நந்தி இல்லாத சிவாலயம்
UPDATED : மார் 18, 2021 | ADDED : மார் 18, 2021
பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்த சிவனுக்கு தோஷம் ஏற்பட்டது. பரிகாரம் தேடிய சிவன், அந்தணரைக் கொம்பால் குத்திக் கொன்ற காளைக்கன்றைக் கண்டார். அக்கன்றின் தாய்ப்பசு, ''மகனே! கோதாவரி ஆற்றில் நீராடி உன் பாவம் போக்கிக் கொள்'' என்று வழிகாட்டியது. காளைக்கன்று ஆற்றுக்கு செல்ல சிவனும் பின்தொடர்ந்தார். இருவரும் ஒரே நேரத்தில் நீராடி பாவம் போக்கிக் கொண்டனர். சிவனைக் கண்டதும் காளை அவர் முன் மண்டியிட வந்தது. “என் பாவம் தொலைக்க குருநாதர் போல வழிகாட்டிய நீ மண்டியிடக் கூடாது'' என்றார் சிவன். இதனடிப்படையில் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகிலுள்ள பஞ்சவடி கபாலீஸ்வரர் மகாதேவர் கோயிலில் நந்திக்கு சன்னதி இல்லை.