உள்ளூர் செய்திகள்

திருப்பம் தரும் தென்திருப்பதி

திருவண்ணாமலை என்றதும் திருக்கார்த்திகை அண்ணாமலையார் கோயில் தான் நினைவுக்கு வரும். அதே பெயரில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வைணவத்தலம் ஒன்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாருக்கு அருகில் உள்ளது.புரட்டாசி மாதம் வந்து விட்டால் திருப்பதி தான் நினைவுக்கு வரும். அங்கு செல்ல முடியாதவர்கள் இக்கோயிலுக்கு வந்து நேர்த்திகடன்களை நிறைவேற்றி பெருமாளை தரிசிக்கிறார்கள். பெருமாளின் பக்தரான ஊத்துமலை பரதேசி என்பவர் பாதயாத்திரையாக திருப்பதிக்கு புறப்பட்டார். இங்குள்ள சத்திரத்தில் தங்கினார். பெருமாள் அவரது கனவில், 'அருகிலுள்ள மலை மீது ஓரிடத்தில் சிலையாக உள்ளேன். கட்டெறும்புகள் உனக்கு வழிகாட்டும்' என சொல்லி மறைந்தார். மறுநாள் அதன்படியே பக்தர்கள் சிலரை அழைத்துக் கொண்டு மலைக்குச் சென்றார். அங்கு பெருமாள் சிலையைக் கண்டு வழிபட்டனர். திருப்பதியை போல நின்ற கோலத்தில் பெருமாள் இங்கு காட்சி தருகிறார். அவரை தரிசித்தால் பரம திருப்தி. வாழ்வில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். அதனால் இக்கோயிலை தென்திருப்பதி என்கின்றனர். பிரகாரத்தில் பெருமாள் பாதம் உள்ளது. கருவறையின் முன் மண்டபத்தில் யோக, பால நரசிம்மர்கள், கருடாழ்வார், திருமங்கையாழ்வார், திருக்கச்சிநம்பி, ராமானுஜர், கூரத்தாழ்வார், நவநீதகிருஷ்ணர் சன்னதிகள் உள்ளன. மலை அடிவாரத்தில் ஆதிவிநாயகர், கருப்பசாமி சன்னதிகள் உள்ளன. இங்குள்ள கோனேரி தீர்த்தத்தில் இருந்து அபிேஷக தீர்த்தம் எடுக்கப்படுகிறது. திருமலை நாயக்கர் திருப்பணிகளை செய்துள்ளார். ஆண்டாள் கோயிலில் பிரமோற்ஸவத்தில் நடக்கும் ஐந்து கருட சேவைக்கு இவரும் செல்கிறார். இப்பெருமாளின் உற்ஸவர் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இருக்கிறார். இவரை பவுர்ணமி கிரிவலத்தின் போது இங்குள்ள அடிவார மண்டபத்திற்கு எழுந்தருளச் செய்கின்றனர். எப்படி செல்வது: ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து 4 கி.மீ., விசேஷ நாள்: புரட்டாசி சனிக்கிழமை வைகுண்ட ஏகாதசி நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி சனிக்கிழமை, புரட்டாசி சனிக்கிழமையில் அதிகாலை 4:00 - இரவு 8:00 மணிதொடர்புக்கு: 96294 33790அருகிலுள்ள தலம்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் (சகல சவுபாக்கியங்களையும் பெற)நேரம்: காலை 6:00 - 1:00 மணி; மாலை 4:00 - 8:00 மணிதொடர்புக்கு: 90034 64729