உள்ளூர் செய்திகள்

சிவனுக்கு வெந்நீர் அபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம் தேவிகா புரத்தில் பெரியநாயகி சமேத கனககிரீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு சுவாமிக்கு அபிஷேகம் செய்த வெந்நீர் நோய் தீர்க்கும் பிரசாதமாக தரப்படுகிறது. ஒருமுறை பிருங்கி முனிவர் கைலாய மலைக்கு வந்திருந்தார். அப்போது சிவனும், பார்வதியும் உரையாடிக் கொண்டிருந்தனர். பார்வதியை பொருட்படுத்தாத முனிவர், சிவனை மட்டும் வணங்கினார். இதனைக் கண்டு வருந்திய பார்வதி, '' சுவாமி! உங்கள் உடலில் எனக்கு பாதியை தாருங்கள். இதனால் உங்களை வணங்குவோர் என்னையும் வணங்குவர்'' என்றாள். அதற்கு சிவன், ''நீ பூலோகம் சென்று காஞ்சிபுரத்தில் காமாட்சி என்ற பெயரில் தவமிரு. உரிய காலத்தில் உன்னை மணப்பேன். பின்பு திருவண்ணாமலைக்கு வந்து என்னை வழிபடு. அப்போது என் உடம்பில் இடப்பாகத்தை அளிக்கிறேன்'' என உறுதியளித்தார். அதன்படி பார்வதி காஞ்சிபுரத்தில் காமாட்சியாக தவம் செய்து ஏகாம்பரேஸ்வரரை மணந்தாள். பின்பு திருவண்ணாமலை செல்லும் வழியில் உள்ள இத்தலத்தில் 48 நாட்கள் தங்கினாள். தேவி தங்கியதால் 'தேவிகா புரம்' எனப் பெயர் பெற்றது. காஞ்சிபுரத்தில் காமாட்சிக்கு தனி கோயில் இருப்பது போல, இங்கும் அம்மன் பெரியநாயகி என்ற பெயரில் தனிக்கோயிலில் வீற்றிருக்கிறாள். கோயிலின் பின்புறம் 500 அடி உயரமும், 5 கி.மீ. சுற்றளவும், 302 படிகளும் கொண்ட கனககிரி என்னும் மலை உள்ளது. இதன் உச்சியில் சுயம்பு மூர்த்தியாக கனக கிரீஸ்வரர் என்னும் பெயரில் சிவன் இருக்கிறார். கருவறையில் சுவாமிக்கு அருகில் காசி விஸ்வநாதர் இருக்கிறார். ஒருமுறை வேடன் ஒருவன் மலையில் கிழங்கு தோண்ட முயன்ற போது ரத்தம் பீறிட்டது. அங்கு சிவலிங்கம் இருப்பதைக் கண்டான். சுவாமிக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு வெந்நீரால் அபிஷேகம் செய்து பிராயச்சித்தம் தேடினான். இதனடிப்படையில் திங்கட்கிழமை தோறும் சுவாமிக்கு வெந்நீர் அபிேஷகம் நடக்கிறது. இத்தீர்த்தத்தை அருந்தினால் நாள்பட்ட நோயும் பறந்தோடும். மலையில் 48 நாட்கள் தங்கியிருந்து பார்வதி தவம் செய்ததன் அடையாளமாக மலை மீது அம்மனின் திருவடி உள்ளது. எப்படி செல்வது: திருவண்ணாமலையிலிருந்து ஆரணி செல்லும் வழியில் 51 கி.மீ, சென்னையில் இருந்து 160 கி.மீ.,விசேஷ நாட்கள்: பங்குனி உத்திரம், பவுர்ணமி கிரிவலம், மகாசிவராத்திரி, நவராத்திரிநேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணிதொடர்புக்கு: 94424 70477, 99525 76444அருகிலுள்ள தலம்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்