உள்ளூர் செய்திகள்

ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 40

பாசமான கோசலைராமன் கானகம் செல்கிறான் என்ற செய்தி கோசலையை மனமொடியச் செய்தது. இதை தடுக்க வேண்டும் என்ற ஆவேசத்தில் தசரதன் கைகேயியின் மாளிகையில் இருப்பதை அறிந்து ஓடினாள். ஒருவேளை கைகேயி தசரதனிடம் மன்றாடுகிறாளோ? ராமனை போகவேண்டாம் எனத் தடுக்கிறாளோ? சிந்தித்தபடி உள்ளே நுழைந்த கோசலை அங்கே கைகேயி தன் இயல்புக்கு மாறாக, வெறி பிடித்தவளாக தலையை விரித்து நின்றிருப்பதையும், தசரதன் அலங்கோலமாக வீழ்ந்து கிடப்பதையும் கண்டு திடுக்கிட்டாள். கணவனிடம் தன் கோபத்தை வெளிப்படுத்தினாள். ''பரதனுக்கு பட்டாபிஷேகம் என்றீர்கள், சரி, ஆனால் ராமனை ஏன் காட்டுக்கு விரட்டுகிறீர்கள்?'' என ஆவேசமுடன் கேட்டபடி அவரை உலுக்கினாள். இதற்கிடையில் விவரம் அறிந்த வசிஷ்டர் அங்கே வந்து பார்க்க, தசரதன் உயிர் நீங்கும் வேதனையில் இருப்பதை அறிந்து பதறினார். தன்னுடைய இழிநிலைக்குக் காரணம் கைகேயிதான் என்பதை தசரதன், தட்டுத் தடுமாறியபடி கூறக் கேட்டு வசிஷ்டர் மட்டுமல்ல, கோசலையும் நிலை குலைந்தாள். ''கைகேயி, நீயா இதற்குக் காரணம்? பண்பாளனான ராமனை வளர்த்த உன் மனதுக்குள் இப்படி விஷ எண்ணம் வேரூன்றியது எப்படி? அவனது நற்பண்புச் சாயல் உன்னைத் தீண்டவில்லையா? ஏன் இப்படி செய்தாய்?'' என்றெல்லாம் கேட்டு அரற்றினாள். பிறகு தசரதன் அருகில் அமர்ந்து, ''கவலைப்படாதீர்கள், ராமன் திரும்ப வந்து விடுவான்'' என ஆறுதல் அளித்தாள். கூடவே ஒரு சந்தேகமும் எழுந்தது. ராமன் திரும்புவான் எனில் அது தசரதன் ஆணையை மீறுவது போலாகுமே எனக் கருதினாள். மகன் காட்டில் உழல்வது அல்லது தசரதன் கைகேயிக்குக் கொடுத்த சத்தியத்தை மீறுவது, எது தேவலை என குழம்பித் தவித்தாள் கோசலை. ராமனை, சீதை, லட்சுமணனுடன் வனத்திற்கு அழைத்துச் சென்ற நல் அமைச்சன் சுமந்திரன் எப்படியாவது ராமனை சமாதானப்படுத்தி திரும்ப அழைத்து வந்துவிடுவான் என்றே கோசலை நம்பினாள். ராமன் பின்னால் சென்ற அயோத்தி மக்களும் தங்களின் அன்பு பிணைப்பால் அவனை இழுத்து வர மாட்டார்களா என்ன?ஆனால் சுமந்திரன் ஏமாற்றமுடன் திரும்பியதைக் கண்ட தசரதன் அப்போதே உயிர் நீத்தான். அதைக் கண்டு முகத்தைக் கைகளால் அறைந்தபடி துக்கம் மேலிட கதறினாள் கோசலை.