பணம் கையில் தங்கணுமா! நிதீஸ்வரரை வணங்குங்க!
குபேரன் தனக்கு நிதி வேண்டி சிவனை வணங்கிய தலம் திண்டிவனம் அருகிலுள்ள அன்னம்புத்தூர் நிதீஸ்வரர் கோவிலாகும். உழைத்து சேர்த்த பணம் கையில் தங்க, தீபாவளியை ஒட்டி இவரது அருள் வேண்டி வணங்கலாம்.தல வரலாறு: பிரம்மாவும், திருமாலும் இருவருமே தங்களில் உயர்ந்தவர் யார் என்ற சர்ச்சையில், சிவனிடம் தீர்ப்பு கேட்டனர். தனது பாதங்களையும், முடியையும் யார் கண்டு வருகிறார்களோ அவர் தான் பெரியவர் என சிவன் கூற, திருமால் வராகமாக மாறி திருவடியை நோக்கி சென்றார். பிரம்மா அன்னமாக மாறி முடியைக் காண பறந்தார். இருவராலும் வெற்றி பெற முடியவில்லை. இருப்பினும், பிரம்மா முடியைக் கண்டு விட்டதாக பொய் சொல்ல அவரை அன்னமாகவே மாற்றி விட்டார் சிவன். பாவ விமோசனமாக, இத்தலத்திற்கு வந்து பொய்கை ஒன்றை உருவாக்கி அதன் நீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்து, மீண்டும் சுயரூபம் பெற்றதுடன், இழந்த படைப்புத் தொழிலையும் மீட்டார். பிரம்மா அன்னமாக வந்து புதுவாழ்வு பெற்றதால் இவ்வூர் அன்னம்புத்தூர் என பெயர் பெற்றது. பதுமநிதி, மகாபதுமநிதி, மகா நிதி, கச்சபநிதி, முகுந்தநிதி, குந்த நிதி, நீல நிதி, மற்றும் சங்க நிதி போன்ற எட்டு வகை செல்வங்களுக்கு தலைவன் குபேரன். அவன் தனது செல்வம் நிலைக்க இவ்வூர் சிவனை வேண்டியதால், சிவனுக்கு நிதீஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது. வழிபாட்டு முறை: உழைத்த பணம் கையில் தங்கவும். கடன் தொல்லையில் இருந்து விடுபடவும், மன அமைதி, வீடு வாகன யோகம், திருமண பாக்கியம், சந்தான விருத்தி, தொழில் விருத்தி, வேலை வாய்ப்பு, உத்தியோக உயர்வு பெறவும், வெள்ளிக்கிழமை, பூசம் நட்சத்திரம், பவுர்ணமி, அட்சய திரிதியை, தீபாவளி ஆகிய நாட்களில், நிதீஸ்வரருக்கு சுவர்ண புஷ்ப அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர். குழந்தை வரம் வேண்டி வரும் தம்பதிகள் வெண்ணெய் கொண்டு வந்து, இங்குள்ள கனக திரிபுர சுந்தரி அம்மன் பாதத்தில் வைத்து பிரசாதமாகப் பெறுகிறார்கள். அதை இருவரும் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பொன், பொருள் விருத்தி அடைய கார்த்திகை மாதம் வளர்பிறை திரிதியை அன்று அம்பாளுக்கு அர்ச்சனை செய்கின்றனர். குரு பரிகாரதலம்: கருவறை சுவரில் உள்ள பிரம்மாவுக்கு வியாழக்கிழமை பரிகார பூஜை செய்தால் திருமணத்தடை நீங்குதல், புத்திரப்பேறு, வியாபார விருத்தி ஆகிய பாக்கியங்கள் கிடைக்கும். இங்குள்ள கல்யாண சுப்பிரமணியருக்கு மாலை அணிவித்தால் விரைவில் திருமணம் கைகூடும். லட்சுமி கணபதி, கால பைரவர், தன ஆகர்ஷண பைரவர் சன்னிதிகளும் இங்கு உள்ளன. நேரம்: காலை 6:00 - 11:00 மணி, மாலை 5:00 - இரவு 8:00 மணி.இருப்பிடம் : திண்டிவனம் - புதுச்சேரி சாலையில் 11 கி.மீ. தூரத்தில் அன்னம்புத்தூர். அலைபேசி: 70105 28137, 94440 36534, 89391 29293.