உள்ளூர் செய்திகள்

நலம் தரும் நத்தம் மாரியம்மன்

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் மாரியம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறாள். உடல்நலத்தையும், மனநலத்தையும் காப்பதில் வல்லவளான இவளை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.தல வரலாறு: நத்தம் பகுதியை லிங்கமநாயக்கர் ஆட்சி செய்து வந்தார். அரண்மனை பணியாளர் ஒருவர் தினமும் காட்டுப்பாதையில் பால் கொண்டு வந்தார். ஒருநாள் வழியில் பால்குடத்தை வைத்து விட்டு ஓய்வெடுத்தார். சிறிதுநேரத்தில் அவர் வைத்திருந்த குடத்தில் பால் இல்லாமல் போனதை அறிந்தார். தொடர்ந்து வந்த நாட்களிலும், அந்த இடத்தைத் தாண்டும் போதெல்லாம் பால் காணாமல் போனது. இந்த தகவல் மன்னர் லிங்கமநாயக்கரிடம் தெரிவிக்கப்பட்டது. அவர் வீரர்களுடன் அந்த இடத்துக்கு வந்தார். அங்கே திகிலாங்கொடி என்ற தாவரத்தின் வேர்கள் பரவிக்கிடந்தன. அந்த இடத்தை ஆய்வுசெய்ய மன்னர் உத்தரவிட்டார்.பணியாளர்கள் அங்கே பள்ளம் தோண்டினர். அப்போது பூமியில் இருந்து ரத்தம் பீறிட்டது. உள்ளே ஒரு மாரியம்மன் சிலை இருந்தது. பணியாளர்கள் கடப்பாரையால் தோண்டிய போது, அம்பிகை சிலையின் தோளில் அது பட்டதால் ரத்தம் பீறிட்டதை அறிந்து அனைவரும் வியந்தனர். அறியாமல் நடந்த தவறுக்கு அம்பாளிடம் மன்னிப்பு கேட்டு, அம்மனுக்கு மஞ்சள்நீர் அபிஷேகம் செய்தனர். அங்கேயே சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிற்காலத்தில் இங்கு கோவில் கட்டப்பட்டது. 'ரத்தம்' என்னும் சொல்லை கிராமப்புறங்களில் 'நத்தம்' என்று குறிப்பிடுவர். இதனடிப்படையில் இந்த அம்மனுக்கு 'நத்தம் மாரியம்மன்' என்ற பெயர் உண்டானது.தல சிறப்பு: இத்தலத்து மாரியம்மன், அன்னத்தின் மீது அமர்ந்து காலில் அசுரனை மிதித்த நிலையில் அருள்பாலிக்கிறாள். மாசிமாதம் அமாவாசையன்று, நத்தம் அருகிலுள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில், மஞ்சள் ஆடை உடுத்திய ஏராளமான பக்தர்கள் கூட்டமாகச் சென்று தீர்த்தம் எடுத்து வருவர். பின்பு, ஒரே மரத்தில் மூன்று கிளைகளைக் கொண்ட திரிசூலம் என்னும் கம்பம் நடும் நிகழ்ச்சி நடக்கும். திருவிழா காலத்தில் அம்பிகை தன் கணவருடன் இருக்க விரும்புவதாகவும், இதனால் இந்த கம்பம் சுவாமியாக கருதப்பட்டு கோவில் நுழைவு வாசல் அருகில் நடப்படுவதாகவும் ஐதீகம். பூக்குழி இறங்குதல்: விழாவில் வழுக்கு மரம் ஏறுதல், பூக்குழி இறங்குதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படும். உயரமான மற்றும் கடினமான யூகலிப்டஸ் மரம் வழுவழுவென செதுக்கப்பட்டு, விளக்கெண்ணெய்,மிளகு கடுகு பூசப்பட்டு நடப்படும். இதன் மீது பக்தர்கள் விடாப்பிடியாக ஏறுவர். பின்பு 14 அடி நீளத்திற்கு நெருப்புக் கங்குகள் பரப்பப்பட்ட பாதையில் அம்மனை நினைத்து இறங்கி நடப்பார்கள்.இருப்பிடம்: மதுரையில் இருந்து 35 கி.மீ.,நேரம் : காலை 6:00 - 11:00, மாலை 5:00 - இரவு 8:00 மணிஅலைபேசி: 94423 62399