வருவது வரட்டும்
அரபு நாட்டைச் சேர்ந்த அமீர், சுயநலம் கொண்ட நண்பர்களை விட்டு காட்டிற்குள் மறைந்து வாழ்ந்தார். மனிதர்களை விட காட்டிலுள்ள விலங்குகளே மேல் எனக் கருதினார். அங்கு வந்த வெள்ளையர்கள் சிலர் அவரை கைது செய்து இழுத்துச் சென்றனர். அடிமையை போல சுரங்கம் தோண்டுவதில் இரவு பகலாக வேலை வாங்கினர். அடிமையாக வாழ்வதை விட நண்பர்களுடன் பட்ட வேதனை தேவலை எனத் தோன்றியது. ஒருநாள் பணக்காரர் ஒருவர் வெள்ளையரைக் காண வந்தார். அங்கிருந்த அமீர் மீது இரக்கம் ஏற்படவே, எட்டு தினார் பணத்தைச் செலுத்தி விடுவித்தார். தனக்கு உதவியாக வீட்டிலேயே தங்கச் செய்தார். நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்த அமீர் மீது ஏற்பட்ட நல்லெண்ணத்தால் தன் மகளுக்கு திருமணம் செய்து வைத்தார்.சில காலம் மகிழ்ச்சியாக வாழ்ந்த அவர்களுக்குள் ஒருநாள் சண்டை வந்தது. அமீரிடம், '' அடிமையாக வாழ்ந்த உன் பேச்சை கேட்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை'' என மனைவி கத்தினாள். மனம் உடைந்த அமீர், 'சுரங்க வேலையை விட்டு வந்தது தவறு' என வருத்தப்பட்டார். அமீரின் நிலையை பார்த்தீர்களா... இறந்த காலத்தை எண்ணி வருந்தாதீர்கள். வருவது வரட்டும் என எதையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.