மாங்கனித்திருவிழா
பெண் நாயன்மார்களில் ஒருவர் காரைக்கால் அம்மையார். இவர் கயிலாயத்திற்கு தலையால் நடந்து சென்றார். சிவபெருமானால் அம்மையே (அம்மா) என அழைக்கப்பெற்றார். புதுச்சேரி காரைக்கால் நகரில் பிறந்த இவர், பரமதத்தன் என்னும் வணிகரை திருமணம் செய்தார்.ஒருநாள் கணவர் இல்லாத போது, உணவருந்த வந்த சிவனடியாருக்கு வீட்டில் இருந்த இரண்டு மாங்கனிகளில் ஒன்றைக் கொடுத்து அனுப்பினார். மற்றொன்றை கணவருக்கு கொடுத்த போது, நடந்ததை அறியாத அவர் இரண்டாவது கனியை கேட்டார். அம்மையாரும் சிவனிடம் வேண்டி புதிய மாங்கனியைப் பெற்றார். இந்த அதிசயத்தை அறிந்த கணவர் மீண்டும் ஒரு கனி தருமாறு கேட்க அவ்வாறே செய்தார். இந்த வரலாற்றின் நினைவாக காரைக்கால் சோமநாதர் கோயிலில் ஆனி பவுர்ணமி அன்று (2022 ஜூலை 13) திருவிழா நடக்கிறது. தங்களது வேண்டுதல் நிறைவேற பக்தர்கள் தேர் மீது மாங்கனிகளை வாரி இறைப்பர்.