நோய் தீர்க்கும் மருந்து
காஞ்சி மஹாபெரியவர் ஸித்தி அடைவதற்கு ஓராண்டுக்கு முன்பாக உடல் தளர்ச்சி பெற்ற நிலையில், ஒருநாள் மாலையில் தன் சீடர்களை அழைத்தார். சிதம்பரம் கோயிலில் நடராஜருக்கு குஞ்சிதபாதம் என்னும் மாலை சாத்துவது வழக்கம். அதை தான் தரிசிக்க வேண்டுமென தெரிவித்தார். இதைக்கேட்ட சீடர்கள் கலக்கம் அடைந்தனர். மஹாபெரியவரை சிதம்பரத்திற்கு எவ்வாறு அழைத்துச் செல்வது என சிந்தித்தனர்.குஞ்சிதபாதம் என்பது பலவகை நறுமண வேர்களால் கட்டப்பட்ட மாலையாகும். குஞ்சிதபாதம் மாலையுடன் நடராஜரை தரிசித்தால் நோயற்ற வாழ்வும், மோட்சமும் கிடைக்கும்.என்ன ஆச்சரியம்! மஹாபெரியவர் சீடர்களுடன் பேசிய மறுநாள் காலை சூரிய உதயத்துக்கு முன்பாக சிதம்பரம் தீட்சிதர்கள் சிலர் காஞ்சி மடத்திற்கு வந்தனர். நடராஜருக்கு பூஜை செய்யும் அவர்கள் காஞ்சி மஹாபெரியவரை தரிசித்து பிரசாதம் கொடுக்க அனுமதி கேட்டனர். சீடர்கள் வியப்பின் உச்சிக்கே போய்விட்டனர். சுவாமிகளிடம் சென்று விபரத்தைக் கூறவும், அவருக்கும் பேரானந்தம். தீட்சிதர்களை வருமாறு சைகையால் அழைத்து, பிரசாதத் தட்டிலிருந்து குஞ்சிதபாதத்தை எடுத்து தலையில் வைத்துக் கொண்டார். குஞ்சிதபாதத்துடன் உள்ள மஹாபெரியவரின் படம் நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது. 'தேடி வந்த சிதம்பரம்' படத்தை வணங்கினால் நோயற்ற வாழ்வு அமையும்.