எல்லோரும் வாழ வேண்டும் - விரும்புகிறார் காஞ்சிப் பெரியவர்
நாம் எப்படி வாழ்கிறோமோ, அப்படியே மற்றவர்களும் வாழவேண்டும் என்று நினைப்பதே உத்தமமான குணம். ஆனால், எண்ணம் மட்டும் உத்தமமாயிருந்து விட்டால் போதுமா? நாம் டாம்பீகமாக வாழ்க்கை நடத்திக் கொண்டு மற்றவர்களும் அப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அது நடக்குமா? எல்லாரும் ஆடம்பரமாக வாழ்வதும் நல்லது தானா? சவுக்யங்கள் ஜாஸ்தியாக ஆக, ஆத்ம அபிவிருத்திக்கே வழியில்லாமல் தானே ஆகிவிடும்! எத்தனை போட்டாலும் திருப்தி இல்லாமல் கபளீகரம் பண்ணுகிற நெருப்பு மாதிரி தான் ஆசை என்பது. எவ்வளவு சவுகர்யம் இருந்தாலும் திருப்திப்படாமல் இன்னும் புதுசு புதுசா சவுக்ய சாதனங்களைத் தேடிக் கொண்டு தான் இருக்கும். எத்தனைக்கெத்தனை எளிமையா வாழ்றோமோ, அத்தனைக்கத்தனை ஆனந்தம், ஆத்ம÷க்ஷமம். ஏழைகள் உள்பட எல்லாரும் எப்படி வாழ முடியுமோ, அப்படித்தான் நாமும் வாழ வேண்டும். அதாவது ரொம்ப சிம்பிளாக வாழவேண்டும் என்று முதலில் தீர்மானம் பண்ணிக் கொள்ள வேண்டும். வயிறு ரொம்பச் சாப்பாடு, மானத்தைக் காப்பாற்றத் துணி, இருப்பதற்கு ஒரு குச்சுவீடு இம்மாதிரியான அடிப்படைத் தேவைகள் எல்லாருக்கும் பூர்த்தியாக வேண்டும். இதற்கு மேல் ஆசைக்கு மேல் ஆசை, தேவைக்கு மேல்தேவை என்று ஆலாய்ப் பறக்க வேண்டி யதில்லை. அப்படி மற்றவர்களையும் பறக்காமல் இருக்கச் செய்வதற்காக, நாமும் எளிமையாக வாழ வேண்டும்.