உள்ளூர் செய்திகள்

சிவலிங்க வடிவத்தில் யந்திர சனீஸ்வரர்

நவக்கிரகங்களில் ஒருவரான சனி பகவானை சிலை வடிவில் தரிசித்திருப்பீர்கள். திருவண்ணாமலை மாவட்டம் ஏரிக் குப்பத்தில் யந்திரம் பொறித்த சிவலிங்க வடிவில் சனீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.தல வரலாறு: பல்லாண்டுகளுக்கு முன், இப்பகுதியை ஆண்ட சிற்றரசர் ஒருவர் சனீஸ்வரருக்கு கோவில் எழுப்ப விரும்பினார். சனீஸ்வரர் ஈஸ்வர பட்டம் பெற்றவர் என்பதன் அடிப்படையில் யந்திரங்களை பிரதிஷ்டை செய்து, சிவலிங்க பாண வடிவில் சிலை பிரதிஷ்டை செய்து, கோவில் எழுப்பினார். காலப்போக்கில் இக்கோவில் அழிந்து, சுவாமி சிலை மட்டும் திறந்தவெளியில் இருந்தது. பிற்காலத்தில் பக்தர்கள் இந்த இடத்தில் மீண்டும் கோவில் எழுப்பினர். யந்திரங்களுடன் இருப்பதால் இவருக்கு யந்திர சனீஸ்வரர் என்ற பெயர் உண்டானது.சிவலிங்க வடிவம்: சிவலிங்க வடிவிலுள்ள சனீஸ்வரரே இங்கு மூலவராக வீற்றிருக்கிறார். பிரகாரத்தில் வரசித்தி விநாயகர் சன்னிதி உள்ளது. மூலஸ்தானத்தில் தாமரை பீடத்தின் மீது, இரண்டரை அடி அகலம், ஆறரை அடி உயரத்துடன் அமைந்த சிவலிங்க அமைப்பில் சனீஸ்வரர் காட்சியளிக்கிறார். சுவாமியின் உச்சியில் சிவனைப் போலவே சூரியன், சந்திரன் உள்ளனர். நடுவே காகம் இருக்கிறது. லிங்க பாணத்தின் மத்தியில் அறுகோண அமைப்பிலுள்ள 'ஷட்கோண யந்திரம்' உள்ளது. இச்சிலையில் 'நமசிவாய' என்னும் சிவமந்திரம், பீட்சாட்சர மந்திரம், லட்சுமி கடாட்ச மந்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.வில்வ அர்ச்சனை: சுற்றிலும் வயல்வெளி இருக்க, அதன் மத்தியில் அமைந்த கோவில் இது. முகப்பில் ஐந்து காகங்கள் பூட்டிய தேரில், சனீஸ்வரர் பவனி வரும் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. சன்னிதி முன் மண்டபத்தில் மேல்புறம் வாகனத்துடன் கூடிய நவக்கிரகங்கள் ஓவிய வடிவில் உள்ளனர். கருவறையில் மேற்கூரை கிடையாது. மழை, வெயில் சனீஸ்வரர் மீது விழும் விதத்தில் சன்னிதி உள்ளது. இவருக்கு சிவனுக்கு உகந்த வில்வத்தால் அர்ச்சனை செய்வது சிறப்பு. சனிக்கிழமைகளில் காலை 6:00 - 7:00 மணிக்குள் சனி ஓரை நேரத்தில் இவருக்கு அபிஷேகம் செய்யப்படும். பின், கோ பூஜையுடன், யாகசாலை பூஜை நடக்கும். காணும் பொங்கல் பண்டிகையன்று 108 பால்குட அபிஷேகம் நடத்தப்படும். சனீஸ்வரரின் தந்தையான சூரியன் இங்கு தீர்த்த வடிவில் இருக்கிறார். சூரியனுக்கு 'பாஸ்கரன்' என்று ஒரு பெயர் உண்டு. அவர் பெயரால் 'பாஸ்கர தீர்த்தம்' என்று இது அழைக்கப்படுகிறது. இந்த தீர்த்தத்தால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. நீண்ட ஆயுள் பெறவும், தொழில் சிறக்கவும் எள் தீபமேற்றி வேண்டிக் கொள்கிறார்கள். இருப்பிடம்: திருவண்ணாமலையில் இருந்து 58 கி.மீ., வேலூரில் இருந்து 41 கி.மீ., தூரத்திலுள்ள ஆரணி சென்று, அங்கிருந்து படவேடு செல்லும் வழியில் 9 கி.மீ., சென்றால் ஏரிக்குப்பம்.திருவண்ணாமலை - வேலூர் சாலையில் (50 கி.மீ.,) உள்ள சந்தவாசல் சென்று, அங்கிருந்து 3 கி.மீ., சென்றாலும் இத்தலத்தை அடையலாம். நேரம்: காலை 8:00-மதியம் 1:00, மாலை 3:00-இரவு 7:00 மணி. சனிக்கிழமைகளில் காலை 6:00-இரவு 9:00 மணி. அலை/தொலைபேசி: 93602 23428, 04173 - 229 273