உள்ளூர் செய்திகள்

எழுத்துலகில் ஜொலிக்க...

உத்தரப்பிரதேசம், லக்னோவிற்கு அருகிலுள்ள சீதாப்பூர் கோமதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது நைமிசாரண்யம். இதனை நேமி + ஷ + ஆரண்யம் என்று பிரித்து சக்கரத்தின்வட்டம் + இடம் + காடு என பொருள் கொள்வர். மேலும் இதனை நிமிசார், நிம்கார் என்றும் அழைப்பர். ஒரு சமயம் பிரம்மாவின் புத்திரர்கள் உலக நன்மைக்காகவும் அம்பிகையின் அருளை பெறவும் யாகம் செய்ய சிறந்த இடத்தை தேர்வு செய்ய விரும்பினர். அவர்கள் தன் தந்தையிடமே சென்று வழி கேட்க, அவர் ஒரு தர்ப்பை புல்லை வளையமாக்கி உருட்டி விட அது நிற்கும் இடமே யாகத்திற்கு தகுந்த இடம் எனச் சொன்னார். அதன்படி தர்ப்பைச்சக்கரம் நின்ற இடத்தில் அவர்கள் யாகத்தை நடத்தி அம்பிகையின் அருளை பெற்றனர். அதன் நினைவாக, அம்பிகைக்கு கோயில் ஒன்றை எழுப்பினர். இங்குள்ள சக்கர தீர்த்தத்தில் நீராடி அம்பிகையை வழிபடுபவர்களுக்கு ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். ஆயுள், ஆரோக்கியம் சீராகும். லலிதாதேவி என்ற சக்தி, 'லிங்கதாரிணி' என்ற பெயரோடு அருள் செய்கிறாள். இவளே வேதவியாசருக்கு உதவி செய்ய விநாயகரை, அனுப்பினாள். 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மர நிழலில் தான் பாரதம் எழுதப்பட்டது. இங்கு 'வியாஸ கட்டி' என்ற இடத்தில் உள்ள வேத வியாசரையும், அம்மரத்தையும் எழுத்துலகில் ஜொலிக்க வேண்டும் என நினைப்பவர்கள் தரிசிப்பது சிறப்பு. கிருஷ்ண பக்தரான பார்வையற்ற சூர்தாஸர் இங்கு தான் வாழ்ந்துள்ளார். இத்தலம் 108 சக்தி பீடங்களில் ஒன்றாகவும், பெருமாளுக்குரிய திவ்யதேசங்களில் முக்கியமானதாக திகழ்கிறது. எப்போதும் நிரந்தரமாக எட்டு தலங்களில் இருக்கிறேன் என பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கீதையில் கூறிய தலங்களில் இதுவும் ஒன்று. இங்கு வேதநாதப் பெருமாள் தாயாருடன் அருள் பாலிக்கிறார். அருளாளர்களான ஆதிசங்கரர் தொடங்கி திருமங்கையாழ்வார் வரை பலரும் இத்தலத்திலுள்ள அம்பிகை, பெருமாளை வழிபட்டு பாடல்கள் இயற்றியுள்ளார். எப்படி செல்வது: லக்னோவில் இருந்து 110 கி.மீ.,விசேஷ நாள்: நவராத்திரி, சிவராத்திரி நேரம்: காலை 6:00 - இரவு 9:00 மணிதொடர்புக்கு: 95067 89394அருகிலுள்ள தலம்: ருத்ராவர்த் சிவன் கோயில் 12 கி.மீ., (முன்னோர் மோட்சம் அடைய) நேரம்: காலை 6:00 - இரவு 9:00 மணி