உள்ளூர் செய்திகள்

அபூர்வ சக்தி

ஒருமுறை வெளிநாட்டைச் சேர்ந்த அறிஞர் ஒருவர், 'என்னால் நீரில் நடக்க முடியும், தீயில் குளிப்பேன், மணலைக் கயிறாக திரிப்பேன்' என தற்பெருமையுடன் கூறினார். இறைவனின் புகழ் பற்றி ஒரு வார்த்தை கூட அவர் பேசவில்லை. இதைக் கேட்டுக் கொண்டிருந்த முல்லா பாடம் புகட்ட விரும்பினார். தனக்கும் அபூர்வ சக்தி இருப்பதாக கூறினார் முல்லா. ''அப்படி என்ன சக்தி இருக்கிறது'' எனக் கேட்டார் அறிஞர். ''இருளில் எவ்வளவு துாரம் வேண்டுமானாலும் செல்வேன்'' ''அப்படியானால் அடர்ந்த காட்டுக்குள் இரவில் செல்வீரா'' ''தாராளமாக'' அதன்படி ஒரு அமாவாசை நாளில் ஏற்பாடு நடந்தது. எல்லோரும் கூடினர். காட்டைச் சுற்றி விட்டு வருகிறேன் என சொல்லிச் சென்றார் முல்லா.வானம் கும்மிருட்டாக இருந்ததால் அருகில் நிற்கும் ஆள் கூட தெரியவில்லை. ஆனாலும் முல்லாவின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தனர். குறுக்கும் நெடுக்குமாக வளர்ந்துள்ள மரங்களைத் தாண்டி முல்லா எப்படி வருவார் என ஆர்வமாக நின்றனர். சற்று நேரத்தில் விளக்கு ஏந்தியபடி வந்தார் முல்லா. ''இருளில் நடப்பதாக சொல்லி விட்டு இப்படி விளக்குடன் வருகிறீரே...'' எனக் கேட்டனர். ''உண்மை தான். இருட்டில் என்னால் பார்க்க முடியும். ஆனால் நீங்கள் எப்படி பார்ப்பீர்கள்? ஒருவேளை வேறொருவரை நடக்க விட்டு ஏமாற்றுகிறார் என நீங்கள் நினைக்கக் கூடாதே... என்னை அடையாளம் காட்டவே விளக்குடன் வந்தேன்'' என்றார். 'எல்லாப் புகழும் இறைவனுக்கே...' என தனக்குரிய கடமையைச் செய்பவனே நல்ல மனிதன்.