உள்ளூர் செய்திகள்

மருதாணி பூசும் மதனவல்லி

மதுரை மதனகோபால சுவாமி கோயிலிலுள்ள மதனவல்லித்தாயாருக்கு மருதாணி அரைத்து பூசினால் லட்சுமி கடாட்சமுடன் வாழும் பாக்கியம் கிடைக்கும்.மதுரையின் மன்னராகப் பொறுப்பேற்க இருந்த சிவன், கடம்பவனத்தில் சுந்தரபாண்டியன் என்னும் பெயரில் தவமிருந்தார். அதனால் எழுந்த உக்கிரம் தாங்க முடியாத தேவர்கள், சிவனை சாந்தப்படுத்தும்படி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர் கடம்ப வனத்திற்கு கிருஷ்ணராக வந்து புல்லாங்குழல் இசைத்தார். இசை கேட்டு மயங்கிய சிவன் சாந்தம் அடைந்தார். அதன்பின் கிருஷ்ணர் 'மதன கோபாலன்' என்னும் பெயரில் பாமா, ருக்மணி சமேதராக மணக்கோலத்தில் இத்தலத்தில் எழுந்தருளினார். இவருக்கு துளசி மாலை அணிவித்து, வெண்ணெய், பாசிப்பருப்பு நைவேத்யம் செய்ய செல்வம் பெருகும். உற்ஸவர் 'சிந்தனைக்கு இனியவன்' என அழைக்கப்படுகிறார்.மதனவல்லித்தாயார் தனி சன்னதியில் கிழக்கு நோக்கி இருக்கிறாள். கடன் தீரவும், ஐஸ்வர்யம் பெருகவும் வெள்ளிக்கிழமையன்று தாயாருக்கு மருதாணி பூசுகின்றனர். பக்தர்கள் அரைத்த மருதாணியைக் கொடுத்தால், அதை தாயாரின் பாதத்தில் பூசி பிரசாதமாக கொடுப்பர். இதை பெண்கள் கையில் வைத்தால் திருமணத்தடை நீங்கும். ஒரு கையில் வெண்ணெய்யும், இடுப்பில் வெண்ணெய்க் குடமும் தாங்கிய கிருஷ்ணர் கருவறையின் முன்மண்டபத்தில் இருக்கிறார். குழந்தைபாக்கியம் பெற வெண்ணெய், சர்க்கரை படைத்து இவரை வழிபடுகின்றனர். திருமணயோகம் தரும் கல்யாண விநாயகர் சன்னதி பிரகாரத்திலுள்ள அரசமரத்தடியில் உள்ளது.இங்குள்ள ஹரிஹர சர்ப்பராஜர் சன்னதி விசேஷமானது. இதன் முன்புறத்தில் மகாவிஷ்ணு, தாயார், கருடாழ்வார், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார் உள்ளனர். பின்புறத்தில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன் உள்ளனர். ஹரி (விஷ்ணு), ஹரன் (சிவன்) என இருவரும் இருப்பதால் 'ஹரிஹர சர்ப்பராஜர்' எனப்படுகிறார். நாகதோஷம் தீர வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் காலை 10:30 - 12:00மணிக்குள் பரிகாரபூஜை செய்கின்றனர். லட்சுமிநரசிம்மர், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், ராமானுஜர், ஆண்டாள், சரஸ்வதி, துர்க்கை, நவக்கிரக சன்னதிகள் உள்ளன.எப்படி செல்வது: மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டுக்கு அருகில் கோயில் உள்ளது. விசேஷ நாட்கள்: கிருஷ்ண ஜெயந்தி, சுதர்சன ஜெயந்தி, ஸ்ரீராமநவமி நேரம்: காலை 8:30 - 12:00 மணி; மாலை 5:00 - 9:00 மணிதொடர்புக்கு: 0452 - 234 9363அருகிலுள்ள தலம்: மதுரை கூடலழகர் பெருமாள் கோயில்