பிரிந்த துணையுடன் இணைய! புரட்டாசி சனியன்று புறப்படுங்க!
கணவர் அல்லது மனைவியுடன் கருத்து வேறுபாட்டால் பிரிந்திருக்கிறீர்களா? விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு வாருங்கள். தம்பதி ஒற்றுமைக்கு வழிவகுக்கும் இத்தலத்தை புரட்டாசி சனியன்று தரிசிப்போம். தல வரலாறு: இரணியன் என்ற அசுரனின் மகன் பிரகலாதன். அசுர குலத்தில் பிறந்தாலும், விஷ்ணு பக்தனாக இருந்தான். ஆனால் இரணியன் தன்னையே கடவுளாக கருதி வணங்கும்படி நாட்டு மக்களுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தான். இதை பிரகலாதன் ஏற்கவில்லை. எனவே அவனை பல வகைகளிலும் துன்புறுத்தினான். தன் பக்தனுக்கு இரண்யன் தீங்கு செய்ததைக் கண்ட திருமால் வெகுண்டெழுந்தார். மனித உடலும், சிங்கத் தலையும் கொண்ட நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனைக் கொன்றார். 'நரன்' என்றால் 'மனிதன்'. 'சிம்மம்' என்றால் சிங்கம். நரசிம்மரின் கோபம் கண்டு உலகமே நடுங்கியது. இதையறிந்த மார்க்கண்டேய மகரிஷி, நரசிம்மரை சாந்தப்படுத்தும்படி லட்சுமியை வேண்டினார். தாயாரும் நரசிம்மரைச் சாந்தப்படுத்தினாள். பின் அவளைத் தன் மடியில் ஏந்தி லட்சுமிநரசிம்மராக காட்சியளித்தார். இதன் அடிப்படையில் லட்சுமி நரசிம்ம வழிபாடு உருவானது. இந்த தலத்தில், நரசிம்மர் சாந்தமூர்த்தியாக மக்களுக்கு அருள்புரிய வேண்டுமென மகாலட்சுமி, அவரை வணங்கிய நிலையில் வீற்றிருக்கிறாள். லட்சுமிக்கு இங்கு முக்கியத்துவம் என்பதால் இக்கோவிலை 'நரசிம்ம லட்சுமி' கோவில் என்று அழைக்கின்றனர். சங்கு சக்கர ஆஞ்சநேயர்: புராண காலத்தில் திண்டிவனம் புளியமரக் காடாக இருந்தது. சமஸ்கிருதத்தில் 'திந்திருணி' என்பது புளியமரத்தை குறிக்கும். 'திந்திருணி வனம்' என்பது மருவி தற்போது திண்டிவனமாக மாறியது. திந்திருணி வனத்தில் இருந்த திண்டி, முண்டி, கிங்கிலி, கிலாலி என்ற அரக்கர்கள், இப்பகுதியில் தவம் செய்த முனிவர்களை கொடுமைப்படுத்தினர். அரக்கர்களிடமிருந்து தங்களை காக்க வேண்டி முனிவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். இவர்களது வேண்டுதலை ஏற்ற பெருமாள், அரக்கர்களை அழித்து முனிவர்களைக் காப்பதற்காக தன்னிடம் இருந்த சங்கு, சக்கரத்தை அனுமனிடம் கொடுத்து போருக்கு அனுப்பி வைத்தார். அனுமனும் அரக்கர்களை அழித்து முனிவர்களின் வேள்வி தடையின்றி நடக்க அருள்புரிந்தார். இதனால் இத்தலத்தில் உள்ள அனுமன் சங்கு சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார். கோவில் அமைப்பு: கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் உள்ள இக்கோவிலின் கொடிமரம் அருகில் நரசிம்மரை வணங்கியபடி கருடாழ்வார் உள்ளார். மூலவர் லட்சுமி நரசிங்கப்பெருமாள் அமர்ந்த கோலத்தில், தனது இடது தொடைமீது லட்சுமியை அமரச் செய்துள்ளார். கனகவல்லித் தாயார் தனி சன்னிதியில் வீற்றிருக்கிறாள். உற்சவர் வரதராஜப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். ரங்கநாதர், கோதண்ட ராமர், வேணு கோபால், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன. பரிகாரத் தலம்: சாந்த மூர்த்தியாக தாயாருடன் காட்சிதரும் இத்தல நரசிம்மரை புரட்டாசி சனியன்று வணங்கினால் கணவன், மனைவி இடையே உள்ள பிரச்னைகள் தீர்ந்து இணக்கம் அதிகரிக்கும். கடன் தொல்லை விரைவில் நீங்கும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைபட்டவர்கள் பரிகார பூஜை செய்கின்றனர். திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திரத்தினர், ராகு திசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், சனி தோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர். திருவிழா: வைகாசி பிரமோற்ஸவம்இருப்பிடம்: விழுப்புரம் - சென்னை சாலையில் 40 கி.மீ.,நேரம்: காலை 7:30 - மதியம் 12:00, மாலை 5:00 - இரவு 9:00 மணி.அலைபேசி: 99432 40662.