அவளது ஆத்திரம் அருகில் நின்ற கைகேயி மீது பாய்ந்தது. ''இப்போது உனக்கு சந்தோஷமா? உன் குதர்க்கமான புத்தியால், மன்னவனால் மறுக்க முடியாதபடி ஏற்கனவே அவரிடம் பெற்ற வரத்தால் உன் மகன் பெயரைச் சொல்லி நாட்டைப் பறித்தாய். உன் சூழ்ச்சி வெற்றிகரமாக முடிந்ததல்லவா?'' என்று சொல்லி அழுத கோசலை மயங்கி தசரதன் உடல் மீது சாய்ந்தாள். 'வடித் தாழ் கூந்தற் கேகயன் மாதே மதியாலே பிடித்தாய் வையம் பெற்றனை பேரா வரம் இன்னே முடித்தாய் அன்றே மந்திரம் என்றாள் முகில்வாய் மின் துடித்தாலென்ன மன்னவன் மார்பில் துவள்கிறாள்-கம்பர்ஆனால் தன் மாமன் நாட்டிற்குச் சென்ற பரதன், அயோத்திக்குத் திரும்பியதும் நடந்தவற்றை அறிந்து வெகுண்டான். பெற்றத் தாயென்றும் பாராமல் கைகேயியைத் துாற்றினான். 'வேண்டாம் எனக்கு அரச பதவி' என வெறுத்தான் 'வனம் செல்வேன், அண்ணல் ராமனின் பாதம் பற்றி நாடு திரும்புமாறு வேண்டுவேன். அந்த முயற்சியில் வெற்றியும் பெறுவேன்' என சூளுரைத்தபோது, அதைக் கேட்ட கோசலை நெகிழ்ந்தாள். மகனுக்கு இருக்கும் பாசம், தாய்க்கு இல்லையே என கைகேயியை நொந்து கொண்டாள். ஆனால் பரதனின் முடிவைக் கண்டு, தான் தசரதன் மீதும், கைகேயி மீதும் வெளிப்படுத்திய கோபத்தை எண்ணி வெட்கப்பட்டாள். ராமனின் தாயாக இருப்பதற்கு தகுதியற்றவள் என தன்னைத் தானே பழித்தாள். அதோடு பரதன், சத்ருக்னன், சுமந்திரன் மற்றும் படை வீரர்கள், அயோத்தி மக்கள் ஆகியோருடன் தானும், சக கிழத்திகள் இருவரும் சென்று ராமனைத் திரும்புமாறு அழைக்கக்கூடிய வாய்ப்பு கிட்டியதில் மகிழ்ச்சி கொண்டாள். ராமனை மறுபடியும் பார்க்கலாமே! ஆனால் மனதிற்குள் ஒரு சந்தேகம் - தந்தை சொல்லை தனயன் தட்டுவானா?கங்கையின் இக்கரையில் குகனை சந்தித்த போது, கோசலைக்கு அவள் அறியாமலேயே அவன் மீது தனி அபிமானம் ஏற்பட்டது. தன்னை அவனிடம் பரதன் அறிமுகப்படுத்தி வைத்த போது, ''அருமைப் புதல்வர்களே, நீங்கள் வருத்தப்பட வேண்டாம். ராமனும், லட்சுமணனும் காட்டிற்குச் சென்றதும் ஒருவகையில் நன்மைக்குதான். அதனால்தான் குகன் போன்ற இனிய நண்பனை சந்திக்க முடிந்தது. இந்த அன்பனும், ஆண்மை மிக்கவனுமான குகன் என்ற சகோதரனுடன் சேர்த்து நீங்கள் ஐவரும் ஒற்றுமையாய் வாழுங்கள்'' என வாழ்த்தினாள். இதைக் கேட்டு குகன் சிலிர்த்துப்போய். 