உள்ளூர் செய்திகள்

ஆயுள்விருத்தி தரும் குபேரர்

பூசம் நட்சத்திரத்தன்று வழிபட்டால், ஆயுள் விருத்தி தரும் தெற்கு நோக்கிய குபேரர், விழுப்புரம் திருநகர் மகாலட்சுமி கோவிலில் அருள்பாலிக்கிறார்.தல வரலாறு: செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமிக்கு கோவில் அமைக்க இப்பகுதி மக்கள் விரும்பினர். 'திரு' என்றால் மகாலட்சுமி, எனவே 'திருநகர்' என்று பெயரமைந்த பகுதியில் கோவில் கட்டப்பட்டது.தல சிறப்பு: இத்தல மகாலட்சுமி முன்னிரு திருக்கரத்தில் அபய வரத முத்திரையுடனும், பின்னிரு திருக்கரங்களில் தாமரை மொட்டும் ஏந்தி சதுர்புஜத்தில், பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் கிழக்கு பார்த்து அருள்பாலிக்கிறாள். பங்குனி உத்திரத்தன்று தாயாருக்கும், சீனிவாச பெருமாளுக்கும் திருக்கல்யாணம் நடத்தப்படும்.திருக்கல்யாணத்தின் மறுநாள் திருமணம் ஆகாத ஆண்களுக்கும், பெண்களுக்கும் காப்பு கட்டப்படும். இதனால் திருமணத்தடை நீங்கும்.தெற்கு பார்த்த குபேரன்: செல்வம் தரும் குபேரனுக்குரிய திசை வடக்கு. ஆனால் இங்கு தனது துணைவி சித்ரலேகாவுடன் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். தெற்கு நோக்கிய குபேரன் ஆயுள் விருத்தியைத் தருவார். பூசம் நட்சத்திரத்தன்று குபேர பூஜை நடக்கிறது.கோவில் அமைப்பு: பிரகாரத்தில் தும்பிக்கையாழ்வார், அஷ்டலட்சுமி, கருடாழ்வார், சீனிவாசப்பெருமாள், சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர் அருள்கின்றனர். பள்ளியறையில் உற்சவ மகாலட்சுமி ஊஞ்சலில் அமர்ந்திருக்கிறாள். கோபுரத்தில் குபேர லட்சுமியும் அவர்களது வாகனமாக குதிரை, முதலை ஆகியவையும் சுதை வடிவில் உள்ளன. காலை 7 மணிக்கு மகாலட்சுமி மீது சூரியனின் ஒளிக்கதிர் படர்கிறது. இருப்பிடம்: விழுப்புரம்புதுச்சேரி சாலையில் 3 கி.மீ. தூரத்தில் கோவில் உள்ளது.நேரம்: காலை 6:30 - 10:30, மாலை 5:30 - 8:30 மணிஅலைபேசி : 98843 27379, 97517 99423