உள்ளூர் செய்திகள்

ராஜா சிவன்! ராணி சிவன்!

ஒரே கோயிலில் ராஜா, ராணி சிவன் பார்க்க வேண்டுமா... கர்நாடக மாநிலம் ஹளபேடு ஹோய்சாளேஸ்வரர் கோயிலுக்கு போங்க... பதினோராம் நுாற்றாண்டில் ஹோய்சாளர்கள் ஆட்சி செய்தனர். தலைநகரான ஹளபேட்டைச் சுற்றிலும் சிவன், மகாவிஷ்ணுவுக்கு 150 கோயில்களைக் கட்டினர். இதில் ஹோய்சாளேஸ்வரர் கோயில் பிரசித்தி பெற்றது. இதைக் கட்ட 80 ஆண்டுகள் ஆனது. அவர்களின் பரம்பரை பெயரால் எழுப்பப்பட்ட கோயில் இது. மன்னர் விஷ்ணுவர்த்தனின் அமைச்சரான கெட்டுமல்லா என்பவரின் தலைமையில் திருப்பணி நடந்தது. இரண்டு பிரதான சன்னதிகள் இங்குள்ளன. முதல் சன்னதியில் 'ஹோய்சாளேஸ்வரர்' என்னும் பெயரில் சிவன் இருக்கிறார். இந்த சன்னதி முன்புள்ள நவரங்க மண்டபம் கலைநயம் மிக்கது. இதை ஒட்டி சாந்தளேஸ்வரர் சன்னதி உள்ளது. ஹோய்சாள மன்னர்களில் ஒருவரான விஷ்ணுவர்த்தனின் மனைவி ராணி சாந்தளாதேவியின் பெயரால் இந்த சன்னதி உள்ளது. இவரது சன்னதியில் மட்டும் பக்தர்களுக்கு தீர்த்தம் தரப்படுகிறது. கோயில் வாசலில் விநாயகர் கம்பீரமாக வீற்றிருக்கிறார்மகாகாளர், நந்தி, என்னும் துவாரபாலகர்கள் காவல் தெய்வங்களாக உள்ளனர். இவர்கள் திரிசூலம், உடுக்கை ஏந்தி சிவனின் அம்சத்தில் காட்சி தருகின்றனர். ஹோய்சாளேஸ்வரர், சாந்தளேஸ்வரர் சன்னதிக்கு எதிரில் நந்தி மண்டபங்கள் உள்ளன. கலைநயம் மிக்க துாண்களின் நடுவில் கருங்கல் நந்தி உள்ளது. பிரகாரத்தில் உள்ள சிற்பங்களில் உக்ர நரசிம்மர், கோவர்த்தனகிரி கிருஷ்ணர், ராம லட்சுமணர், தேரோட்டும் கிருஷ்ணர் சிறப்பானவை.எப்படி செல்வது: மைசூருவில் இருந்து 120 கி.மீ., தொலைவில் ஹாசன். அங்கிருந்து 39 கி.மீ.,விசேஷ நாள்: திருக்கார்த்திகையன்று தேர், மகாசிவராத்திரி, மகாபிரதோஷம்நேரம்: காலை 6:00 - மாலை 6:00 மணிதொடர்புக்கு: 098803 - 19949அருகிலுள்ள தலம்: ஹசன் சென்னகேஸ்வரர் கோயில் 31 கி.மீ.,