக்கிறாள். இந்த அம்பிகை சிலை உத்தரப்பிரதேசத்திலுள்ள கோமதி நதியில் கண்டெடுக்கப்பட்டதாகும். இத்தல விநாயகர் அனுக்கை விநாயகர் என்ற பெயருடன் அருள்பாலிக்கிறார். இவருக்கு சுத்தான்னம் (வெள்ளைச் சோறு) நைவேத்யமாக படைக்கப்படுகிறது. உற்சவர் சிவன் பூநாதர் என அழைக்கப்படுகிறார். இங்குள்ள நடராஜர் சிலை ஓம் வடிவ திருவாசியுடன் அமைந்துள்ளது.இந்திரனின் சிவபூஜை: வியாழபகவானை குருவாக ஏற்றிருந்த இந்திரன், அவர் தன்னை மதிக்காமல் இருந்ததாக கருதி புறக்கணித்தான். அதன்பின் விஸ்வரூபன் எனும் அசுரனை தேவர்களின் குருநாதர் ஆக்கினான். அவன் தேவர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், அசுரர்களின் நலனுக்காக யாகம் நடத்தினான். இதை அறிந்த இந்திரன் விஸ்வரூபனைக் கொன்று விட்டான். கொலை பாவத்தால், இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதைப் போக்க அவன் நாறும்பூநாத சுவாமியை வழிபட வந்தான். தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள சுரேந்திர மோட்ச தீர்த்தத்தில் நீராடி சிவபூஜை செய்து நல்வாழ்வு பெற்றான்.திருவிழா: இந்தக் கோவிலில் மகாராஷ்டிரா மாநிலம் ஷேகான் கஜானன் மகராஜ் ஆசியுடன் மகாபிரதோஷ வழிபாடு, நவ.26, மாலை 4:30 மணிக்கு துவங்குகிறது. சுவாமியை செண்பகம், தாமரை, மனோரஞ்சித மலர்களால் மட்டும் அலங்கரிப்பர். ஜாதக ரீதியாக கெடுபலன் உள்ளவர்கள் இதில் பங்கேற்றால் அவர்கள் நிலையே மாறிப் போகும் என்பது ஐதீகம்.இருப்பிடம்: திருநெல்வேலி - பாபநாசம் சாலையில் 30 கி.மீ., தூரத்தில் வீரவநல்லூர். இங்கிருந்து பிரியும் சாலையில் 8 கி.மீ., தூரத்தில் வீரவநல்லூர்.நேரம் : அதிகாலை 5:00 - 11:00, மாலை 4:00 - இரவு 8:00 மணி அலைபேசி : 99943 44841