கல்வியைத் தேடு
'ஓதுவீராக! அவனே எழுதுகோல் கொண்டு உமக்கு எழுதக் கற்றுக் கொடுத்தான்' என்கிறது குர்ஆனின் முதல் வசனம். 'கல்வி ஒரு காணாமல் போன ஒட்டகம். அதைத் தேடுங்கள். நன்மை தரும் கல்வியை படியுங்கள்' என்கிறார் நபிகள் நாயகம். மேலும் முஆது என்னும் தோழரை ஏமன் நாட்டுக்குத் தன் பிரதிநிதியாக அனுப்ப தயாரானார். அப்போது அவரிடம் பிரச்னை ஏதும் வந்தால் எப்படி சமாளிப்பீர்கள் எனக் கேட்டார். அதற்கு முஆது, 'குர்ஆன் விளக்கங்களை நன்கு படித்து தீர்வு காண்பேன்' என்றார். 'அதன் மூலம் தீர்வு கிடைக்காவிட்டால்' எனக் கேட்டதற்கு, 'உங்களின் அறிவுரை, வழிகாட்டுதல் மூலம் பிரச்னையை தீர்ப்பேன்' என்றார் முஆது. 'அதிலும் கிடைக்காவிட்டால்' எனக் கேட்டதும், 'என் அறிவைப் பயன்படுத்தி தீர்வு காண்பேன்' என்றார். உடனே நாயகம், 'நீங்கள் சத்தியத்தின் பாதையில் செல்கிறீர்' என மகிழ்ந்தார். கல்வியின் மேன்மையை உணர்ந்து படிப்பது அவசியம்.