வீட்டில் பிள்ளையார் சிலை இருக்கிறதா?
பெரும்பாலான வீடுகளில் விநாயகர் சிலை வைத்துள்ளனர். அது அளவில் பெரிதோ, சிறிதோ...அதுபற்றி கவலையில்லை. அந்தப் பிள்ளையாருக்கு கட்டாயம் ஏதாவது ஒரு நைவேத்யம் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு பழமாவது வைக்க வேண்டும். சதுர்த்தி திதிகளில் முடிந்தவரை மோதகம், கோதுமை அப்பம், பழவகைகள், பொரி ஏதாவது ஒன்றை வைக்க வேண்டும். அப்பா சிவனுக்கு அபிஷேகம் என்றால் பிரியம். மாமா திருமாலுக்கு அலங்காரம் என்றால் பிரியம். அதுபோல, விநாயகருக்கு நைவேத்யம் என்றால் பிரியம். பானை வயிற்றோனுக்கு பசித்துக் கொண்டே இருக்குமல்லவா! அவர் போஜனப்பிரியர் என்பதற்கு அவ்வையாரும், அருணகிரியாரும் சான்று கூறியுள்ளனர்.''பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்'' என்று ஆரம்பிக்கிறாள் அவ்வையார். இவையெல்லாம் கலந்த நைவேத்யத்தை உனக்கு நான் தருகிறேன். எனக்கு நீ முத்தமிழ் அறிவையும் தா,'' என வேண்டுகிறாள். தமிழில் அதிகமார்க் பெற விரும்பும் மாணவ, மாணவிகள் இந்தப் பாடலை தினமும் பாராயணம் செய்ய வேண்டும். அருணகிரியார் தனது பாடலில் ''கைத்தல நிறைகனி அப்பமொடு அவல்பொரி' என்று விநாயகருக்கு பிடித்த நைவேத்யத்துடன் தான் திருப்புகழையே ஆரம்பிக்கிறார்.