உள்ளூர் செய்திகள்

ஐந்து தலை நாகத்துடன் முருகன்

முருகனின் காலுக்கு அடியில் நாகம் இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் ஐந்து தலை நாகருடன் காட்சி தரும் முருகனை பார்த்திருக்கிறீர்களா... இவரை தரிசிக்க கர்நாடகாவில் தட்ஷிண கன்னடா குக்கி சுப்ரமண்யா கோயிலுக்கு வாங்க. காஷ்யப முனிவரின் மனைவியரான கத்ரு, வினதா இடையே ஒரு போட்டி ஏற்பட்டது. இதில் வெற்றி பெறுவோர் மற்றவருக்கு அடிமையாக வேண்டும் என்பது விதி. போட்டியில் கத்ரு தோற்றதால் அவளும், அவளது குழந்தைகளான நாகங்களும் வினதாவிற்கு அடிமையாயின. வினதாவின் மகனான கருடன் தன் அலகால் கொத்தி நாகங்களை துன்புறுத்தினான். பாற்கடலைக் கடைந்த போது நாணாக இருந்த வாசுகியின் தலைமையில் நாகங்கள் பூலோகம் வந்தன. குமாரதாரா என்னும் ஆற்றங்கரையில் தங்கி சிவபெருமானை வழிபட்டன. காட்சியளித்த சிவன்,''எனது மகன் சுப்பிரமணியனைச் சரணடையுங்கள். அவன் உங்களைக் காத்தருள்வான்'' என வாக்களித்தார். அதன்பின் குமாரதாரா நதியில் நீராடி சுப்பிரமணியரை வழிபடத் தொடங்கின. அதைக் கண்டு மகிழ்ந்த சுப்பிரமணியர் மயிலுடன் காட்சியளித்தார். கருடனின் தாக்குதலில் இருந்து நாகங்களைக் காப்பாற்றினார். இதற்கு நன்றிக்கடனாக ஐந்து தலைகளையும் குடையாக விரித்தபடி வாசுகி நின்றது. இதனடிப்படையில் இங்கு கோயில் கட்டப்பட்டது. புராண காலத்தில் இத்தலம் 'குக்ஷி' எனப்பட்டது. காலப்போக்கில் 'குக்கி' என மாறியது. கந்தபுராணத்தில் உள்ள 'தீர்த்த சேத்ரா மகிமணி ரூபணா' படலத்தில் இங்குள்ள முருகனின் மகிமை உள்ளது. தாரகாசுரனைக் கொன்ற போது வேலில் படிந்த ரத்தத்தை கழுவ குமாரதாரா நதிக்கு சுப்பிரமணியர் வந்தார். இக்கோயிலில் தினமும் 9 கால பூஜை நடக்கிறது. கோயிலை ஒட்டியுள்ள 'பள்ளூஸ்' என்ற இடத்திலுள்ள குகையில் சிவனுக்கும் பார்வதிக்கும் சன்னதி உள்ளது. இத்தலத்தை சுற்றிலும் 113 சிவன் கோயில்கள் உள்ளன. ராகு, கேது, பிரம்மஹத்தி தோஷங்களால் சிரமப்படுபவர்கள், வயிற்று வலி, தோல், மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு நீராடி வழிபடுகின்றனர். பரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவம் தீர இங்கு வந்தார். மகான்களான ஆதிசங்கரர், மத்வாச்சாரியார் இங்கு நீராடி முருகனை தரிசித்துள்ளனர்.எப்படி செல்வது* மங்களூருவில் இருந்து 105 கி.மீ., * பெங்களூருவில் இருந்து 290 கி.மீ., விசஷே நாள்: வைகாசி விசாகம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் நேரம்: காலை 6:00 - 1:30 மணி; மதியம் 3:00 - 8:00 மணி தொடர்புக்கு: 08257- 281 224, 281 700அருகிலுள்ள தலம்: தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோயில் (54 கி.மீ.,)நேரம்: அதிகாலை 5:30 - 12:00 மணி; மாலை 4:00 - 9:00 மணி தொடர்புக்கு: 08256 - 277 121, 277 141