உள்ளூர் செய்திகள்

வளர்பிறையில் வழிபடுக வளம் பல பெறுக!

 பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் வழிபாடு நடப்பது வழக்கம். சிவகங்கை மாவட்டம் திருநோக்கிய அழகியநாதர் கோயிலில் இருக்கும் காலபைரவருக்கு வளர்பிறை அஷ்டமியன்றும் சிறப்பு பூஜை நடக்கிறது. இந்நாளில், இவரைத் தரிசித்தால் வாழ்வில் செல்வவளம் கொழிக்கும். இரட்டை நாய் வாகனத்துடன் இவர் காட்சி தருவதால், இவரை வணங்குவோர் சிறந்த பாதுகாப்பும், நன்றி மிக்க நட்பு, உறவுகளையும் பெறுவர் என்பது இன்னொரு விசேஷம்.

தல வரலாறு:

தேவர்களுக்கு ஒரு சமயம் துன்பம் ஏற்பட்ட போது சிவனை அணுக வேண்டியிருந்தது. அவர் தவத்தில் இருந்ததால், மன்மதன் மூலம், மலர் அம்பு ஒன்றை அவர் மீது எய்தனர். கண்விழித்த சிவன் அவனைச் சாம்பலாக்கி விட்டார். நற்செயலுக்காக கூட, இவர் இப்படி கோபப்பட்டால் உலகம் தாங்காது என்பதால், பிரம்மா சிவனின் கோபத்தை அனலாக திரட்டி கடலுக்குள் புகுத்தி விட்டார். அந்த அனல் ஒரு குழந்தையாக பிறந்தது. பிரமன் அந்த குழந்தைக்கு ஜலந்திரன் என பெயரிட்டார். ஜலத்திற்குள் (தண்ணீர்) பிறந்ததால் இந்தப் பெயரைச் சூட்டினர். கோபத்திற்கு பிறந்த ஜலந்திரன் கடும்கோபக்காரனாக வளர்ந்தான். அவனுக்கு பிருந்தா (துளசி) என்ற மாதரசி மனைவியாக அமைந்தாள். அவள் மிகவும் நல்லவள். தன்னுடைய பதிபக்தியால் கணவனைக் கண்ணெனக் காத்து வந்தாள். அவளது கற்புத்தீ அவனுக்கு பாதுகாப்பாக அமைந்தது. முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் மிகவும் தொந்தரவு கொடுத்தான். தேவர்களின் வேண்டுகோளை ஏற்று அசுரனை அழிக்க திருமால் புறப்பட்டார். பிருந்தையின் பதிவிரதத்தை அழித்தால் தான் ஜலந்திரன் மாள்வான் என்பதால், திருமால் ஜலந்திரன் வடிவில் பிருந்தையிடம் சென்றார். வந்திருப்பது திருமால் என்பதையும், தனது பதிவிரதத்தை சோதிக்க அவர் வந்திருப்பதையும் அறிந்த பிருந்தா தீயில் புகுந்து உயிரை விட்டாள். தன் மனைவியின் இறப்புக்கு காரணமான திருமாலுடன் ஜலந்திரன் போருக்கு வந்தான். அவனது சக்தியை சோதிக்க விரும்புவதாகச் சொன்ன திருமால், பூமியில் ஒரு வட்டத்தை வரைந்து அதை ஜலந்திரனிடம் எடுக்க கூறினார். பிருந்தாவின் இறப்பால், வலிமை இழந்துவிட்ட ஜலந்திரன் அதைத் தூக்கிய போது அது மாபெரும் சக்கரமாக மாறி அவனை அழித்து விட்டது. அதேசமயம், பிருந்தாவுக்கு சோதனை தந்ததற்காக பிராயச்சித்தமாக அவளது சாம்பலில் கலந்தார் திருமால். இதனால் வைகுண்டம் இருண்டது. லட்சுமிதேவி வருந்தினாள்.இதனை அறிந்த பார்வதி, மகாலட்சுமியிடம், "பூமியில் உள்ள பாரிஜாத வனத்தில் தங்கி, அங்கிருக்கும் சுயம்புலிங்கத்தைப் பூஜித்தால் உன் கணவனை அடையலாம்," என்றாள். திருமகளும் அங்கு ஒரு மண்டலம் தங்கி, சிவபூஜை செய்து கணவனை மீட்டாள். பின், இருவரும் வேகவதி (வைகை) ஆற்றில் நீராடி சிவனை பூஜை செய்து வழிபட்டனர்.அவர்களுக்கு காட்சி தந்த சிவன், சில விதைகளை திருமாலிடம் கொடுத்து பிருந்தையின் சாம்பலில் தூவச்சொன்னார். அதன்படியே செய்ய அதிலிருந்து துளசி தோன்றியது. திருமால் அந்த துளசியால் சிவனை அர்ச்சித்து விட்டு, மீதியை மாலையாக்கி கழுத்தில் அணிந்து கொண்டார். எனவே, இந்தக் கோயிலில் திங்கள்கிழமை மட்டும் சிவனுக்கு துளசியால் அர்ச்சனை செய்யப்படுகிறது. இங்குள்ள சிவன் திருநோக்கிய அழகியநாதர் என்றும், அம்பாள் மருநோக்கும் பூங்குழலி என்றும் அழைக்கப்படுகின்றனர். திருமகளும், திருமாலும் வழிபட்டதால் சிவனுக்கு "ஐஸ்வர்யநாதர்' என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இவரை வழிபட வாழ்வில் வளம் பெருகும் என்பது ஐதீகம்.

