கடன்நீக்கும் ஆதிநாயகி
UPDATED : அக் 15, 2012 | ADDED : அக் 15, 2012
காஞ்சிபுரத்தில் 18கி.மீ., தூரத்தில் உள்ள இளையனார் வேலூரில் ஆதிநாயகி அம்மன் கோயில் உள்ளது. வடக்குநோக்கி காட்சி தரும் இவள் தன் இரு கைகளாலும் சின்முத்திரை காட்டுவது சிறப்பாகும். அம்பிகையின் பின்புறம் ஆதிரூபிணியாக மகாலட்சுமி வீற்றிருக்கிறாள். ஆதிமிகி, ஆதிவிகி என்னும் துவாரபாலகிகள் கோயிலைக் காவல் புரிகின்றனர். கேரளபாணியில் பால்பாயாசம் படைத்து வழிபடுகின்றனர். தலவிருட்சம் வேம்பு, வில்வம். பழங்காலத்தில் செய்யாற்றங்கரையில் வழிபாடு செய்யப்பட்ட இந்த அம்மன், வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு புதைந்து போனது. 300 ஆண்டுகளுக்கு முன் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய அம்மன், தனக்கு கோயில் கட்டி வழிபடுமாறு கட்டளையிட்டாள். அதன்படி அம்பிகை இங்கு ஆதிநாயகியாக அருள்பாலிக்கிறாள். இவளை வழிபட்டால் கடன்தொல்லை நீங்கி செல்வவளம் பெருகும் என்பது ஐதீகம்.