உள்ளூர் செய்திகள்

ஏழேழு பிறவிக்கும் பயமில்லை

திருப்பதி ஏழுமலைகளுக்கான பெயர் காரணம் தெரியுமா....1. வேங்கட மலை: 'வேம்' என்றால் பாவம், 'கட' என்றால் 'நாசமடைதல்'. பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு, 'வேங்கடமலை' என்று பெயர். இம்மலையில் தான் திருப்பதி கோயில் உள்ளது. 2. சேஷ மலை: பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார். 'சேஷன்' என்றால் 'பாம்பு'. எனவே இது ஆதிசேஷன் பெயரால் 'சேஷ மலை' எனப்படுகிறது.3. வேத மலை: வேதங்கள் மலை வடிவில் தங்கி பெருமாளை பூஜித்தன. இதுவே வேதமலை. 4. கருட மலை: வைகுண்டத்தில் இருந்து கருடனால் கொண்டு வரப்பட்ட மலை இது. 5. விருஷப மலை: பெருமாளை வழிபட்ட விருஷபன் என்னும் அசுரன் இங்கு மோட்சம் கிடைக்கப் பெற்றான். இவனது பெயரில் உள்ளது இந்த மலை. 6. அஞ்சன மலை: அனுமனின் தாய் அஞ்சனை குழந்தை பாக்கியம் கிடைக்க, திருப்பதியிலுள்ள ஆதிவராஹரை வேண்டி தவமிருந்தாள். அதன் பயனாக அனுமனைப் பெற்றாள். இவளது பெயரில் இருக்கும் மலை இது. 7. ஆனந்த மலை: ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் யார் பலசாலி என போட்டி ஏற்பட்டது. இதற்கு நடுவராக இருந்தவர் மகாவிஷ்ணு பலத்தில் இருவரும் சமமானவர்கள் என தீர்ப்பளித்தார். இதையறிந்த இருவரும் ஆனந்தம் அடைந்தனர். இதன் காரணமாக இந்த மலை, 'ஆனந்த மலை' எனப்பட்டது. இந்த ஏழுமலைகளையும் ஏறி வருபவர்களுக்கு மனதில் என்றும் கவலையில்லை. ஏழேழு பிறவிக்கும் பயமில்லை.