உள்ளூர் செய்திகள்

தமிழகத்தின் உயரமான பெருமாள்

ஓணத்தை ஒட்டி, மூன்றடியால் உலகளந்த விஸ்வரூப பெருமாளான திரிவிக்கிரமரை, விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் தரிசிக்கலாம்.தல வரலாறு: மகாபலி மன்னனை ஆட்கொள்ள குள்ள வடிவமுள்ள வாமனராக வந்த பெருமாள், விஸ்வரூபம் எடுத்தார். இந்த விஸ்வரூப காட்சியை மீண்டும் காண, மிருகண்டு முனிவர், பிரம்மாவிடம் ஆலோசனை கேட்டார். பூவுலகில் கிருஷ்ணபத்ரா (தென்பெண்ணை) நதிக்கரையில் உள்ள கிருஷ்ண க்ஷேத்திரத்தில் (திருக்கோவிலூர்) தவம் செய்தால், அந்த தரிசனம் கிடைக்கும் என்றார் பிரம்மா. அதன்படி முனிவர் தன் மனைவி மித்ராவதியுடன் அங்கு கடும் தவம் இருந்தார். அங்கு வருவோருக்கு அன்னதானத்தையும் தம்பதியர் அளித்தனர். ஒருநாள் விஷ்ணு இவரை சோதிக்க முதியவர் வடிவில் வந்து அன்னம் கேட்டார். அன்று அவர்களிடம் உணவு மிச்சமில்லை. வீட்டிலோ ஒரு நெல்மணி கூட இல்லை. எனவே, கணவருக்குத் தவிர வேறு சேவை செய்தே அறியாத கற்பில் சிறந்த அப்பெண்மணி, பெருமாளை நினைத்து ஒரு பாத்திரத்தை கையில் எடுத்தாள். “நான் கற்பில் சிறந்தவள் என்பது உண்மையானால், இந்த பாத்திரம் நிரம்பட்டும்,” என்றாள். உடனடியாக அதில் அன்னம் நிரம்பியது. அப்போது பெருமாள், அவர்களுக்கு விஸ்வரூப தரிசனத்தை காட்டியருளினார். பொதுவாக பெருமாளின் வலது கையில் சக்கரமும், இடது கையில் சங்கும் வைத்திருப்பார். ஆனால் இங்கு பெருமாள் மிருகண்டு முனிவரின் உபசரிப்பில் மகிழ்ந்து, தன்னை மறந்த நிலையில் வலது கையில் சங்கும் இடது கையில் சக்கரமும் ஏந்திய கோலத்தில் அருள்பாலிக்கிறார். இத்தகைய கோலத்தை காண்பது மிகவும் அரிது.உயரமான பெருமாள்: இத்தல பெருமாளின் திருநாமம் திரிவிக்கிரமர். இவருக்கு உலகளந்த பெருமாள், ஆயனார், இடைக்கழி ஆயன் என்ற பெயர்களும் உண்டு. தாயாரை பூங்கோவல் நாச்சியார் என்றும், புஷ்பவல்லி தாயார் என்றும் அழைக்கின்றனர். பெருமாளின் தூக்கிய வலது திருவடிக்கு பிரம்மாவும், கீழே ஊன்றிய திருவடிக்கு மகாபலியின் மகன் நமச்சு மகாராஜாவும் பூஜை செய்கின்றனர். பெருமாளின் வலது பக்கம் மகாபலியின் பெரிய தாத்தா பிரகலாதன், லட்சுமி, மகாபலி ஆகியோர் உள்ளனர். இடது பக்கம் அசுர குரு சுக்ராச்சாரியார், மிருகண்டு மகரிஷி, அவரது மனைவி, பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், கருடாழ்வார் ஆகியோர் உள்ளனர் என்பதால், ஒட்டுமொத்த வைகுண்டத்தையே இங்கு தரிசிக்கலாம். மூலவரின் திருமேனி மரத்தால் ஆனது. 108 திவ்ய தேசங்களில் உள்ள பெருமாள் சிலைகளில் உயரமானது இதுவே.அண்ணன் தங்கை: சிவாலயங்களின் பிரகாரத்தில் தான், விஷ்ணு துர்க்கையைக் காண முடியும். ஆனால் 108 திருப்பதிகளில் இங்கு தான் பெருமாள் சன்னிதி அருகிலேயே விஷ்ணு துர்க்கையை தரிசிக்கலாம். பெருமாளை மட்டுமே பாடும் திருமங்கையாழ்வார், இத்தலத்தில் துர்க்கையையும் (மாயை) சேர்த்து 'விந்தம் மேவிய கற்புடை மடக்கன்னி காவல் பூண்டகடி பொழில்' என்று புகழ்ந்து பாடுகிறார். இவளுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் பூஜை செய்தால் கிரக தோஷம் விலகும் என்பதும், சகோதர சகோதரிகள் உறவு பலப்படும் மூன்றாவது பெரிய கோபுரம்: ஐந்து ஏக்கர் பரப்பு கொண்ட இக்கோவிலின் ராஜகோபுரத்தின் உயரம் 192 அடி. 11 நிலைகள் கொண்டது. இது தமிழகத்தின் மூன்றாவது பெரிய கோபுரம் ஆகும். (முதல் இடம் ஸ்ரீரங்கம், இரண்டாம் இடம் ஸ்ரீவில்லிபுத்தூர்) கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்ற பின்னரும், மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளைக் காணலாம்.சிறப்பம்சம்: இங்கு மூலவருக்கு பின்னால் வாமனர் அருளுகிறார். நுழைவு வாயிலின் வலதுபக்கம் சாளக்கிராமத்தால் ஆன கிருஷ்ணர் அருள்பாலிக்கிறார். இவரை தரிசித்த பின் தான் மூலவரை தரிசனம் செய்ய வேண்டும். பிரகாரத்தில் வேணுகோபாலன், லட்சுமி நாராயணன், வீர ஆஞ்சநேயர், லட்சுமி ராகவன், லட்சுமி நரசிம்மர், ராமர், ஆண்டாள், சுக்ராச்சாரியார் ஆகியோர் அருள் செய்கின்றனர். இருப்பிடம்: விழுப்புரத்தில் இருந்து 35 கி.மீ.நேரம்: காலை 6:30 - 12:00 மணி, மாலை 4:00 - 8:30 மணி. அலைபேசி: 94862 79990.