உள்ளூர் செய்திகள்

ஓடி ஓடி உழைக்கணும்! ஊருக்கெல்லாம் கொடுக்கணும்!!

* ஓடியாடி உழைத்து வாழ்வதே கடவுள் விரும்பும் வழிபாடு. உழைப்பில் கிடைத்த பணத்தை உழைக்க முடியாதவர்களுக்கு கொடுங்கள். வருமானத்தில், பத்து சதவீதம் வரை பிறருக்காகச் செலவழிக்கலாம்.* கடந்த காலம் பற்றி வருந்தாதீர்கள். நிகழ்காலத்தைச் சரியாகப் பயன்படுத்தி வாழப் பழகுங்கள்.* நட்பு, கருணை, மகிழ்ச்சி, மனத்தூய்மை, பொறுமை, விடாமுயற்சி போன்ற தெய்வீகப் பண்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள். மனதில் எப்போதும் அமைதி குடியிருப்பதை உணர்வீர்கள்.* தனியாக ஓரிடத்தில் அமர்ந்து கண்களை மூடி, ஓம் என்னும் மந்திரத்தை ஜெபியுங்கள். எண்ண ஓட்டத்தை சாட்சியாக இருந்து கவனியுங்கள். இதன் மூலம் மனம் பலம் பெறும்.* எளிய உணவை மிதமான அளவில் சாப்பிடுங்கள். சாப்பிடும் முன் கடவுளுக்கு படைத்து வழிபடுங்கள். உணவில் பழங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். வாரம் ஒரு வேளை விரதமிருப்பது அவசியம்.* அனைவரிடமும் திறந்த மனதுடன் பழகுங்கள். உண்மையைப் பேசுங்கள். தேவைப்படும் போது பேசாமலும் இருங்கள்.* பொறுமை கடலினும் பெரியது. கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். மற்றவர் குறைகளை மறக்க முயலுங்கள்.* தேவைகளைக் குறைத்து, இருப்பதில் திருப்தி காணுங்கள். எளிய வாழ்க்கையும், உயர்ந்த சிந்தனையும் லட்சியமாக இருக்க வேண்டும்.* வேலைக்காரர்களை நம்பி காத்திருக்க வேண்டாம். சுய தேவைகளை நீங்களே பூர்த்தி செய்யுங்கள்.* மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுங்கள். யாருடைய உணர்ச்சியையும் புண்படுத்தக்கூடாது.* மகான்களின் வாழ்க்கை வரலாறு, உபதேசங்களைப் படித்து, அதை வாழ்வில் கடைபிடிப்பதே அவர்களுக்குச் செய்யும் மரியாதை. * பிறர் பொருளுக்கு ஆசைப்படக் கூடாது. எண்ணம், பேச்சு, செயல் மூன்றாலும் தூய்மை பேணுங்கள்.* சுயநலம் மறந்து பிறருக்கு இயன்ற அளவில் உதவுங்கள்.* தத்துவம் கேட்பதை விட, பயனுள்ள ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. தியானம், யோகப்பயிற்சியில் ஈடுபடுவதை அன்றாடக் கடமையாக கொள்ள வேண்டும்.* உணவு மிதமாகவும், எளிதில் ஜீரணமாகும் விதத்திலும் இருக்க வேண்டும். காரம், புளிப்பு குறைப்பது நல்லது.* பிறருக்கு நல்லதை எண்ணுவதும், செய்வதும் மட்டுமே ஆன்மிகம். மனதில் சிறிதும் ஆணவம் கூடாது. * உலகத்தை உங்களின் குடும்பமாகக் கருதுங்கள். உள்ளதைப் பிறருக்கு பங்கிட்டுக் கொடுங்கள். எல்லா உயிர்களையும் நேசிப்பதோடு, மானசீகமாகவும் வழிபடுங்கள்.* தினமும் நாள்குறிப்பு எழுதுங்கள். கடமையில் இருந்து ஒருபோதும் பின்வாங்காதீர்கள்.* எந்நிலையிலும் உண்மை பேசுங்கள். கொஞ்சமாகவும், இனிமையாகவும் பேசப் பழகுங்கள்.* கிருஷ்ணர் உபதேசித்த பகவத்கீதையில் தினமும் ஒரு அத்யாயம் படியுங்கள்.சொல்கிறார் சிவானந்தர்