உள்ளூர் செய்திகள்

மாலைசூடும் மணநாள் இளசுகள் வாழ்வில் திருநாள்

 இளசுகளின் மனதில் திருமணக்காட்சி கனவாய் படிந்தாலும், செவ்வாய், நாக தோஷம், பணத்தட்டுப்பாடு, இன்னும் பல பிரச்னைகளால் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கும். இப்படிப்பட்டவர்கள் ஆகஸ்ட் 12ல் சிறுவாபுரியிலுள்ள முருகப்பெருமானுக்கும், வள்ளிக்கும் திருமணம் நடக்கும் திருமணநிகழ்ச்சியில் பங்கேற்று வரலாம்.

தல வரலாறு:

ராமபிரான் தனது பட்டாபிஷேகத்திற்கு பிறகு, கர்ப்பிணியான மனைவி சீதை மீது ஊரார் பழிபோட்டதால் காட்டிற்கு அனுப்பி விட்டார். அங்கு லவனும், குசனும் பிறந்தனர். இதன் பிறகு அவர் அஸ்வமேதயாகம் செய்தார். மனைவியின்றி யாகம் செய்வது யாகம் செய்வது விதிக்கு புறம்பானது என்பதால், அவர் அனுப்பிய யாகக்குதிரையை லவனும் குசனும் கட்டிப்போட்டு விட்டனர். குதிரை திரும்பி வராமல் போகவே, அதை மீட்டு வர லட்சுமணனை அனுப்பினார் ராமர். லட்சுமணனால் குதிரையை மீட்க முடியவில்லை. எனவே ராமரே, நேரில் சென்று குதிரையை மீட்டு சென்றார் என்பது ராமாயண கால செய்தி. இந்த வரலாற்று செய்தியை, "சிறுவராகி இருவர் கரிபதாதி கொடுஞ்சொல் சிலை ராமன் உடன் எதிர்த்து ஜெயமதானநகர்' என்ற திருப்புகழ் பாடல் மூலம் அறிய முடிகிறது. ராமனிடம் லவனும் குசனும் சண்டை போட்டதாகவும், அந்த இடமே சிறுவாபுரி என்ற சின்னம்பேடு ஆனதாகவும் இத்தல வரலாறு கூறுகிறது. சிறுவர்+அம்பு+எடு என்பது சின்னம்பேடு ஆனது. பேடு என்பது அம்பு வைக்கும் கூடு.கை கொடுத்த கை: இத்தலத்தில் வாழ்ந்த முருகம்மையார் என்ற முருகபக்தை எப்போதும் முருகனின் சிந்தனையில் இருந்தார். சதா முருக நாமத்தைச் சொல்லிக் கொண்டிருப்பார். அவரது வீட்டில் முருகன் என்ற வேலைக்காரன் இருந்தான். அவரது கற்பின் மீது சந்தேகம் கொண்ட கணவர், ""நீ எந்த முருகனை அழைக்கிறாய்?'' எனக்கேட்டு, அவரது கையைத் துண்டித்தார். தன் கை துண்டிக்கப்பட்டதைக் கூட அறியாமல், முருக சிந்தனையில் இருந்தது கண்ட முருகன், அம்மையாருக்கு காட்சி கொடுத்துஅருள் புரிந்தார். அவரது கை பழைய நிலைக்கு திரும்பியது.

சிறப்பம்சம்:

இந்தக் கோயிலில் முருகப்பெருமானைத் தவிர மற்ற சிலைகள் அனைத்தும் மரகதக்கல்லால் ஆனவை. மரகத மயில் இங்கு விசேஷம். மூலவர் பாலசுப்பிரமணியர் நாலரை அடி உயரத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். அவரது சந்நிதி எதிரே அருணகிரிநாதர் கருணை ததும்ப காட்சியளிக்கிறார். முருகனுக்கு வலதுபக்கம் அண்ணாமலையார், உண்ணாமுலை அம்பாள் சந்நிதி இருக்கிறது. இவர்களுக்கு நடுவில் வள்ளியும், முருகப்பெருமானும் கைகோர்த்து திருமணக்கோலத்துடன் அருள்பாலிக்கின்றனர். புதிதாக வீடு கட்ட விரும்புவோர் இங்கு வழிபாடு செய்ததும் பணியைத் தொடங்குவது சிறப்பு.

வள்ளி கல்யாண மஹோத்ஸவம்:

சென்னை அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழு சார்பில், ஆகஸ்ட் 12ல் வள்ளி முருகன் திருக்கல்யாணம் நடக்க உள்ளது. செவ்வாய் தோஷம், நாகதோஷம் உள்ளிட்டவைகளால் திருமணத்தடை ஏற்படுவதை நீக்கவும், வீடு, பிள்ளைப்பேறு, செல்வம், நோய் நிவர்த்திக்கும் இங்கு ஆறு வாரம் தொடர்ந்து வந்து பலன் பெறுகின்றனர். இவ்வாறு வரமுடியாதவர்கள், திருக்கல்யாண உற்ஸவ தினத்தில் வந்து, வள்ளி மணவாளப் பெருமானுக்கு நடக்கும் அபிஷேகத்தையும், கல்யாணத்தையும் தரிசிக்க வேண்டும். மணக்கோலத்தில் காட்சி அளிக்கும் முருகப்பெருமான், கோயிலைச் சுற்றி ஆறுமுறை வலம் வருவார். திருமண பிரார்த்தனைக்கு வரும் பெண்களுக்கு முருகன் மாலையும், ஆண்களுக்கு வள்ளிமாலையும் வழங்கப்படும். இதை அணிந்து கொண்டு, சுவாமியின் பின்னால் ஆறு சுற்று வந்து, மனதார வணங்கினால் திருமணத்தடை நீங்கி மனம்போல் துணை அமையும் என்பது ஐதீகம்.

1,2,3:

ஒருவர் இருவராக வேண்டும். இருவர் மூவராக வேண்டும் ' என்பது தான் இக்கோயிலின் தாரகமந்திரம். அந்த வகையில், ஆகஸ்ட் 12, திருமண பிரார்த்தனைக்கு முதலில் வரும் 123 பேருக்கு, மாலை பிரசாதம் வழங்கி பிரார்த்தனையை நிறைவேற்றி வைக்க உள்ளனர் அன்னதானமும் உண்டு. பங்கேற்க விரும்புவோர் தொடர்பு கொள்ள: 99406 25308

இருப்பிடம்:

சென்னை கோயம்பேட்டிலிருந்து 30கி.மீ.. தூரம். கும்மிடிபூண்டி, கவரப்பேட்டை பஸ்களில் சிறுவாபுரி புதுரோடு ஸ்டாப்பில் இறங்கி, மேற்கே 3 கி.மீ சென்றால் சிறுவாபுரி.