வந்தாச்சு மகாளயபட்சம்
மகாளய பட்சம் செப்.2 ல் தொடங்குகிறது. மகாளய அமாவாசையன்று முன்னோர்களை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும். மகாளய பட்ச காலத்தில் முன்னோர்கள் ஆசி வழங்க பிதுர் உலகில் இருந்து பூலோகம் வருகின்றனர். அவர்களின் வரவை எதிர்பார்த்து உள்ளம், உடல் துாய்மையுடன் இருக்க வேண்டும். வீட்டையும் சுத்தமாக வைக்க வேண்டும். குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்வது கூடாது. இந்தக் காலத்தில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடத்துவதில்லை. ஏனெனில் முன்னோருக்கான திதி, தர்ப்பணம், சிரார்த்தம், தானம், தர்மம் செய்வதில் நாம் ஈடுபட வேண்டும் என்பதற்காக. கன்னியாகுமரி, ராமேஸ்வரம், வேதாரண்யம், தனுஷ்கோடி போன்ற கடற்கரை தலங்களுக்கு செல்லலாம். முடியாதவர்கள் வீட்டிலேயே பூஜை செய்து காகத்திற்கு அன்னமிடலாம். பசுவிற்கு கீரை, பழம் கொடுக்கலாம். இதுவும் முடியாவிட்டால் முன்னோர்களின் பெயரை உச்சரித்து 'காசி காசி' என்று செல்லியபடி வீட்டு வாசலில் எள், தண்ணீர் விட்டாலும் பலன் கிடைக்கும்.