கயிற்றைக் கட்டிய வயிற்றன்
UPDATED : ஆக 19, 2011 | ADDED : ஆக 19, 2011
வெண்ணெய் திருடும் கண்ணனின் சேஷ்டைகளைப் பொறுக்க முடியாமல் யசோதை ஒருநாள் கயிற்றில் கட்டிப் போட்டுவிட்டாள். இந்நிகழ்ச்சி பற்றி இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தின் 'ஆய்ச்சியர் குரவை' பகுதியில் குறிப்பிடுகிறார். ''மலையை மத்தாக்கி, வாசுகிப் பாம்பை நாணாக பூட்டி பாற்கடலைக் கடையச் செய்தவனே! அம்மா கட்டிய சிறுகயிற்றில் எப்படி கட்டுண்டு கிடந்தாய்? இதென்ன மாயம்!'' என்று கேள்வி கேட்கிறார். இதையே பெரியாழ்வாரும், '' உரலோடு யசோதை கட்டிப் போட்டபோது எப்படி தாங்கிக் கொண்டாயோ?'' என்று பாசத்துடன் ஏங்குகிறார். இக்கயிறு கட்டிய நிலையில் தான் கண்ணனுக்கு 'தாமோதரன்' என்ற திருநாமம் உண்டானது. 'தாம்பு' என்றால் 'கயிறு'. 'உதரன்' என்றால் 'வயிறைக் கொண்டவன்' . அதாவது 'கயிற்றைக் கட்டிய வயிற்றன்' என்பது இப்பெயரின் பொருள்.