தீயை அணைக்கும் தீ
UPDATED : நவ 14, 2024 | ADDED : நவ 14, 2024
தங்கத்தை வாரிக் கொடுத்தாலும் பெறுபவர் 'போதாது' எனச் சொல்லுவார். ஆனால் உணவு உண்பவருக்கு இது பொருந்தாது. பசியில் விருப்பமுடன் சாப்பிடும் மனிதன், வயிறு நிரம்பினால் “போதும்! திருப்தியா சாப்பிட்டாச்சு” என மறுப்பான். 'வயிறை எரிக்கும் பசித்தீயே மனிதனின் கொடிய எதிரி' என்கிறது வேதம். இதை போக்குவதை குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர் வள்ளலார். அருட்பெருஞ்ஜோதியாக கடவுளை வணங்கிய இவர், தனிப்பெருங்கருணையால் கடலுார் மாவட்டம் வடலுாரில் சத்தியதர்ம சாலையை நிறுவினார். இங்கு இவர் ஏற்றிய அடுப்புத்தீ இன்றும் மக்களின் பசித்தீயை அணைக்கிறது.