உள்ளூர் செய்திகள்

உஜ்ஜயினி மாகாளி

மத்தியபிரதேசத்தில் இருக்கும் உஜ்ஜயினியில் காளி குடிகொண்டிருப்பது போல, தென்னக உஜ்ஜயினியான சமயபுரம் மாகாளிகுடியிலும் கோயில் கொண்டிருக்கிறாள்.தலவரலாறு: மத்திய பிரதேசம் உஜ்ஜயினியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தவர் விக்ரமாதித்த மகாராஜா. காட்டில் ஆறு மாதமும், நாட்டில் ஆறு மாதமும் ஆட்சி செய்வது வழக்கம். இவரது குலதெய்வம் உஜ்ஜயினி மாகாளி. இவளைத்தான் தமிழகத்தில் 'உச்சினி மாகாளி, உச்சிமாகாளி என்று பெயரிட்டு அழைக்கின்றனர். ஒரு சமயம் காட்டில் ஆட்சி செய்ய, காவிரிக்கரையிலுள்ள மகாகாளிகுடி காட்டுக்கு தான் வழிபட்ட காளி சிலையுடன் வந்தார். இங்கே தங்கி பூஜை செய்து கொண்டிருந்தார். அவர் நாடு திரும்பும்போது, தான் வழிபட்ட சிலையை எடுக்க முயன்றார். முடியவில்லை. அம்பாளைத் தன்னுடன் வரும்படி எவ்வளவோ கெஞ்சினார். அப்போது அவர் முன் தோன்றிய காளி, இந்த இடத்திலும் தனது சக்தி தங்கும் என்று கூறி விட்டாள். அதைத் தொடர்ந்து அம்பாளுக்கு கோயில் கட்டி வழிபாட்டை துவக்கினார். தலசிறப்பு: விக்கிரமாதித்தனின் பரிவாரங்களாகிய வேதாளம், கழுவன் ஆகிய மூர்த்திகளுக்கு சந்நிதிகள் உள்ளன. இவர்களில் கழுவனை வழிபட்டால் விடாமுயற்சி செய்யும் தன்மையைப் பெற்று, எதிலும் வெற்றி பெறும் திறன் உண்டாகும். 'கழுவன் சாதனை' என்ற வார்த்தை இப்போதும் வழக்கில் உள்ளது. இதற்கு 'தனது நிலையிலேயே நிலைத்திருத்தல், எதற்கும் அசையாமல் இருத்தல் என்று பொருள். மூலஸ்தான விமானம் மாறுபட்ட தோற்றத்துடன், நான்கு மூலைகளிலும் அம்பாளுக்குரிய சிம்மத்திற்குப் பதிலாக ரிஷபத்துடன் காணப்படுகிறது. வாயுமூலையில் சுதை வடிவில் முருகப்பெருமானும், அவருக்கு மேலுள்ள விமானத்தில் சீனதேசத்து மனித உருவமும் உள்ளது. இவர் பழநி முருகனுக்கு நவபாஷாண சிலை செய்த போகர் என்கின்றனர். போகர் சீன தேசத்தில் சஞ்சாரம் செய்தவர் என்பது அவரது வாழ்க்கைக் குறிப்பில் இருந்து தெரிய வருகிறது. தர்மசாஸ்தா எங்கும் காண இயலாதவாறு மனைவி, குழந்தை, யானை வாகனம் சகிதமாக அய்யனராக வீற்றிருக்கிறார். மூலஸ்தானத்திலுள்ள அம்பாளை ஆனந்த சவுபாக்ய சுந்தரி என்கின்றனர். புடைப்புச் சிற்பமாக, தாண்டவ கோலத்தில் சாந்தபாவனையில், விரித்த சடைகளோடு அசுர சம்காரம் செய்யும் நிலையில் காணப்படுகிறாள். மேலும், அர்த்தநாரீஸ்வரர் சந்நிதியில், வழக்கமான தோற்றத்துக்கு மாறாக, அம்பாள் வலப்புறமும், இறைவன் இடப்புறமுமாக உள்ளனர்நோய் தீர்க்கும் தீர்த்தம்: திருநந்தவனத்தில் சக்தி தீர்த்த கிணறு உள்ளது. இங்கு சிவபெருமான் தவம் செய்வதாகவும், அவரது சடைமுடியின் கங்கையே இந்த தீர்த்தம் என்றும் நம்பப்படுகிறது. இந்தக் கிணற்றின் அடியில் நீரூற்று இல்லாமல், கிணற்றின் பக்கவாட்டு ஊற்று மூலம் தீர்த்தம் பெறப்படுகிறது. இந்த தீர்த்தத்தை தெளித்தால் தோல் நோய், சித்த பிரமை தீர்வதாக நம்பிக்கையுள்ளது. பெண்கள் இந்த தீர்த்தத்தில் நீர் இறைக்க கூடாது ஆண்கள் இறைத்து பெண்களுக்கு வழங்கலாம். பெருமாள் சந்நிதி: அலமேலு மங்கையுடன் பிரசன்ன வெங்கடேஸ்வரர் இங்கு அருள்பாலிக்கிறார். இவர் வெங்கடேசனாக இருந்தாலும் கையில் கதை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவரை 'கதாதரர்' என்றும் அழைக்கின்றனர். மரணபயம் நீக்குபவராக இவர் அருள்கிறார். இவரை வணங்கி வருவதால் அகாலமரணம் ஏற்படாது என்பதும், பூர்ண ஆயுள் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.வெண்ணெய் அபிஷேகம்: குழந்தை ரூபத்தில் சந்தான கோபாலகிருஷ்ணர் அருள்பாலிக்கிறார். குழந்தை பாக்கியம், இளமை, செல்வம், ஆயுள் போன்ற நற்பலன்களை வழங்கும் கருணாமூர்த்தியாகவும் இவர் திகழ்கிறார். இவருக்கு வெண்ணெய் அபிஷேகம் செய்து, அன்னதானம் வழங்குவதன் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. விலங்குத்துறையான்: காவல் தெய்வமான விலங்குத்துறையான் என்ற கருப்பண்ண சுவாமிக்கு பொங்கல் வைத்தால், பாதுகாப்பான நீண்டகால வாழ்வு கிடைப்பதாக நம்பிக்கையுள்ளது. இவர் திருமாலின் அம்சமாக விளங்குகிறார். சங்கிலி கருப்பு என்றும் அழைப்பர். பொம்மியம்மை, வெள்ளையம்மை சமேத மதுரை வீரசுவாமியும் அருள்பாலிக்கிறார்.நவக்கிரகங்கள் தங்கள் துணைவியருடன் காட்சி தருகின்றனர். திருவிழா: தமிழ்வருடப்பிறப்பு, நவராத்திரி, மகர சங்கராந்தி, தைப்பூசம், மகாசிவராத்திரி, பங்குனி திருவிழா. திறக்கும் நேரம்: காலை 6- பகல் 1 மணி, மாலை 4- இரவு 8.30 மணி.இருப்பிடம்: திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 23 கி.மீ., தூரத்தில் சமயபுரம். இங்கிருந்து அரை கி.மீ., தூரத்தில் மாகாளிகுடி.போன்: 98424 02999, 0431 267 0460.