கஷ்டநிவாரண கால பைரவர்:

சிவாலயங்களில் பைரவர் ஒரு நாயுடன் காட்சி தருவார். இங்கு இரண்டு நாய்களுடன் காட்சி தருகிறார். இது ஒரு அபூர்வ அமைப்பாகும். தேய்பிறைஅஷ்டமியோடு வளர்பிறை அஷ்டமியிலும் இவருக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. வாழ்வில் ஏற்படும் கஷ்டம் நீங்க வேண்டி தேய்பிறையிலும், செல்வவளம் பெருக வளர்பிறையிலும் இவரை வழிபடுகின்றனர். "கஷ்ட நிவாரண கால பைரவர்' என்னும் இவரை வழிபட எதிரிகள் தொல்லை நீங்கும். இக்கோயிலில் பச்சை நிற மரகதலிங்கங்கள் உள்ளன. பிரதோஷ நாட்களில் இவற்றுக்கு அபிஷேகம் நடக்கிறது.

இசைக்கல் நடராஜர்:

இங்குள்ள நடராஜர் சிலை, ஒலிவடிவாக இசைக் கல்லில் வடிக்கப்பட்டதாகும். பதஞ்சலி, வியாக்ரபாதருக்கு நடனதரிசனம் தரும் இவர் சிவகாமி அம்பாளுடன் அருள்பாலிக்கிறார். ஆருத்ரா தரிசனத்தன்று அதிகாலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வீதியுலா வருகிறார். நள மகாராஜன் இத்தல இறைவனை வழிபட்டு பிரிந்த மனைவி, குழந்தையை அடைந்ததாக தல வரலாறு கூறுகிறது. அதன்பின், இங்கு சிவனுக்கு விமானம் அமைத்து நன்றிக்கடன் செலுத்தினான். நளனால் அமைக்கப்பட்ட இதற்கு "புண்ணியவிமானம்' என்று பெயர்.

இருப்பிடம் :

மதுரை - ராமேஸ்வரம் ரோட்டில் 34 கி.மீ.,

திறக்கும் நேரம் :

காலை 7 - 12, மாலை 5 - இரவு 8.

போன் :

94435 03049, 94431 81637.