உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்
* யாரையும் சோம்பேறியாக வாழ கடவுள் படைக்கவில்லை. உன்னைத் தாங்கும் பூமி கூட சுழன்றபடியே இருக்கிறது. உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்.* உள்ளத்தில் இருக்கும் அன்பை கண்களில் வெளிப்படுத்து. அப்போது சிலை வடிவில் இருக்கும் தெய்வம் உன்னிடம் பேசுவதைக் கேட்பாய்.* உறுதி மிக்க உள்ளமும், ஆழ்ந்த பக்தியும் இருப்பவனுக்கு கடவுளின் அருள் கிடைப்பது நிச்சயம்.* பிறர் பாராட்ட வேண்டும் என்பதற்காக தானம் செய்பவனுக்கு புண்ணியம் கிடைக்காது. பணம் போய்விட்டதே என்று மனஅமைதியும் கெடும்.* நேர்மையும், கடவுள் நம்பிக்கையும் இருக்குமிடம் சொர்க்கமாக மாறி விடும்.* மண், பெண், பொன், புகழ் ஆகிய நான்கும் மனிதனுக்குப் பகை. இவற்றிடம் இருந்து உன்னைக் காத்துக் கொள்.* விருப்பும், வெறுப்பும் நரகத்தின் வாசல்கள். விருப்பு, வெறுப்பு இல்லாதவன் கடவுளுக்குச் சமமாவான்.* கடவுளைக் காண உன்னைத் தகுதிப்படுத்திக் கொள். அவர் உனக்குள் காட்சியளிப்பதைக் காணலாம்.* ஆணவம் இருக்குமிடத்தை விட்டுக் கடவுள் கோடி மைலுக்கு அப்பால் ஓடி விடுவார்.* இந்த மண்ணில் மனித வாழ்க்கை சிலகாலம் தான். அதற்குள் நல்லவர்களுக்கு தொண்டு செய்து விடு.* நோய்க்கு சிறிதும் இடம் கொடுத்து விடாதே. கடவுளை வழிபடுவதற்கு உடல்நலம் மிக அவசியமானது.* பகுத்தறிவு இருந்தும் கடவுளை நினைக்காதவன், மிருக நிலைக்கு தன்னைத் தாழ்த்திக் கொள்கிறான்.* மனதில் கர்வம் இருந்தால் பேச்சும், செயலும் முரண்படுவதைக் காணலாம். ஆனால், குற்றமற்ற மனிதனிடம் எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் ஒன்றுபட்டு இருக்கும்.* நல்ல பேனா இருந்தால் மட்டும் போதாது. அதை வைத்திருப்பவனும் நல்லவனாக இருந்தால் தான், நல்ல விஷயங்களை எழுத முடியும்.* நியாயமற்ற வழியில் கிடைத்த பணத்தை தொடாதே. அது உயிர் உள்ளவரை உன்னைச் சித்ரவதை செய்து கொண்டேயிருக்கும்.* பொருளைத் தேடும் முயற்சியுடன், பிறருக்கு உதவி செய்து, அருளையும் தேடிக் கொள். ஏனென்றால் இந்த உலகமே கடவுளின் குடும்பம்.* கடவுளை நினைத்துக் கொண்டே சாப்பிட்டால், உணவு பிரசாதமாகி விடும். இதனால் மனமும், உடல்நிலையும் நன்றாக இருக்கும்.* இயற்கை தன்னிடமுள்ள செல்வத்தை எல்லாம் உலகிற்கு அளித்து மகிழ்வது போல, நீயும் உன்னிடமுள்ளதை கொடுப்பதில் மகிழ்ச்சி கொள்வாயாக.* சத்திரத்தில் தங்கி இளைப்பாறுவது போல, உயிர்கள் பூமியில் சில காலம் தங்கி விட்டுச் செல்கின்றன. யாருக்கும் இந்த உலகம் சொந்தமானது அல்ல.சொல்கிறார் சாந்தானந்தர்