உள்ளூர் செய்திகள்

வர்ணிக்க வார்த்தை இல்லை சபரிமலை மேல்சாந்தி பரவசம்

'சபரிமலையில் ஓராண்டு தங்கிய அனுபவத்தை வர்ணிக்க வார்த்தை இல்லை. இங்கிருந்து செல்ல வேண்டும் என நினைக்கும் போது மனதில் பாரமாக உள்ளது,'' என்கிறார் பணி நிறைவு பெறும் மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி.சபரிமலையில், ஆண்டுக்கு ஒருமுறை மேல்சாந்தி நியமிக்கப்படுவார். கார்த்திகை முதல்நாளில் பொறுப்புஏற்கும் இவர் சபரிமலையில் ஒரு வருடம் தங்க வேண்டும். குடும்ப உறுப்பினர் மறைந்தாலும் போகக்கூடாது. தற்போது மலையில் தங்கியுள்ள நம்பூதிரி தன் அனுபவம் பற்றி கூறியதாவது:சபரிமலையில் கடந்த கார்த்திகை முதல்நாள் நடை திறந்த போது கிடைத்த அனுபவத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை. பயம் கலந்த சந்தோஷத்தில் திக்கு முக்காடினேன். இருமுடி கட்டு ஏந்தி வந்து, சில வினாடிகளே தரிசித்து செல்லும் ஐயப்ப விக்ரகத்தின் அருகில் கண்குளிர தரிசித்து பூஜிப்பது எனக்கு கிடைத்த பாக்கியம்.கடந்த 11 மாதத்தில், யாரும் இல்லாத நாட்களில் காலையும், மாலையும் காயத்ரி மந்திரம் ஜபித்தேன்.நடை அடைக்கப்பட்ட நாட்களில் விலங்குகள் நடமாட்டம் பற்றி ஊழியர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன். பாம்புகளை மட்டுமே பார்த்துள்ளேன். சபரிமலை வரும் பக்தர்கள் இங்குள்ள சூழ்நிலைகளை உணர வேண்டும். காடு, விலங்குகளை பாதுகாக்க வேண்டும். பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க வேண்டும். 41 நாள் விரதத்தை சரியாக கடை பிடிக்க வேண்டும். ஐப்பசி கடைசி நாள் இரவில் படி இறங்க வேண்டும் என நினைக்கும் போது மனதில் பாரமாக இருக்கிறது. சபரிமலை அனுபவத்தை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. இங்கிருந்து சென்ற பின், ஏற்கனவே பணிபுரிந்த பாலக்காடு சிறுபுழசேரி ஐயப்பன் கோயிலில் பூஜை செய்வேன்.