உள்ளூர் செய்திகள்

மருந்தினால் குணமாகாதது மதுநாதனால் குணமாகும்

''எவ்வளவோ மருந்து சாப்பிட்டும், இந்த நோய் குணமாகவில்லையே! பணம் தண்ணீராகக் கரைந்தும் பலனில்லையே'' என்று வருந்துபவர்கள், திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகிலுள்ள இலத்தூர் மதுவனேஸ்வரரையும், பொங்கு சனீஸ்வரரையும் வழிபட்டு வரலாம்.தல வரலாறு: சிவனுக்கும், பார்வதி தேவிக்கும், திருக்கைலாயத்தில் திருமணம் நடந்தது. அந்த சமயத்தில் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. உலகை சமப்படுத்த அகத்தியரை தென்திசைக்குச் செல்லும்படி சிவன் வேண்டினார். அகத்தியர் தென்திசை நோக்கி வந்த போது அனுமன் ஆறு, குறுக்கிட்டது. அதில் நீராடிய அகத்தியர், ஒரு புளியமரத்தின் அடியில் சிவபூஜைக்கான ஏற்பாடு செய்தார். அப்போது புளியமரத்தில் இருந்த தேன் வடிந்தது. தேனை 'மது' என்பர். அந்த மதுவை, அனுமன் ஆற்று மணலுடன் குழைத்து சிவலிங்கம் வடித்தார். இதனால் சுவாமிக்கு 'மதுநாதர்' என பெயர் ஏற்பட்டது. அகத்தியர் லிங்கம் வடித்த போது அவரது விரல்கள் அதில் பதிந்தது. இந்த பதிப்பை சிவலிங்கத்தில் காணலாம். பின் அறம்வளர்த்த நாயகி அம்பாளுக்கு சன்னதி அமைக்கப்பட்டது. புளியமர இலையின் தூரிலிருந்து (நுனிப்பகுதி) தேன் வடிந்ததால், இவ்வூர் இலைத்தூர் எனப்பட்டது. பின் இலத்தூர் ஆனது.பொங்கு சனீஸ்வரர் : நீங்கள் திருநள்ளாறு சென்று சனீஸ்வரரை வணங்கி வந்திருப்பீர்கள். ஆனால், அவரை வலம் வர முடியாது. இலத்தூரிலுள்ள பொங்கு சனீஸ்வரரை வலம் வரும் வகையில் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இவர் அனுக்கிரக சனியாக அருள்பாலிக்கிறார். அபய ஹஸ்தநிலையில் (அருள் வழங்கும் நிலை) கைகளை காட்டி அருள்தருகிறார். மற்ற இடங்களில் காக வாகனம் மேற்கு நோக்கி இருக்கும். இங்கு கிழக்கு நோக்கி காக வாகனம் உள்ளது. இவ்வாறான சனியை வணங்கினால் லட்சுமி கடாட்சம் ஏற்படும். ஏழரைச்சனி, அஷ்டமத்து சனி, கண்டச்சனி காலங்களில் பிரச்னைகளால் சிரமப்படுவோர் இவரை வணங்கலாம். சம்பாதித்த பொருள் கையில் நிலைத்திருக்க சனிக்கிழமைகளில் பொங்கு சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்கின்றனர்.அகத்தியருக்கு ஏழரை சனி ஆரம்பித்ததும், இங்குள்ள தெப்பக்குளத்தில் நீராடி சனீஸ்வரரை ஸ்தோத்திரம் பாடி பூஜித்தார். சனீஸ்வரர் அவருக்கு காட்சி தந்து, இந்தக் குளத்தில் ஏழரை விலகும் காலத்தில் நீராடி தன்னை வணங்கினால் சகல அனுக்கிரகமும் வணங்குவேன் என்றார். இந்தக் குளத்தில் கோடையிலும் தண்ணீர் உள்ளது.லிங்க வடிவ சாஸ்தா: சனி தோஷம் நீங்க சபரிமலை ஐயப்பன் கோவிலில் கொடுகொட்டி பாட்டு என்னும் சடங்கு நடக்கும். ஏனெனில் சனீஸ்வரருக்குரிய பிரதான தெய்வமே (அதிதேவதை) சாஸ்தா தான். இங்கும் சாஸ்தாவுக்கு சன்னதி இருக்கிறது. அதுவும் லிங்க வடிவில். சாஸ்தா சிவனின் மகன் என்ற முறையில், லிங்க வடிவில் காட்சி தருகிறார். இத்தகைய அமைப்பை பிற இடங்களில் காண்பது அரிது. சாஸ்தா முன்பு அவரது வாகனமான இரண்டு யானைகள் உள்ளன.சனி தோஷம் நீக்கும் மற்றொரு தெய்வம் அக்னி பைரவர். அவரும் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். சனீஸ்வரர் சன்னதியில் நின்றபடியே, இவரது சன்னதியையும் பார்க்கும் வகையில் நேர்கோட்டில் சன்னதி அமைத்து உள்ளனர். பெரும்பாலான கோவில்களில் பைரவர் சன்னதி, கோவில் வாசலில் சுவரை ஒட்டி இருக்கும். இங்கே இவரது சன்னதியை வலம் வரும் வகையில் அமைத்துள்ளனர்.சிறப்பம்சம்: ராமன், லட்சுமணன் ஆகியோர் வானர சேனைகளோடு இலங்கை செல்லும் வழியில் தாகம் ஏற்படவே அனுமன் தனது கதையினால் ராமநாமம் சொல்லி ஒரு பாறையில் அடித்தார். அந்த பாறை வழியாக ஆகாய கங்கை பெருகி வந்தது. அதுவே அனுமன் நதியானது. இந்த நதி இவ்வூர் அருகே ஓடுகிறது. இங்கு நமக்கு உணவளிக்கும் அன்னபூரணிக்கும் சன்னதி உள்ளது.தட்சிணாமூர்த்தி மகிமை: தட்சிணாமூர்த்தி சன்னதி, கோவில் பிரகாரங்களில் தெற்கு நோக்கி அமைந்திருக்கும். இந்த கோவிலில் சுவாமி சன்னதி விமானத்தின் கீழே இவரது சன்னதி அமைந்ததுள்ளது.விமானத்தின் மீது தட்சிணாமூர்த்தி சிலைகளை வடிப்பது வழக்கம். ஆனால் விமானத்தின் கீழே இங்கு சன்னதி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தக்கோவில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டுக்கு உட்பட்டது. கோவில் அலுவலகம் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ளது.எப்படி வழி?மதுரை - தென்காசி சாலையில் 153 கி.மீ., தூரத்தில் இலத்தூர் விலக்கு. இங்கிருந்து 2 கி.மீ., தூரத்தில் கோவில். தென்காசியில் இருந்து சாம்பவர் வடகரை கிராமத்திற்கு செல்லும் பஸ்கள் இவ்வூர் வழியே செல்லும். நேரம்: அதிகாலை 5:00 - 11:15 மணி, மாலை 5:00 - 8:15 மணி. சனிக்கிழமைகளில் அதிகாலை 5:00 - 1:00 மணி, மாலை 4:00 - 8:30 மணிதொலைபேசி: 04652 - 241 270.