'அடடா, என்ன ஒற்றுமை! சில நாட்களுக்கு முன்பு ராமன், என்னை சகோதரனாக ஏற்று 'நாம் ஐவரானோம்' என நட்புக்குப் பாச இலக்கணம் வகுத்தான். இப்போதோ, அவனது தாயார் அதே வாக்கை சொல்கிறாரே' என நன்றிக் கண்ணீர் பெருக்கினான். கங்கையின் மறுகரையில் ராமனை சந்தித்த போது கோசலை பொங்கிய கண்ணீரைக் கட்டுப்படுத்தினாள். உடன் வந்திருக்கும் கைகேயி, தான் இழைத்த பெரும்பிழையால் ராமன் இப்படி நலிந்து போனானே என குற்ற உணர்வில் தவிப்பதைக் கண்டாள். தன் அழுகையால் ஏற்கனவே வெட்கத்தாலும், அவமானத்தாலும் குன்றிய அவள் மனதை மேலும் நோகடிக்க வேண்டாம் எனக் கோசலை கருதினாள். தாயின் மனப் போராட்டத்தை தெரிந்து கொண்ட ராமன், முதலில் கைகேயியின் காலில் விழுந்து வணங்கினான். பிறகு கோசலை, சுமித்திரை பாதங்களைப் பணிந்தான். மூவரும் அவனையும், சீதையையும் அரவணைத்துக் கொண்டு, தசரதன் இறந்த செய்தியைத் தெரிவித்துத் தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தினர். இந்த சந்தர்ப்பத்தில் பரதனின் கோரிக்கையை ஏற்று ராமன் அயோத்தி திரும்புவான் என கோசலை எதிர்பார்த்தாள். ஆனால் ''தந்தைதான் உலகை நீத்து விட்டாரே, அரசுரிமை பெற்ற நானும் அதை உமக்கு அர்ப்பணிக்கத் தயாராக இருக்கிறேனே, அதனால் அயோத்திக்குத் திரும்பலாமே'' என பரதன் கெஞ்சியும் ராமன், தந்தையின் கட்டளையை நிறைவேற்றாமல் அயோத்தி மீள மாட்டேன் என உறுதியாகச் சொன்னான். வேறு வழியின்றி ராமனின் பாதுகையைப் பெற்றுக் கொண்டு அதையே அரியாசனத்தில் ஏற்றி, அதன் வழிகாட்டலில் அயோத்தி நிர்வாகத்தை மேற்கொண்டான் பரதன். தினமும் பாதுகையைப் பார்த்துப் பார்த்து பதினான்கு ஆண்டுகளின் நாட்களைக் கடத்திக் கொண்டே வந்தாள் கோசலை. அரசனின் ஆணைப்படி பதினான்கு ஆண்டுகள் முடிந்த நாளில் ராமன் அயோத்திக்குத் திரும்பாததால், தீயில் உயிரை மாய்க்க தீர்மானித்தான் பரதன். அதைக் கண்டு பதற்றமாய் நெகிழ்ந்தாள் கோசலை. ''மகனே, பரதா, மன்னர் ராமனின் பிரிவால் உயிரிழந்ததும், ராமன் காடு ஏக வேண்டியிருந்ததும், இன்று திரும்ப வேண்டிய ராமன் இதுவரை வராதிருப்பதும், என் முன்வினைப் பயன்தான். ஆகவே பொறுமை இழந்து தீப்புக முனையாதே. என் செல்வமே, கோடி ராமர்கள் சேர்ந்தாலும் உனக்கு இணையாக மாட்டார்கள்'' என கண்ணீர் பெருக்கினாள்.பரதன் சிலிர்த்துக் கொண்டான். அன்று குகன் நுாறு ராமர் உனக்கு இணையாவரோ எனக் கேட்டான்; இன்று கோசலையோ ஆயிரம் ராமர் ஒப்பாவரோ என ஆசியளிக்கிறாரே!நல்லவேளையாக அனுமன் வந்து தகவல் சொல்ல, பரதன் அனலில் இருந்து மீண்டு புனலுக்குள் புகுந்தாற் போலானான். கோசலையும் நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி ராமன் வரவை எதிர்பார்த்தாள். -முற்றும்பிரபு சங்கர் 72999 68695இந்த தொடரை புத்தகமாக பெற 1800 425 7700ல் தொடர்பு கொள்ளலாம்.