ஆயர்பாடி கிருஷ்ணன்
நந்தகோபர்- யசோதையின் பிள்ளையாக, கிருஷ்ணர் வளர்ந்த திருத்தலம் கோகுலம். இதனை தமிழில் 'ஆயர்பாடி' என்றும், 'ஆய்ப்பாடி' என்றும் சொல்வர். கண்ணனின் பாலபருவலீலைகள் அனைத்தும் இங்கு தான் நடந்தன. வெண்ணெய் உண்ட வாயனாய், இளங்கன்னியரை ஏமாற்றியதும், கோபாலானாக கன்று மேயத்ததும் இத்தலத்தில் தான். பெரியாழ்வார் தன்னை தாயாகவும், கண்ணனை குழந்தையாகவும் பாவித்து பாடும் பாடல்கள் புகழ்பெற்றவை. ஆண்டாளும் பாவைநோன்புக்கு அழைக்கும்போது, ''சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச்சிறுமீர்காள்!'' என்று ஆய்ப்பாடியின் பெருமையைப் போற்றுகிறாள். பாகவதத்தின் பத்தாவது பகுதியில் கிருஷ்ணரின் வரலாறு விரிவாக கூறப்பட்டுள்ளது. டில்லியில் இருந்து ஆக்ரா செல்லும் பாதையில் உள்ள புகழ்பெற்ற தலமான மதுராவில் இருந்து 12கி.மீ., தொலைவில் ஆய்ப்பாடி உள்ளது. இங்குள்ள கோயிலில் மூலவர் 'நவமோகன கிருஷ்ணன்' என்ற திருநாமம் கொண்டு கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார்.