உள்ளூர் செய்திகள்

கொரோனா எப்போது ஒழியும்

2020 செப். ராகு, கேது பெயர்ச்சிக்கு பின் கால சர்ப்ப தோஷத்திலிருந்து சூரியன் விடுபட்டதால் தொற்று குறைந்தது. சூரியன் மீண்டும் 2021 ராகு, கேது பிடியில் சிக்குண்டதால் 2வது அலை ஏற்பட்டது. கிருமிகள் சூரியன் ஒளி மூலமாகவே உருப்பெறுவதும், புது வடிவம் எடுப்பதும் நிகழ்கிறது. பங்குனியில் சனியின் பார்வை சூரியன் மேல் பட்டதால் இத்தொற்று அதிகரித்துள்ளது. விதி, மதி, கதி எனும் ஜோதிட சாஸ்த்திரத்தில் சூரியனே அனைத்துலகின் நற்கதிக்கும், நிர்கதிக்கும் காரணமாக இருக்கிறார். கர்மாதிபதி என்று போற்றப்படும் சனி பகவான் சொந்த வீடான மகரம் எனும் பூமியில் (நிலம்) சஞ்சரிக்கிறார். அவரே தர்மராஜன் என்று போற்றப்படுவதால் பூமியில் அதர்மங்கள் பெருகும்போது அவரவர் செய்த கர்மவினை பலனை 30 வருடங்களுக்கு ஒருமுறை தனது சொந்த வீடான மகரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் அளிப்பார். காலபுருஷனின் கர்மவினை தத்துவத்தின் அடிப்படையிலும், சூரியனால் பெறப்படும் ஆத்ம கதித் தத்துவம், சந்திரனால் பெறப்படும் சரீரம், மனம் சார்ந்த மதி தத்துவம், புதனால் பெறப்படும் புத்தித் தத்துவம், குருவால் பெறப்படும் வாழ்க்கை நெறித்தத்துவம், சுக்கிரனால் பெறப்படும் நீதி சார்ந்த போகத் தத்துவம், சனியால் பெறப்படும் தர்ம, கர்ம காரகத் தத்துவம், ராகுவால் பெறப்படும் யோகத் தத்துவம், கேதுவால் பெறப்படும் ஞானத்தத்துவம் போன்ற ஜோதிட சாஸ்திர, வானியல் சாஸ்த்திர ஆராய்ச்சிகளின் மூலம் இத்தொற்றின் காரணம் தெரிய வந்துள்ளது. இதன் அடிப்படையில் இந்நோய் இரண்டு வருடங்களுக்கு இருக்கும். ஆனி மாதம் அதாவது மிதுன மாதம், புதனின் வீடான வாயு வீட்டில் ராகுவின் நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்தை பிளந்து கொண்டு சூரியன் கடந்த பிறகு, நோய்த் தொற்றிலிருந்து விடுபடலாம். மீண்டும் கார்த்திகை மாதம் உருப்பெற வாய்ப்புள்ளது. ஆனாலும் காலபுருஷ தத்துவம் உட்பட சில தத்துவத்தின் அடிப்படையிலும் மற்ற கிரக சஞ்சாரங்களை கணக்கிடும் பொழுது அதர்மத்தினால் ஏற்பட்ட காலபுருஷனின் விரக்தியே பெரும் மூச்சாய் வெளிப்பட்டு வியாதியாய் பெருகியது. அனைவரும் தர்மத்தைக் கடைபிடித்து கால புருஷனின் மனம் குளிர காளி தேவியையும், கால பைரவரையும் வழிப்பட்டு நோயிலிருந்து விடுபடுவோம். சூரிய நாராயணர், நவக்கிரக வழிபாடு செய்வது, பஞ்ச பூதங்கள் சாந்தி அடைய பஞ்ச சாந்தி வேத மந்திரங்களை பாராயணம் செய்வது போன்றவை மூலம் இந்நோயிலிருந்து விடுபடலாம். அதர்மத்தை விடுத்து தர்மத்தை காத்தால் நம் சந்ததியினருக்கு நோயற்ற வாழ்வை கொடுக்கலாம். ரா. பார்த்தசாரதி