நல்ல வார்த்தை நாலஞ்சு! (12)
நாட்டில் நல்ல வார்த்தைகள் காதில் விழுவதென்பதே குறைந்து விட்டது. இந்த வேளையில் எங்களால் ஆன ஏதோ ஒரு முயற்சி...படித்துப் பார்த்து கடைபிடிக்க முயற்சியுங்க!திருப்பதி கோயிலில், கல்யாண உற்ஸவத்திற்காக, நாங்கள் அமர்ந்திருந்தோம். திடீரென்று, என் பின்னால் அமர்ந்திருந்த ஒருவர்... இதுவரை அவரை நான் பார்த்ததில்லை - என்னுடைய தலையில் பலமாக ஒரு அடி போட்டு, ஆவேசத்துடன் கூறினார்: ''நீ வாழ்வு முழுக்க, உழைத்தே சம்பாதிக்க வேண்டும்''.'யார் என்னை அடிக்கிறார்? ஏன் அடிக்கிறார்? நான் என்ன தவறு செய்தேன்?' என்று திரும்பி பார்த்தால், மற்றவர்கள், அவரை ஒரு ஓரமாகக் கொண்டு போய் குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.மறு நாள் காலை, சென்னைக்கு திரும்பி செல்லும் வழியில், காளஹஸ்தியில் ஒரு துறவியை சந்தித்தோம். அவரிடம் முந்தைய தினம் நடந்த சம்பவத்தைக் கூறி, 'ஏதாவது விளக்கம் இருக்கிறதா?' என்று கேட்டேன்.அவர், புன்முறுவலுடன், ''நீ தார்மீக வழியில், கடுமையாக உழைத்து சம்பாதித்துத்தான் உண்ண வேண்டும் என்று உனக்கு உத்தரவாகி இருக்கிறது. இதை நீ கடைப்பிடி. எப்பொழுதாவது, உன்னுடைய ஆசைகள் அதிகமாகி, உனக்கு அதிகம்.. மேலும் அதிகம் வேண்டும் என்று தோன்றினால், இந்த இரண்டு ஸ்லோகங்களை படி,'' என்று ஆசிர்வதித்து வழியனுப்பினார்.அந்த ஸ்லோகங்கள் ரிக் வேதத்திலிருந்து எடுக்கப்பட்டவை. இரண்டுமே, சூதாட்டத்தைப் பற்றியது. அந்த இரண்டு ஸ்லோகங்களைப் பார்க்கலாம் : ''அக்ஷாச இத் அங்குஸிநோ நிதோதினோநிக்ருத்வான: தபனா: தாபயிஷ்ணவ:குமாரதேஷ்ணா ஜயத: புனர்ஹணோ மத்வ: சம்ப்ருக்தா: கிதவஸ்ய பர்ஹணா:'' என்பது ஒரு ஸ்லோகம். ''அøக்ஷர்மா தீவ்ய: க்ருஷிமித் க்ருஷஸ்வ, வித்தே ரமஸ்வ பஹு மன்யமான:தத்ர காவ: கிதவ தத்ர ஜாயா,தன்மே விசிஷ்டே சவிதா அயம் அர்ய:'' என்பது இன்னொரு ஸ்லோகம்.இவற்றின் விளக்கம் இது தான்.''பகடைகள் வைத்து (அதாவது சூதாட்டங்கள்) விளையாடதே. நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி வேலை செய்யும் உழவனைப் போல கடுமையாக வேலையில் ஈடுபடு. கடுமையான உழைப்பில் கிடைக்கும் செல்வம், உனக்கு சந்தோஷத்தை கொடுக்கும். இப்படி செய்தால், உன் மனைவி உன்னை விட்டு பிரியாமல், உன் கூடவே இருப்பாள். கடுமையான உழைப்பில் கிடைக்கும் வருமானத்தில் சந்தோஷமாக இரு''. உண்மை தானே... எப்பொழுது நாம் பணத்தாசையால், சீட்டு விளையாட்டிலோ, குதிரைப் பந்தயத்திலோ ஈடுபட்டு விடுகிறோமோ, அப்பொழுது நமக்கு பசி, தூக்கம் எல்லாம் மறந்து விடுகிறது. பணம் வரும், மேலும் வரும் என்று நினைத்தோ, அல்லது நாம் இதுவரை நஷ்டம் அடைந்த பணத்தை திரும்பப் பிடித்து விடவேண்டும் என்று ஆசைப்பட்டோ, மேலும் மேலும் பணத்தை கட்டி, நம்முடைய நஷ்டத்தை அதிகரித்துக் கொள்கிறோம். கடன் வாங்க ஆரம்பிக்கிறோம், நகைகளை அடகு வைத்து அதில் வரும் பணத்தை சூதாட்டில் போடுகிறோம். எல்லாம் அழிந்த பிறகு, நாம் இழந்த எல்லாவற்றையும் திரும்பப் பெற முடியுமா? கண்கள் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதால் என்ன பயன்? மனம் ஒரு குரங்கு; நான் அதிகமாக ஆசைப்பட்டால், மனம் அலைக்கழிந்து, தகாத முறையில் பணம் சம்பாதிக்க முயற்சி செய்துவிடுவேனோ என்று நினைத்து, என்னை நேர் வழியில் செலுத்தும் வகையில், இந்த ஸ்லோகங்களைத் துறவி காண்பித்தாரா? சரி...என்னை ஒருவர் அடித்தாரே! அவர் யார்? சாட்க்ஷாத் வெங்கடாஜலபதியாகத்தான் இருக்க வேண்டும்! அவர் தான், அந்த இடத்தில் இப்படி ஒரு நாடகமாடி, துறவியைச் சந்திக்க வைத்து, நல்ல வார்த்தை நாலை கேட்க வைத்திருக்கிறார் என்று தான் எண்ண முடிகிறது.- தொடரும்